படம்: குடும்பஸ்தன்
நடிப்பு: மணிகண்டன், சான்வி மேக்னா, ஆர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், குடசநாடு கனகம், நிவேதிதா ராஜப்பன், ஷான்விகா ஸ்ரீ,, முத்தமிழன், பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர்
தயாரிப்பு: எஸ் வினோத்குமார்
கதை – திரைக்கதை: பிரசன்னா பாலச்சந்திரன்
ராஜேஷ்வர் காளிசாமி
இசை: வைசாக்
ஒளிப்பதிவு: சுஜித் என் சுப்ரமணியம்
இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்
மணிகண்டன் கலப்புத் திருமணம் செய்து கொண்டாலும் தனது தந்தை, தாயுடன் வசிக்கிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஒரு பிரஸ்ஸில் வேலை செய்கிறார். திடீரென்று அந்த வேலை பறிபோவதால் குடும்ப செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பலரிடம் கடன் வாங்குகிறார். ஆனால் வேலை பறிபோனதை வீட்டிலும் சொல்லாமல் உறவினரிடம் சொல்லாமல் மறைத்து கடன் வாங்கி குடும்பம் நடத்துவதால் பல்வேறு சிக்கலில் சிக்குகிறார் அதிலிருந்து அவர் மீள்கிறாரா? இல்லை கடனிலியே மூழ்கி போகிறாரா என்பதற்கு குடும்ப உணர்வு கலந்து பதில் சொல்கிறது படம்.
விரலுக்கேத்த வீக்கம் என்பது போல் கதைக்கு ஏற்ற வகையில் கதாபாத்திரங்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்த வேண்டும் என்று கதை எழுதினால் கூப்பிடு மணிகண்டனை என்ற அளவுக்கு அவரது கடந்த கால பட கதாபாத்திரங்களும் அமைந்திருந்தன இந்த படத்திலும் அதையேத் தான் செய்திருக்கிறார்.
நண்பனுக்காக முதலாளியை பகைத்துக் கொண்டு வேலையை துறக்கும் மணிகண்டன் அதன் பிறகு வேலை தேடி அலைவதெல்லாம் கொஞ்சம் ஓவர். டிசைனிங் போன்ற டெக்னிக்கலான படிப்பு படிச்சிருந்தும் சிட்டியில் வேலை கிடைக்கவில்லை என்பதெல்லாம் ஏற்க முடியவில்லை.
சிட்டியில் எங்கு திரும்பினாலும் டிசைனிங் சென்டர், கம்ப்யூட்டர் சென்டர் என்று கண்ணுக்கு தெரிகிறது பாலாஜி சக்திவேலின் நிறுவனத்தை விட்டால் வேறு நிறுவனமே இல்லாதது போல் மணிகண்டன் வேலை தேடி அலைவது, எந்த வேலையும் கிடைக்காமல் பார்க்கில் பொழுதை கழிப்பது, கடன் வாங்கி குடும்பம் நடத்துவதெல்லாம் 90ஸ் கிட்ஸ்கள் செய்யும் வேலையில்லை 2k கிட்ஸ்கள் செய்யும் வேலை.
கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த நடிப்பை வழங்க மணிகண்டன் தவறவில்லை. ஆனால் எல்லா படங்களிலும் ஒரே சாயலில் நடிப்பு இருப்பதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது.
தன்மானத்தோடு நிமிர்ந்து நின்று வேலை பார்ப்பேன் யாரிடமும் கும்பிடு போட்டு தன்மானத்தை விட்டு வேலை பார்க்க மாட்டேன் என்று சொல்லும் மணிகண்டன் கடைசியில் தன்னுடைய பாலிசியை மறந்து விட்டு பழைய வேலையிலேயே சேர்வது அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யவில்லை.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் என்றால் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டடுக் கொண்டிருக்க வேண்டும் என்பது போலவே கிளைமாக்ஸ் முடித்திருப்பது ஏதோ ஒரு காம்ப்ரமைஸ் போலத்தான் தெரிகிறது.
குரு சோமசுந்தரம் நக்கல் சிரிப்பு சிரித்துக்கொண்டு தனது மச்சான் மணிகண்டனை ஓட ஓட அவமானப்படுத்துவது வில்லத்தனம். கடைசியில் அவருக்கே ஆப்பு வைப்பது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை காட்டுகிறது.
சான்வி மேக்னா குடும்ப பாங்காக நடித்திருக்கிறார். மாமியாரிடம் கோபித்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே எதார்த்தம்.
காமெடி டிராக் வைக்கிறேன் என்ற பெயரில் குடித்துவிட்டு கூத்தடிக்கும் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் ஆகியோரின் காமெடி வெறும் வறட்டு இருமல்.. வேறு காமெடி தோன்றவில்லையா .. குறிப்பாக ஜென்சனுக்கு குடிகார வேடமே டிரேட் மார்க் ஆகிவிட்டது.
எஸ் வினோத்குமார் தயாரித்திருக்கிறார்
கதை – திரைக்கதை: பிரசன்னா பாலச்சந்திரன்
ராஜேஷ்வர் காளிசாமி எழுதியுள்ளனர்.
வைசாக் இசையும்
சுஜித் என் சுப்ரமணியம் ஒளிப்பதிவும் எளிமை.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி நடுத்தர குடும்பத்தின் கஷ்டங்களை கண் முன் நிறுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ்சிலும் சராசரி வாழ்க்கையாகவே முடித்திருப்பது ஏமாற்றம்.
குடும்பஸ்தன் – கஷ்டப்படுபவன்.