தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்திய துடன் அவருக்கு புகழாஞ்லி செலுத்தி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், நடிகர் கமல்ஹாசன்:
எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின்
மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அனைவரையும் ஒருங்கிணைத்தவர்.
திரைப்பட தயாரிப்பாளர்களை ” முதலாளி” என அன்போடு அழைத்தவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் அன்பு பாராட்டியவர்.
தமிழ் திரை உலகின் நலனுக்காக உழைத்தவர். தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் நலத்திட்டங்கள் வழங்கி மகிழ்ந்தவர்.
அவரது மறைவு பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
இலட்சிய திமுக, தலைவர்,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் கௌரவ ஆலோசகர், (தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் ) டி.ராஜேந்தர் :
மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ( 29.12. 2023) படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து அவரது இறுதி பயணத்தில் பங்கேற்போம்” என்று கூறியுள்ளனர்.
திரைஉலகில் ஒரு நடிகராய் உதயமாகி, புரட்சிகலைஞராய் பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராய் பதவி வகித்து, தேமுதிக தலைவராய் உருவெடுத்து, தமிழக எதிர்கட்சி தலைவராய் கால் பதித்து, தனகென்று ஒரு தனி பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நடிகர் சிவகுமார்:
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையானஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர்..ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததைகோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன்.
தி.நகர் ரோகிணி லாட்ஜில்
உள்ள தன் அறையில்
நண்பர்களை தங்கவிட்டு
படப்பிடிப்பு முடிந்து வந்து
வெராண்டாவில் படுத்துக்கொள் வார். எளிமையானவர், நேர்மையானவர்.
நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர்.
‘சாமந்திப்பூ’ -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். ‘புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்..
கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
அமெரிக்காவிலிருந்து.நடிகர் நெப்போலியன்:
அமெரிக்காவில் இருந்து
ஒர் இரங்கல் செய்தி..!
உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்..!
தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி
கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..!
மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!!
அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐய்காந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!!
இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும்,
நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…!
அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள்,
நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!
கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…!
வாழ்வில் மறக்கமுடியாத
ஒரு நல்ல மனிதர்..!!
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்திற்கும்,
அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும்,
மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும்
எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!!
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!!
தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு;
‘கேப்டன்’ விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மிகப் பெரும் இழப்பு. ஒரு நடிகராக தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த மனிதநேயம் கொண்டவ ராக, தனது உறவுகளான திரைத் துறையினருக்கு சிறப்பான வகையில் உதவி புரிந்தவராக, நல்ல அரசியல்வாதியாக, குடும்ப தலைவனாக, அனைவருக்கும் சிறந்த நண்பராக என எல்லாவகை யிலும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வர். இது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்! ஓய்வெடுங்கள் ‘கேப்டன்’
இயக்குனர் வி செ.குகநாதன்:
தமிழ் சொந்தங்களே……! இரக்க குணம்….உறுதியான மனம்…களங்களைக் கண்டு கலங்காத வீரம்…ஏழைகளுக்கு உதவுகின்ற ஈரநெஞ்சம்…..ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு தேவையான பணிவு துணிவு கனிவு…..இவர் விரல் காட்டும் திசையில் வேங்கை என பாய தயாராக இருந்த லட்சோப லட்சம் தொண்டர்கள்…..மக்களைப் புரிந்து கொண்டு நடக்கும் தலைவனாக…..ஐயோ தமிழர்களே…..அடைய வேண்டிய இடத்தில் கேப்டன் விஜயகாந்த்தை அமர வைக்க தவறிவிட்டீர்களே! காலமகள் கண்ணயர்ந்த நேரத்திலே…..காலம் செய்த கோரக்கொடுமையினாலே…..தமிழக மக்கள்……ஒரு நல்ல முதல்வரை அடையாளம் காட்டத் தவறி விட்டனர்! உண்மைகள் ஊமையாகக் கிடந்த நேரத்திலே….தீமைகள் தீ போல் பரவி….தியாக அரசியல் மரித்து விட…பண அரசியல் பதவிகளை பறித்து விட…..திசை மாறாமலே இருந்திருக்கும் திராவிட அரசியல்…..இந்த மனிதர் மட்டும் அன்று தமிழக முதல்வராக வந்திருந்தால்! நண்பர் கேப்டன் விஜயகாந்த் கருப்பு எம்ஜிஆர் மட்டுமல்ல….திராவிட அரசியலின் ஆதரவாளர்….அதனால் தான் அவரது கட்சியின் பெயர் தேசிய திராவிட முற்போக்கு கழகமானது! அனைவராலும் மதிக்கப்பட்ட மனிதராக…கலை உலகின் கேப்டனாக….கறுப்பு எம்ஜிஆராக….எதிர்க்கட்சி தலைவராக….வாழ்ந்து மறைந்த என் இனிய சகோதரா…..வந்தாய்…வென்றாய்…வாழ்வாய் பல நூறு ஆண்டு இறந்தும் இறவாப்புகழுடன்.
