சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அரங்கில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 6ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்றார். மேலும் முன்னாள் நீதியரசர் சந்துரு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் உள்பட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய விஜய், ” மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026 தேர்தலில், மக்களே மைனசாக்கி விடுவார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜய் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர் பாபு பேசினார்.
பின்னர் அளித்த பேட்டியில் “200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும்.
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, தி.மு.க. மீது எப்படியெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்டுகிறதோ, அப்போதெல்லாம் 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் தி.மு.க. தொண்டன் 100 கி.மீ. வேகத்தில் பயணிப்பான். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினை அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.