Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது: வி.செ.குகநாதன்

இயக்குனர் வி.செ.குகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மிகவும் தனித்தன்மை வாய்ந்த, சற்றும் எதிர்பார்க்க முடியாத,
சரித்திரங்கள் பல படைத்த திராவிட தமிழின தலைவர்கள் வரலாற்றில், மாண்புமிகு தமிழக முதல்வர் தம்பி ஸ்டாலின் அவர்கள் இன்று ஆற்றி வரும் கடமைகளை,
அவைகளை கையாளுகிற லாவகத்தை,
காட்டுகின்ற வீரத்தை, அத்தோடு கலந்து வருகின்ற விவேகத்தை, தமிழர்கள் மட்டுமல்ல, அயலார் மட்டுமல்ல, இந்திய மாநிலங்கள் மட்டுமல்ல, பல உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இது என்ன எரிமலையா? தமிழகத்தையும் அதன் மக்களையும் காப்பாற்றுவதற்காக போடப்பட்ட உயர் மின்னழுத்த
மின்சார வேலியா?

முகத்தில் சாந்தம்.
எடுக்கும் முடிவுகளிலும் அவற்றை செயல்படுத்துவதிலும் தொட்டாலும் சுடும், பட்டாலும் சுடுமே நெருப்பு !
அதைப்போன்ற அணுகுமுறை.

அதை ஏற்க மறுக்கும் ஏகாதிபத்தியம் அவரை நெருங்க அஞ்சுகிறது.
அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பதறுகிறது. அனைவரையும் பணிய வைத்து பழகிய ஒன்றிய அரசு,
யார் இவர் ?
சந்திரகுப்தரின் வாரிசா? சுபாஷ் சந்திர போஸின் மறுபிறப்பா ?
புரியாமல் தடுமாறுகிறார்கள்.

என் பாசத்துக்குரிய தமிழர்களே! என்னருமை இந்தியர்களே! இரவிலே நாம் பெற்ற சுதந்திரத்தை, இரவிலேயே புதிய சட்டங்களை இயற்றி அதையெல்லாம் நடைமுறைப்படுத்தி ஐம்பத்தி ஆறு ராஜ்யங்களை இணைத்து ஏக இந்தியாவை உருவாக்கிய சர்தார் வல்லபாய் படேலின் செயலுக்கு எதிர்மாறாக 56 கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட இன்றைய ஒன்றிய அரசு வேகம் காட்டுகிறது.

அதற்கான பணிகள்தான் பணமதிப்பிழப்பு, மூன்று விவசாய சட்டங்கள், நீட் எக்ஸாம், புதுப்புது கல்வி முறைகள், ஒரே ரேஷன் கார்டு, ஒரே நேரத்தில் ஒன்றிய மாநில அரசுகளுக்கான தேர்தல்கள், வங்கிகளின் ஒருங்கிணைப்பு, குடியுரிமை சட்டத் திருத்தங்கள், இப்படி பல விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

காவியும் கடவுளும் புனிதமானவை., அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் இவர்கள் கொண்டுவந்த சட்டங்களுக்கும் காவிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை. கார்ப்பரேட் கனவான்கள், இந்தியாவின் மூன்று சதவிகிதம் கொண்ட குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் சம்பந்தம் கொண்டவைதான் இவை.

இந்தியாவின் தேசிய கீதத்தை எண்ணிப்பாருங்கள் மக்களே ! அதில் ஒரே இந்தியா என்று பாடப்படவில்லை. பல மாநிலங்களைச் சொல்லி அத்தனையையும் இணைந்த பாரதம் என்று சொல்லப்படுகிறது.
அதில் அந்த மூன்று சதவிகிதம் பற்றிய எந்த குறிப்பும் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

நாட்டினுடைய பாதுகாப்பு, பணப்பரிவர்த்தனை, நதிநீர் பங்கீடு போன்ற வெகு சில கடமைகள்தான் ஒன்றிய அரசின் பணியாகும்.
ஏனைய அனைத்தும் அந்தந்த மாநில அரசின் கடமைகள். இதனை இந்திய மக்கள் கண்டிப்பாக உணர வேண்டும். நம் உரிமைகளை காக்க அனைத்து மக்களும் இந்தியராக மட்டுமே எழ வேண்டும். இணைய வேண்டும்.

மாநிலங்களுக்கு சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை முழக்கம் நாடெங்கும் ஒலிக்க வேண்டும்.
எப்படி வந்தேமாதரம் ஒலிக்கிறதோ, அதைப்போல மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கம் ஒலிக்க வேண்டும். அந்த ஓசை ஒன்றிய அரசின் காதுகளுக்கு எட்ட வேண்டும்.

தமிழக முதல்வரின் கரங்களை தமிழர்கள் மட்டுமல்ல, அத்தனை இந்தியர்களும் ஒன்றிணைந்து வலுப்படுத்த வேண்டிய நேரம் இது.

இது சாத்தியமா முடியுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் இங்கே இடமே இல்லை.

நினைத்துப்பாருங்கள். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை, டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தை நினைத்துப் பாருங்கள்.
அந்த வெற்றிகளை எண்ணிப்பாருங்கள்.

தமிழக முதல்வரின் கரங்களை இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்தினால், மாநில சுயாட்சி மட்டுமல்ல, சமூக நீதி அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வரும். அதை நிச்சயமாக நீங்கள் நம்பலாம்.

மதவாதிகளாலும், மொழி வெறியர்களாலும், கார்ப்பரேட்டுகளாலும் ஆளப்படுவதற்காகவா நமது தேசப்பிதாவும் பல்லாயிரக்கணக்கான மக்களும் தியாகங்கள் செய்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்கள் ?

ஒட்டுமொத்த மக்களின் சுபிட்சமான வாழ்வுக்காக பிரிந்தவர்கள் சேரலாம். சில கொள்கைகளை விட்டுக் கொடுக்கலாம்.

மக்களுக்காகவே அரசியலே தவிர, அரசியலுக்காக மக்கள் அல்ல, உணர்ந்து கொள்ளுங்கள் இந்திய மக்களே !

ஒன்றுபட்டு எழுவீர்கள் ! உறுதியோடு பலப்படுத்துங்கள் நமது மாநில முதல்வரின் கரங்களை!
வாழ்க பாரதம் !
வாழ்க தமிழகம் !
வெல்க ஜனநாயகம்..!

வி.செ.குகநாதன்…

 

Related posts

வ.கெளதமன் இயக்கத்தில் மாவீரா தொடக்கம்

Jai Chandran

4 இயக்குனர்களின் ’குட்டி ஸ்டோரி’ காதலர் தினத்தில் வெளியீடு

Jai Chandran

பாபா பிளாக் ஷீப் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend