படம்: முதற்கனல்
நடிப்பு: அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், ராமசாமி, தனுஜா
இலக்கியா, அரி கரன், யோகேஷ்
தயாரிப்பு: ஆர். போத்திராஜ்
இசை: மீரா லால்
ஒளிப்பதிவு: கந்தசாமி கோபால்
இயக்கம்: ஆர் வெங்கட்ரமணன்
பிஆர்ஓ: கே எஸ் கே செல்வாகுமார்
கதை: விடுமுறையில் தனது பழைய நண்பர்களை சந்திக்க மகனுடன் தனது சொந்த கிராமத்துக்கு செல்கிறார் தந்தை. அங்கு தனது பள்ளி தோழியின் வீட்டில் தங்குகிறார். தோழியின் மகன் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறாள் அவனுடன் நட்பு பாராட்டும் ஊரிலிருந்து தந்தையுடன் வந்த சூர்யா (அஸ்வின்) போதைக்கு அடிமையாகிறான். படிப்பில் முதல் மாணவனாக இருந்த சூர்யா முழுக்க முழுக்க போதைக்கு அடிமையாகி வீட்டில் சண்டை போட்டுவிட்டு தனது நண்பனுடன் வெளியூருக்கு ஓடுகிறான். அங்கும் கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக் கொண்டு கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறான் இதன் முடிவு என்னவாகிறது. கொலை வழக்கில் சிக்கிய சூர்யா என்ன கதி ஆகிறான் என்பது கிளைமாக்ஸ்.
போதைக்கு அடிமையான இளைஞர்களை பற்றி குறிப்பாக போதைக்கு அடிமையான மாணவர்களை மையமாக வைத்து இந்த கதையை இயக்கி இருக்கிறார் ஆர் வெங்கட்ரமணன்.
தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான படம் மட்டுமல்ல ஒவ்வொரு பள்ளியிலும் இந்த படத்தை திரையிட்டு காட்டி மாணவர்களுக்கு போதையின் கொடுமை என்னவாக்கும், குடும்பம் என்ன கதிக்கு ஆளாகும் என்ற உண்மையை உணர்த்தும் விதமாக அரசே முன்வந்து இப்படத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் திரையிட்டுக் காட்ட உத்தரவிட வேண்டும் என்பது படம் பார்த்தவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் அஸ்வின், வீட்டுக்கும் பள்ளிக்கும் எவ்வளவு சிறந்த பிள்ளையாகவும் மாணவனாகவும் இருந்தவர் பின்னாளில் போதை, கஞசா போன்றவற்றிற்கு அடிமையாகி கெட்டுசீரழியும் காட்சிகள் ஒவ்வொரு மாணவனுக்கும் படிப்பினை.
படத்தில் சக நண்பர்களாக நடித்திருக்கும் இளைஞர்களும் மற்றும் நடிகர்கள் ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ ஆகியோரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். உண்மையிலேயே போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் திருட்டு முதல் கொலை வரை எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை தத்துரூபமாக நடித்துக் காட்டி இருக்கிறார்கள்.
சூர்யாவின் தாய் தந்தையாக வருபவர்கள் தங்கள் மகன் மீது எவ்வளவு அக்கறை காட்டுவார்களோ அந்தளவுக்கு அக்கறை காட்டுவது போல் உணர்வுபூர்வமாக நடித்திருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது.
இப்படத்தை ஆர். போத்திராஜ் தயாரித்திருக்கிறார். மீரா லால் இசையும், கந்தசாமி கோபால் ஒளிப்பதிவும் ஓகே.
இயக்குனர் ஆர் வெங்கட்ரமணன் கமர்சியல் நோக்கம் இல்லாமல் இளைஞர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கதையை இயக்கியிருப்பது ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.
கிளைமாக்சில் இடம்பெறும் கோர்ட் காட்சியில் இயக்குனரின் வாதங்கள் போதை மருந்துகளை தடுக்காத அரசுகளை சாடுவது பொருத்தம் தான் ஆனால் எந்த அரசு வந்தாலும் இதை தடுக்க முடியாது என்பது போல் தான் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது எண்ண முடிகிறது.
போகிற போக்கை பார்த்தால் டாஸ்மாக் கடையை திறந்தது போல் போதை மருந்து கடைகளகளை திறந்து விடுவார்களோ என்ற பயம் தான் மக்களை ஆட்கொண்டிருக்கிறது.
முதற்கனல் – போதைக்கனல் இளைஞர்களின் வாழ்க்கையை எரிக்கும்.

Review by
K Jayachandhiran
Trending cinemas now.com
