படம்:களத்தில் சந்திப்போம்
நடிப்பு: ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ராதா ரவி, ரோபோ சங்கர், இளவரசு, பால சரவணன், ரேணுகா, வேல ராமமூர்த்தி
இசை: யுவன்சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்
தயாரிப்பு: சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி (90வது படம்)
இயக்கம்: ராஜசேகர்
ஆக்ஷன் சென்டிமெண்ட், காதல், கலகலப்பு, நட்பு என எல்லாம் கலந்த ஒரு படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட் டது. அந்த குறையை தீர்த்தி ருக்கிறது களத்தில் சந்திப் போம் திரைப்படம்.
ஜீவா, அருள்நிதி இருவரும் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள். ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் எதிர் எதிராக நிற்பார்கள். கபடி போட்டி யிலும் இருவரும் எதிரெதிர் அணிதான். திருமணம் ஆகாமல் சுற்றி வரும் இருவரையும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி குடும்பத்தில் வற்புறுத்துகின் றனர். ஜீவாவுக்கு எந்த பெண்ணும் செட்டாக வில்லை. அருள்நிதிக்கு மாமன் பெண் மஞ்சிமா மோகன் இருக்கிறார். அருள் நிதிக்காக பெண் பார்க்கச் செல்கிறார் ஜீவா. பெண் பிடித்தாலும் அந்த வீட்டு மூத்த மருமகன் தடை போடு கிறார். என்றைக்கோ ஜீவா நன்பர் அருள்நிதி பற்றி ஜாலியாக ப்ராடு அப்படி இப்படி என்று பேசியதை கேட்டிருந்த மூத்த மருமகன் எல்லாவற்றையும் சம்பந்தம் பேசும் இடத்தில் போட்டு உடைக்கிறார். நிச்சயதார்த்தம் நின்று போகிறது. ஆனாலும் மஞ்சிமாமவை அருள்நிதி யுடன் சேர்த்து வைக்க அவர் தந்ததுபோல் கிஃப்ட் கொடுத்தும், பேனர் வைத்தும் கவிதை எழுதியும் மஞ்சுமா மனதை மாற்றுகிறார் ஜீவா. அவரும் அருள்நிதி காதலை ஏற்க சம்மதிக்கிறார். தனக்கு வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தை மறுத்துவிட்டு அருள்நிதியை மணக்க கோவிலுக்கு வருகிறார். ஆனால் அருள்நிதி அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மறுப்பது ஏன்? மஞ்சிமா நிலை என்ன? ஜீவா என்ன செய்கிறார் என்பது கிளை மாக்ஸ்.
களத்தில் சந்திபோம் என்ற டைட்டிலை கேட்டவுடன் ஏதோ அரசியல் கதை என்று எண்ணி அரங்கிற்குள் சென்றால் முழுக்க குடும்பம், காதல் என்று களமே மாறிக் கிடக்கிறது. ஆனால் அறுசுவைக்கு பஞ்சமில்லை. கபடி காட்சியுடன் ஜீவா, அருள்நிதி என்ட்ரி தந்து ஆரம்பத்திலேயே சுறுசுறுப்பை ஏற்றிவிடுகின் றனர். நண்பர்களாக இருந் தாலும் விட்டுக்கொடுக்காமல் ஆடி தங்களின் கேரக்டர்களின் தன்மையை உணர்த்துகின் றனர்.
கடன் திருப்பி கேட்க சென்ற இடத்திலிருந்து புல்லட் வண்டியை ஜீவா எடுத்து வந்துவிட அவரை தாக்குவதற் காக அடியாட்கள் வருவதும் அவர்களிடம் சமாதானம் பேசும் அருள்நிதி திடீரென்று தப்பாக பேசும் ரவுடியை அடித்து பறக்க விடுவது அனல் தெறிக்கிறது. ஜீவா கையை கட்டிக்கொண்டு சண்டையை வேடிக்கை பார்க்கிறார். ஜீவாவுக்கு ஆக்ஷன் காட்சி கிடையாதா என்று பார்த்தால் இடைவேளைக்கு பிறகு அவர் சண்டை காட்சியில் பின்னி பெடலெடுக்கிறார்.
மஞ்சிமா மோகனை மணக் கோலத்தில் திருமண வீட்டிலி ருந்து ஜீவா அழைத்துவர அவரை துரத்திக்கொண்டு ரவுடி கூட்டம் வாகனங்களில் துரத்துவது செம சேஸிங் காட்சி.
இரண்டு முறை தனது திருமணம் நின்றுபோக காரண மாக இருந்த ஜீவாவை பார்த்து நீயே என்னை காதலி. கல்யாணம் பண்ணிக்க என்று பிளேட்டை திருப்பி போடுவது டிவிஸ்ட். அவரை பார்த்ததும் நழுவிச் செல்லும் ஜீவா ஒரு கட்டத்தில் அவரது காதலை ஏற்றுக்கொண்டதும் அதற்கு அருள்நிதி எதிர்ப்பு தெரிவித்து ஜீவாவை விலக சொல்வது மற்றொரு டிவிஸ்ட். மஞ்சுமாவுக்கு மீண்டும் கல்யாண ஏற்பாடு நடக்க அதை தடுத்து நான் தாலி கட்டுவேன் என்று ஜீவா சவால் விடுவதும், உன்னால் அது முடியாது அந்த திருமணத்தை நான் நடத்தி காட்டுவேன் என்று அருள்நிதி எதிர்சவால் விடுவதும் கிளைமாக்ஸுக்கு தூபம் போடுகிறது. தனி ஆளாக திருமண மண்டபத்துக்கு ஜீவா வர அவரை ரவுடிகள் சூழ்ந்து கொண்டு தாக்க முயலும் போது அருள்நிதி கொடுக்கும் மற்றொரு டிவிஸ்ட் அப்ளாஸ் பெறுகிறது.
பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் இருவரும் அடக்க ஒடுக்கமாக இயக்குனர் சொல்வதை செய்துவிட்டு செல்கிறார்கள். ரோபோ சங்கர், பாலா சரவணன் காமெடி பஞ்ச்கள் வீசி கலகலக்க வைக்கின்றனர். அப்பச்சி என்ற பைனான்ஸ் அதிபராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்திருக்கிறார் ராதாரவி. ஆடுகளம் நரேன், மாரிமுத்து, இளவரசு, வேல ராமமூர்த்தி, ரேணுகா என எல்லா பாத்திரங்களும் கச்சிதமாக நடித்து காட்சிக்கு துணை நின்றிருக்கின்றனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் எப்போதும் குடும்ப படங் களுக்கு முக்கியத்துவம் தரும் அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் இனிமை. அபிநந்தன் ராமானுஜம் கேமரா ஆக்ஷனையும் சென்டிமெண்ட்டையும் சிந்தாமல் சிதறாமல் படமாக்கி உள்ளது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டரின் ஆக்ஷன் காட்சிகள் பலம் சேர்க்கிறது. எல்லாவற்றையும் இணைத்து காட்சிகளில் தொய்வே இல்லாமல் விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.
களத்தில் சந்திப்போம்- வலுவாக நட்பை பாராட்ட மீண்டுமொரு படம்.