படம்: தீனி
நடிப்பு: அசோக்செல்வன், தாரா, நித்யா மேனன், நாசர், சத்யா, டெம் க்ளோக், கேவிம் மக்ராத், கேதர் ஷ்ங்கர், பிரம்மாஜி
தயாரிப்பு: பி.வி.எஸ்.என் பிரசாத்
இசை: ராஜேஷ் முருகேசன்
ஒளிப்பதிவு: திவகர்மணி தேவாம்சம்
இயக்கம்: அனில் ஐ.வி.சசி
ஐதாராபாத்தில் பிறந்த அசோக் செல்வன் ஷெஃப் ஆக வேலை பார்க்க லண்டன் வருகிறார். நாசர் தலைமை ஷெஃப் ஆக இருக்கும் ரெஸ்டாரண்ட்டில் வேலைக்கு சேர்கிறார். அடிக்கடி அவருக்கு உடல் நடுக்கம் வருகிறது. கேட்டால் தனக்கு தசை அதிர்வு பிரச்னை இருப்பதாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் சிறுவயதிலிருந்து தன்னுடன் உண்டு உறங்கி பழகி காதலித்த நித்யா மேனன் விபத்தில் இறந்து ஆவி ஆன பிறகும் அசோக் செல்வனையே சுற்றி வருவது தெரிகிறது. இந்த உண்மையை உடன் வேலை பார்க்கும் தாராவிடம் சொல்கிறார். அசோக் செல்வன் மீது தாராவுக்கு காதல் வருகிறது. ஆவியாக இருக்கும் நித்யா மேனனிடம் பேசும் தாரா நீ எப்படி கவனித்துக்கொண்டாயோ அதேபோல் நான் அசோக் செல்வனை கவனித்துக்கொள்வேன் என்று உறுதி கொடுக்கிறார். அதைக்கேட்டு நித்யா மேனன் என்ன செய்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
ஐதராபாத், லண்டன் என இரண்டு இடங்களில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. பெருத்த வயிறு, குண்டு தோற்றத்துடன் வித்தியாமாக வருகிறார் அசோக் செல்வன். ரெஸ்டாரண்ட்டில் பாரம்பரிய சமையல் செய்து நாசர் மனதில் இடம் பிடிக்கிறார். சமையல் அறை, உணவு சர்வீஸ் என்று காட்சிகள் நகர்கின்றன். இதற்கிடையில் அசோக் செல்வன் போலவே நாசருக்கும் ஒரு குட்டி கதையை வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஃப்ரீஸரில் சிக்கிக் கொள்ளும் அசோக் செல்வன், தாரா குளிரில் நடுங்குவதும் ஒரு கட்டத்தில் தாரா தாங்கமுடியாமல் விழுந்துவிட அவரை அலெக்காக தூக்கி வந்து வெளியில் கிடத்தி சிகிச்சை அளித்து மிளகு கஷாயம் கொடுத்து தேற்றுவதும் திருப்பமான காட்சியாக அமைகிறது, அதன்பிறகுதான் அசோக் செல்வன் நித்யா மேனன் பிளாஷ்பேக் காட்சி சிறகு விரிக்கிறது. இருவரின் நெருக்கமான நட்பு சிறுவயதுமுதல் பெரியவர்கள் ஆன பிறகும் ஒரே கட்டிலில் கட்டிப்பிடித்து தூங்குவது வரை தொடர்கிறது.
நித்யா மேனன் சுட்டித்தனமான சேட்டைகளில் ரசிக்க வைக்கிறார். விபத்தில் இறந்த பிறகும் ஆவியாகி அசோக் செல்வனை விடாமல் தொடர்வது காதலின் பிணைப்பு. தாரா அமைதியான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். பெரிய குழப்பங்கள், பரபரப்பு இல்லாமல் எல்லா விஷமும் சுபமாக முடிகிறது.
ஐதாராபாத், லண்டன் காட்சிகளை திவாகர் மணி தேவாம்சம் ரம்யமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ராஜேஷ் முருகேசன் இசை இதமாக ஒலிக்கிறது. பேய் கதையாக இருந்தாலும் திகில் கிளப்பாமல் அழகான ஒரு காதல் கதையை தந்திருக்கிறார் இயக்குனர் அனில் ஐ வி சசி.
தீனி- மென்மையான காதல்.