நடிகர் சங்க தலைவர் நாசர்:
செய்தி கேட்டவுடன் உண்மைதானா ? என ஆயிரம் பேரை கேட்டுத் தெரிந்து உறுதிப்படுத்திக் கொண்டபோது சொல்லொண மனத்தளர்வு ஏற்பட்டது. இதுவேதான் கேப்டன் என்ற பெயரை அறிந்தவர்க் கெல்லாம் ஏற்பட்டிருக்கும் முரட்டுத்தனமான நேர்மை எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை, களைப்பில்லா உழைப்பு, தமிழ் திரையுலகத்தின் முக்கியத்தூண் அடையாளமற்று கிடந்த அடையாறு திரைப்படக் கல்லூரியின் இரும்புக் கதவை திறந்து விட்டவர். அதிகமான திரைப்படக் கல்லூரி இயக்குனர்களை அழைத்து வந்தவர். கையொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர். இன்று சீரிய வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டுத் தந்து புதுரத்தம் பாய்ச்சியவர். அவர் அலுவலகம் அட்சய பாத்திரமாய் இருந்தது. அவரால் பசிதீர்ந்த பல்லாயிரம் நல்மனங்கள் இன்று அவரை கண்ணீரோடு நினைவு கூறும். அவர்கள் வேண்டுதல் அவரை இறையின் பக்கம் கொண்டு நிறுத்தும். அரசியல் களம் ஒரு போர்க்களம் என தெரிந்தும் நிராயுதபாணியாய் மக்கள் நலமே தன் பலமென துணிவோடு ஒரே நோக்காய் செயல்பட்டவர். ஏழைகளின் குரலாக, நலிந்தோரின் துணையாக கடைசி மூச்சுவரை ஓங்கி ஒலித்தவர் இன்று நம்மோடு இலையே என்ற உண்மை நற்பகலை காரிருள் கவ்வுகிறது நமக்கே ஆறுதல் வேண்டும் போது ஆறுதலை யாருக்கு அளிக்கமுடியும் அவரின் மறைவுதந்த குடும்பத்தாரின், நண்பர்களின், தொண்டர்களின், தோழர்களின் துக்கத்தோடு தென்னிந்திய நடிகர் சங்கமும் கலந்து மனம் உருகி மரியாதை செலுத்துகிறது.
நடிகர் பவன் கல்யாண் (ஜன சேனா):
திரு. விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.
குடும்பக் கதைகளுடன், சமூகக் அக்கறை கொண்ட ஆக்ஷன் படங்களிலும் நடித்துள்ளார். 2005-ல் திரு. விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன்.
திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது.
சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.
கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் திரு விஜயகாந்த் அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தில் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார். அனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.
திரு. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்.
உழைப்பு, தன்னம்பிக்கை வெற்றி என எல்லா நேர்மறை எண்ணங்களுக்கும் முன்னுதாரணம் என்று சொன்னால் நமது கேப்டனை சொல்லலாம்.
தன்னை வெற்றி கொள்வதைப் போல வேறு வெற்றி எதுவும் இல்லை. தன்னை வெற்றிகொண்டு, பின் சுற்றம் அரசியல் எனப் பெரும் வலம் வந்த மனிதன் நல்ல முன்னுதாரணம்தான்.
இன்று அவரை இழந்துவிட்டோம் என்பது பெரிய இழப்பாகும்.
நிறைய நல்லுதவிகள்.. நிறைய முயற்சிகள் …என ஒரு படிப்பினையாய் முன் நின்ற மகனை இழந்துவிட்டோம்.
அவர் இங்கு காட்டிய மனிதநேயத்திற்கு நன்றி சொல்வதைவிட சிறப்பான அஞ்சலி வேறெதுவும் இருக்க இயலாது.
நன்றி மனிதநேயனே…
மனித நேய மிக்க கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்கள் அஞ்சலிகள்.
இயக்குநர் எஸ்..ஏ. சந்திரசேகர் இரங்கல்:
எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி ,கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் . அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை .
அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்.
திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது.இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை.
அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’.

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி :
‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தி என் மனதை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அவரின் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே மாபெரும் இழப்பு.
