படம்: டெலிவரி பாய்
நடிப்பு: லியோ சிவகுமார், துஷ்யந்த், ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, உதயா தீப், பேபி அஞ்சலி, உதயா, விஷால் விஷால், போஸ் வெங்கட்
தயாரிப்பு:
லெனின் மாதேஸ்வரன், அமுதா லியோனி
இசை: கே எஸ் சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு : அசோக் குமார் ராஜ், பிரசன்னா எஸ் குமார்
இயக்கம்: நானி
பிஆர்ஓ : AIM சதீஷ்
கதை: இட்லி சுட்டு விற்கும் தாய் (ராதிகா) மகன் சிவா ( லியோ சிவகுமார் ) டெலிவரி பாய் வேலை செய்கிறார். தன் தாயின் ஆபரேஷனுக்காக ஒருவரிடமிருந்து சிவா பணத்தை அபகரிக்கிறார். பின்னாளில் அந்த பணத்தை அந்த நபரிடம் கொடுக்க சொல்லும்போது அவரை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்கிறது. அந்த காட்சியை கண்ட சிவா தன் தாயின் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு இப்படி ஒரு நிலையா என்று மனம் வருந்தி அவருக்கு உதவ முன்வருகிறார். அது பெரும் சிக்கலில் சென்று முடிகிறது. காசுக்காக கொலை செய்யும் கூலிப்படைகளின் கூட்டத்தில் சிவா சிக்கிக் கொள்கிறார். இந்த ஆபத்திலிருந்து சிவா மற்றும், அவருக்கு பணம் உதவிய நபர் உயிர் பிடித்தார்களா என்பதற்கு ஆக்ரோஷ பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
டைட்டில் டெலிவரி பாய் என்றிருந்தாலும் காலத்தில் உதவி செய்த நட்புக்காக உயிரை கொடுக்கும் நண்பர்களின் கதை எனலாம். லியோ சிவகுமார் ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் ஒரு அடித்தளமாக அமைந்ததே தவிர அவரை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்தி இருப்பது டெலிவரி பாய் படம் தான்.
தொடக்க காட்சிகளில் இட்லி சுட்டு விற்கும் தாய் ராதிகாவின் மகனாக உணவு டெலிவரி செய்யும் சிவா அக்கம் பக்கத்துப் பெண் பிரிகிடா மீது காதல் கொள்வதும் அவரிடம் காதலை சொல்ல பின்னாலேயே சுற்றுவதுமாக காட்சிகள் செல்கின்றன. வழக்கமான காதல் கதையாகத்தான் இதுவும் இருக்கிறதே என்று கொஞ்சம் சோர்வு ஏற்பட துவங்கும் போது திடீரென்று திரைக்கதையில் ஒரு பெரிய மாற்றம்…
தன் தாய் உயிர் பிழைக்க ஆப்ரேஷனுக்கு லட்ச கணக்கில் பணம் கொடுத்து உதவிய துஷ்யந்திடம் பணத்தை திருப்பிக் கொடுக்க வரும்போது அவரை கொலை வழக்கில் போலீஸ் கைது செய்வதை கண்டு லியோ சிவா அதிர்ச்சி அடைவதும், எப்படியாவது அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை பின்தொடர்ந்து சென்று பாதுகாவலனாக மாறுவது கதையையே முற்றிலும் ஆக்சன் ரூட்டுக்கு திருப்பி போடுகிறது .
படத்தின் ஹைலைட்டே கூலிப்படை ரவுடிகளுடன் லியோ சிவா மோதும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி தான். இதுவரை சிவாவை இப்படி ஒரு ஆக்சன் களத்தில் பார்த்ததில்லை. என்ன இப்படி சண்டை போடுகிறாரே என்று அரங்கமே அதிரும் அளவுக்கு சிவா மோதும் சண்டைக்காட்சியால் அவரை ஆக்ஷன் அவதாரத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற உறுதியை தருகிறது.
எப்படி இவ்வளவு துணிச்சலாக சண்டைக் காட்சியில் நடித்தீர்கள் என்று லியோ சிவாவிடம் கேட்ட போது, உயிரை கொடுத்துத்தான்.. ” என்று பதில் அளித்தபோது உடல் புல்லரித்தது.
சிவா தாயாக ராதிகா எதார்த்தமான தனது வசனத்தாலும் நடிப்பாலும் மனதில் பதிகிறார்.
தன்னிடமிருந்து பணத்தை சிவா திருடி செல்வதை பார்த்தும் ஏதோ முக்கிய தேவைக்காக தான் அவர் திருடுகிறார் என்பதை உணர்ந்து அதை விட்டுக் கொடுக்கும் குணம் கொண்ட துஷ்யந்த் மனதில் இடம் பிடிக்கிறார்.
உதயா தீப், பேபி அஞ்சலி, உதயா, விஷால் விஷால், போஸ் வெங்கட் ஆகியோருடன் கூலிப்படை ரவுடிகளாக நடித்திருக்கும் புதுமுக இளைஞர்கள் பயமுறுத்துகிறார்கள்
லெனின் மாதேஸ்வரன், அமுதா லியோனி படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் அதிரடி சண்டை காட்சிக்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசை கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சண்டை பயிற்சி அமைத்த மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு கவனிக்கப்படுவார்.
அசோக் குமார் ராஜ், பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளள்ளனர்.
முதலில் காதல் கதையாக கொண்டு சென்று திடீரென்று ஆக்சன் பாதைக்கு மாற்றும் இயக்குனர் நானி, அம்மா சென்டிமென்ட், நட்பு, உதவி என்ற புது வகை ஃபார்முலாவை உருவாக்கி படத்தை இயக்கியிருக்கும் விதம் வெற்றிக்கு உறுதி செய்யும்.
டெலிவரி பாய் – உயிர் காப்பான் நண்பன்.

Review by
K Jayachandhiran www.trendingcinemasnow.com
