படம்:
குழந்தைகள் முன்னேற்ற கழகம்
நடிப்பு: யோகி பாபு, செந்தில், இமயவர்மன், அத்வைத் ஜெய் , மஸ்தான், ஹாரிகா, பவாஸ்
தயாரிப்பு: அருண்குமார் சம்பந்தம், சங்கர் தயாள் என்
இசை: சாதக பறவைகள் சங்கர்
ஒளிப்பதிவு: ஜே. லக்ஷ்மன்
இயக்கம்: சங்கர் தயாள் என்
பி ஆர் ஓ: சதீஷ் (AIM)
அரசியல்வாதி யோகி பாபுக்கு பெரிய வீடு சின்ன வீடு என இரண்டு குடும்பம். பெரிய வீட்டுப் பையனும் சின்னவீட்டுப் பையனும் தந்தையைப் போல அரசியலில் குதிக்க எண்ணுகின்றனர். அதற்காக பள்ளிக்கூடத்தில் இருந்து தங்கள் அரசியலை நடத்துகிறார்கள். அவனை இவன் அடிமையாக்க வேண்டும் இவனை அவன் அடிமையாக்க வேண்டும் என்று எண்ணி போட்டியில் ஈடுபடுகின்றனர். கடைசியில் ஒருவர் முதல்வராகிறார் இன்னொருவர் பிரதமர் ஆகிறார்.
என்ன? முதல்வர், பிரதமர் ஆகிறார்களா என்றெல்லாம் கேட்காதீர்கள்…. அதுதான் கதை. குழந்தைகள் சிறுவர்கள் படம் என்பதால் குழந்தைத்தனமாகவும், சிறு பிள்ளைத்தனமாகவும சொல்லி இருக்கிறார்கள்.
யோகி பாபு அரசியல்வாதியாக இருந்து கொண்டு நய்யாண்டி அரசியல் செய்கிறார். அவருக்கு போட்டி அரசியல்வாதியாக சுப்பு பஞ்சு நடித்திருக்கிறார். இவர்கள் போட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, யோகிபாபுவின் பெரிய வீடு சின்ன வீடு பிள்ளைகள் இமயவர்மன், அதவைத் ஜெய் இன்னொரு பக்கம் அரசியல் லூட்டி அடிக்கிறார்கள்.
நட்போடு இருப்பது போலவே பழகிக்கொண்டு ஒருவர் காலை ஒருவர் வாரும் செயலில் ஈடுபடும் இமயவர்மன், அத்வைத் தங்களது போட்டி நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். இமயவர்மன் ஹீரோ என்பதால் ஸ்டன்ட் காட்சிகள் கூட நடித்திருக்கிறார்.
பிரதமர் பதவியும், முதல்வர் பதவியும் இவ்வளவு சல்லிசாக கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானாலும் முதல்வர், பிரதமர் ஆகிவிடலாம். லாஜிக் எதுவும் இல்லாமல் வெறும் மேஜிக்காக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
கதாநாயகி ஹாரிகா மலராத மொட்டாக அழகில் மிளிர்கிறார். நடிப்பிலும் பாஸ் ஆகிறார். இந்த கதாபாத்திரத்தை வைத்து இயக்குனர் ஏதோ பாசிச பாலிடிக்ஸ் செய்திருப்பது லேசாக வெளிப்படுகிறது.
சாதக பறவைகள் சங்கர் இசை அமைத்திருக்கிறார். பாடல்கள் சோடை இல்லை.
ஜெ லட்சுமன் ஒளிப்பதிவும் பளிச்சிடுகிறது.
அருண்குமார் சம்பந்தம், சங்கர் தயாள் என் தயாரித்திருக்கிறார்கள்.
பள்ளியில் அரசியல் பாடம் கட்டாயமாக வைக்க வேண்டும் என்ற ஒரு வசனம் தேவைதான் ஆனால் பள்ளியில் மாணவர்கள் செய்யும் அரசியலை இன்னும் கூட சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம்.
குழந்தைகள் முன்னேற்ற கழகம் – ஓவர் டோஸ்