தான் முன்னெடுத்த எல்லா செயல்களிலும் / பொறுப்புகளையும் சிரமேற்கொண்டு வென்று காட்டியதில் ‘கேப்டனுக்கு’ நிகர் உண்டோ என்றே எண்ண தோன்றுகிறது.
நடிப்பு என்பதைத் தாண்டி சக நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள், நடிகர் சங்கம் உள்ளிட்ட அனைவரது முன்னேற்றத்திலுமே கேப்டனின் பங்கு அளப்பரியது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை, கடனில் இருந்து மீட்டெடுத்த இமாலய சாதனை ‘கேப்டன்’ அவர்களையே சாரும்.
அவரைப்பற்றி, உயர்ந்த, நல்ல சொற்களை மட்டுமே எவரும் மொழிந்து கேட்க முடியும். வெற்றிகளையும் புகழ் வார்த்தைகளையும் எப்போதும் பொருட்படுத்தாது எல்லாரையும் சமமாக பாவித்து, சிறந்த பண்பாளராக திகழ்ந்த ‘கேப்டன்’ அவர்களை நினையும் போது மிகப்பெரிய பெருமிதம் மட்டுமே இதயத்தில் நிற்கிறது.
வெள்ளி விழா கதாநாயகனாக, உணவளிப்பதில் வள்ளலாக, நடிகர் சங்க தலைவராக, வெளிப்படையான அரசியல் தலைவராக, நல்லுள்ளம் படைத்த சிறந்த மனிதராக, நாடி வரும் அனைவருக்கும் பெரிய மனம் படைத்த ஒரு அண்ணனாக, தலைமை பண்போடு வாழ்ந்து காட்டிய ‘கேப்டன்’ அவர்களின் வாழ்க்கை, நம் எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணம்.
‘கேப்டன்’ அவர்கள் மறைந்த இந்த தருணத்தில் முன்னின்று செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தும், நான் வெளிநாட்டில் இருப்பதினால், அவரின் மறைவுக்கு உடனே நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை , என்னை மிகவும் மனம் வருந்தச்செய்கிறது.
கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சங்கத்திற்காகப் பல நல்ல முன்னெடுப்பைச் செய்த அவரது மறைவு, நடிகர் சங்கத்திற்கும் தனித்த பேரிழப்பாகும்.
இயக்குனர் லிங்குசாமி:
சினிமா, அரசியல் இரண்டிலும் இரு துருவங்களை எதிர்கொண்ட
ஆச்சர்யம் நீ.
நீ இன்ஸ்டியூட்டில் பயிலவில்லை.. இன்ஸ்டியூட்டில் பயின்ற பலரை இயக்குநராக்கியிருக்கிறாய்..
மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ
எதிரே நிற்பவர் பசி அறிந்தவன் நீ. இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுத்தாய். அதனாலேயே பல இதயங்களை வென்றாய்.
போய் வாருங்கள் கேப்டன்.
கவிஞர் அருண்பாரதி:
அஞ்சலி கவிதை
——————————-
மதுரை மாகாளிபட்டியிலிருந்து
மாநகரம் சென்னைக்கு வந்த
கருப்பு சூரியன்
அரசியலில் ஆளுமைமிக்க தலைவர்கள்
இருக்கும் போதே களத்தில் குதித்த
நெருப்பு சூரியன்
சினிமாவில்
அரசியல் செய்யத் தெரியாதவர்
அரசியலில்
சினிமாபோல நடிக்கத் தெரியாதவர்
கதாநாயகனாக தோன்றிய
முதல் படம் மட்டுமல்ல
இருட்டிலிருந்த பலரை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில்
இவர் ஓர் அகல்விளக்கு
வெளிச்சம் குறையாத பகல்விளக்கு
தவிக்கும் நெஞ்சங்களின் தவிப்பறிந்து
தர்மங்கள் செய்ததால்
இவர் ஏழை ஜாதி
அரிசி ஆலையில்
பணியாற்றியதாலோ என்னவோ
பலரின் பசியறிந்து பசிதீர்த்த
பாமர ஜோதி
புரட்சிக் கருத்துகளை
திரையில் விதைத்த
புரட்சித் தலைவரின்
இரண்டாம் பாதி
முத்தமிழ் அறிஞர்
கலைஞரை நேசித்து
அன்பு பாராட்டியதில்
இவர் நெஞ்சுக்கு நீதி
விஜயகாந்த் – இது
கடவுள் கொடுத்த கொடைக்கு
காலம் வைத்த பேரு
கோடான கோடி மக்களின்
நினைவுப் புத்தகத்தில்
இவர் எப்போதும்
நிரந்தர வரலாறு
ரஜினிகாந்த்:
கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு நாகர்கோவிலில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் படப்பிடிப்பு நிறுத்திவிட்டு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
