Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர், முதல்வர் தலைவர்கள் இரங்கல்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்ற 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது . ஒரு வாரம் சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்பினார் . இந்நிலையில் நேற்று விஜயகாந்துக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது . அவருக்கு மூச்சு திணறல் இருந்த காரணத்தால் உடனடியாக செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அவருக்கு சளி இருமல் தொந்தரவு இருந்ததால் உடனடியாக கொரோனா பரிசோதனையை டாக்டர்கள் அவருக்கு மேற்கொண்டனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மரன் அடைந்த தகவலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அவருக்கு 71 வயது.
இதையடுத்து விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் வேனில் வைத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஆயிர கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்த நிலையில் விஜயகாந்த் உடலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்க எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் வரிசையில் நின்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்

பிரதமர் நரேந்திர மோடி விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர்   கூறியதாவது:

விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பு கோடி கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர். ஒரு அரசியல் தலைவராக தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொதுச் சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராக விஜய்காந்த் இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூறுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் .

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம் பி

தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் வெளியிடுள்ள இரங்கல் அறிக்கை:

அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர், நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது. நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில், கலைஞர் எழுதிய பாடல் காட்சியில் நானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்கிறது. அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் அரசியல்  கட்சி தலைவர்கள் வெளீட்டுள்ள இரங்கல் செய்திகள் வருமாறு:\

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும்  தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய  பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ::

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும்  தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய  பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமத்துவ  மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:

அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.  அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்:

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன்.

நல்ல திரைப்படக்கலைஞர்….
நல்ல அரசியல் தலைவர்….
நல்ல மனிதர்….
நல்ல சகோதரர்….
ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை :

தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர். தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

டிடிவி.தினகரன் இரங்கல்:

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும். தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங் களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

Related posts

சரண்ராஜ் இயக்க மகன் தேவ் நடிக்கும் “குப்பன்”

Jai Chandran

எக்ஸ்ட்ரீம் (பட விமர்சனம்)

Jai Chandran

Veeramae Vaagai Soodum enters IMDb trending at No.1

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend