படம் : பிஸ்கோத்
நடிப்பு: சந்தானம். தாரா, சுவாதி முப்பலா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், ஆடிகளம் நரேன், பரத் ரெட்டி, லொள்ளு சபா மனோகர், புஜ்ஜி பாபு, சிவசங்கர்,
தயாரிப்பு: ஆர்.கண்ணன்
ஒளிப்பதிவு: சண்முக சுந்தரம்
இசை: ரதன்
இயக்கம்: ஆர்.கண்ணன்
வீட்டில் சிறிய அளவில் கைவேலையாக பிஸ்கட் நிறுவனம் நடத்தி ஊரில் கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் செய்கிறார் ஆடுகளம் நரேன். அவரது நண்பர் ஆனந்தராஜ் பார்ட்னராக உடனிருந்து பணியாற்றுகிறார். நரேன் மகன் சந்தானம். இந்த கம்பெனியை பெரிய நிறுவனமாக்கி கம்பெனிக்கு உன்னை ஜி எம் ஆக்குகிறேன் என்று சிறிய வயதில் மகனிடம் சொல்கிறார் நரேன். கொஞ்ச நாளில் நரேன் இறந்து போகிறார். பிஸ்கட் கம்பெனி ஆனந்தராஜ் கைக்கு மாறுகிறது. பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கும் கம்பெனியில் சூப்பர் வைசாராக இருக்கிறார் சந்தானம். கம்பெனியின் ஜி எம் போஸ்ட்டுக்காக சந்தானத்துக்கும். இன்னொருவருக்கும் இடை யே போட்டி வைக்கிறார் ஆனந்தராஜ். கம்பெனியை இன்னும் பெரிது படுத்தி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல ஐடியா தருபவருக்கு ஜி எம் பதவி என கண்டிஷன் போடுகிறார். அதில் யார் வெற்றி பெற்று கம்பெனிக்கு ஜி எம் ஆகிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.
சந்தானம் படம் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. கூடவே அவரது சிரிப்பு பட்டாள நடிகர்களும் இதில் கைகோர்த்திருக்கிறார்கள். சிரிப்புக்கு கேட்கவேண்டுமா.. பஞ்சமே இல்லை.

சந்தனம் என்ட்ரி தரும் எல்லா காட்சிகளும் நிறைவு தருவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அனாதை ஆசிரமத்துக்கு சென்று பிஸ்கட் தருவதில் தொடங்கும் சந்தானத்தின் சென்ட்மென்ட் பாட்டி சவுகார் ஜானகியிடம் கதை கேட்டு சாதிக்கும் சாகசம் வரையிலும் நான் ஸ்டாப்பாக தொடர்கிறது.
கம்பெனி ஜி எம் போஸ்ட்டையும் பாட்டி சவுகார் ஜானகி சொல்லும் பழங்கால கதையுடன் லிங்க் செய்து இயக்குனர் ஆர் கண்ணன் கதையை நகர்த்தி இருக்கும் விதம் சுவரஸ்யமானது. நவநாகரிக கதையில் எப்படி பாகுபலியும், ரோம் நகரமும் வரும் என்று யோசித்துக்கொண்டிருக்க முடியாமல் மின்னல் வேகத்தில் பஞ்ச் டயலாக் பேசி அவைகள லாவகமாக கடந்து செல்வது கலகல.
ஆனந்தராஜ் சொன்ன ஜோக்கிற்கு சிரிக்காமலிருந்ததால் தளபதி பதவியை இழக்கும் சந்தானம் எதிரிப்படைகளை பைனாகுலரில் பார்த்து அதை விரட்ட சொல்லிவிட்டு ஆனந்தராஜ் சென்றுவிட மீண்டும் அந்த பைனாகுலரை வாங்கி பார்க்கும் சந்தானம் அது பைனா குலரில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் என்று தெரிந்து ஸ்டிக்கரை பிரிதெடுப்பது காமெடி கலாட்டா.

அனாதை ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பாட்டி சவுகார் ஜானகியிடம் கதை கேட்க வரும் சந்தானம் தனக்கு சாதகமாக கதையை சொல்லக்கேட்டு பின்னர் அது நடக்காமல் போய் ஏமாறறம் அடைவதும் பிறகு முறைப்படி கதை கேட்டு முயற்சி செய்து ஜி எம் போஸ்ட்டை வெல்வதும் சாதுர்யம்.
ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றி சந்தானத்தை வில்லனாக்கி விட்டார்களே என்று எண்ணும்போது அங்கு இயக்குனர் டிவிஸ்ட் வைத்து கதையை சந்தோஷமாக முடிப்பது ஆறுதல். விதவிதான கெட்டப்பில் வந்தாலும் தனது காமெடி பஞ்ச்சை பஞ்சமில்லாமல் அள்ளித்தெளித்திருக்கிறார் சந்தானம்.

இரண்டு ஹீரோயின்கள் தாரா, அல்ஷா கதையின் சஸ்பென்ஸுக்கு பயன்பட்டிருக்கின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார் சவுகார் ஜானகி. வேடத்துக்கு ஏக பொருத்தமாக பொருந்தி போயிருக்கிறார். பேரனுக்கு கதை சொல்வதாக சொல்லி அவர் சொல்லும் கதையில் அவ்வளவு தெளிவு. வசனத்தை கணீர் குரலில் கேட்கவே சந்தோஷம் பிறக்கிரது.
மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் காமெடிக்கு கைகொடுக்கின்றனர். ஆனந்தராஜ் வில்லனாகவும் நல்லவனாகவும் மாறி மாறி தோன்றுகிறார்.
கொரோனா டென்ஷனிலிருந்து விடுபட்டு கவலை மறந்து சிரிக்க சரியான படமாக சரியான நேரத்துக்கு வந்திருக்கிறது பிஸ்கோத். இயக்குனர் ஆர். கண்ணன் பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமல்லாமல் சந்தனத்தின் ரசிகர்களுக்கும் செம விருந்தாக திரைக்கதை அமைத்து பொழுதுபோவதே தெரியாமல் கலகலக்க வைக்கிறார்.
பிஸ்கோத்- டென்ஷன் ரிலீப் காமெடி வெடி.

