படம்: தினசரி
நடிப்பு: ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்தே, எம் எஸ் பாஸ்கர், மீரா, பிரேம்ஜி, வினோதினி, எம்.ஆர்.ராதா ரவி, சாம்ஸ், கே பி ஒய் சரத், சாந்தினி தமிழரசன்
தயாரிப்பு: சிந்தியா லூர்தே
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
இயக்கம்: ஜி.சங்கர்
பிஆர்ஓ: கே.குமரேசன்
ஐடி கம்பெனியில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் கை நிறைய சம்பாதிக்கிறார். ஆனாலும் அவருக்கு பணத்தின் மீது தீராத ஆசை. தனக்கு வரும் மனைவி தன்னவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும். அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். வீட்டில் தனக்கு பெண் பார்க்கும் போது இதை கண்டிஷனாக வைக்கிறார். ஸ்ரீகாந்த் சொன்னது போல் இந்த பெண் தான் இருக்கிறார் என்று ஒருவரை கட்டி வைக்கிறார்கள். அவர் அதிகம் சம்பாதித்தாலும் திருமணத்துக்கு பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டு கணவன், குழந்தைகளை கவனித்துக் கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக நடத்த வேண்டும் என்று எண்ணுகிறார். மாறுபட்ட இரு எண்ணங்கள் கொண்ட ஜோடிக்கு திருமணம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த விஷயம் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது அதன் பிறகு நடப்பது என்ன என்பதை பரபரப்புடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.
ஸ்ரீகாந்த் எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை முழுமையாக அர்பணிப்பது வழக்கம். அந்த வேலையைத்தான் இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.
தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவி வந்தால் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லலாம் என்று அவர் போடும் கணக்கு பல இளவட்டங்களின் கணக்காக இருக்கிறது. 2k கிட்ஸ்கள் பலர் இது போன்ற ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி கைநிறைய பணம் இருந்தோம் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்ல முடியாமல் அது எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் சென்று சிக்கி சின்னாபின்னமாகி வாழ்க்கையே வெறுத்துப் போகும் நிலைக்கு தள்ளப்படும் சில சம்பவங்கள். தினசரி பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவருவதை அவ்வப்போது காண நேர்கிறது. அதற்கெல்லாம் ஒரு தீர்வை இந்த படம் சொல்லும் என நம்பலாம்.
ஸ்ரீகாந்த் போன்ற எண்ணம் உள்ளவர்கள் இப்படித்தான் தங்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜி சங்கர்.
பணத்துக்கு அப்பாற்பட்டு குடும்ப உறவு, சந்தோஷம் போன்ற எண்ணற்ற அம்சங்கள் வாழ்க்கையின் பிரதான இடங்களில் இருக்கிறது என்பதை வசனத்திலும் சில சமயம் காட்சிகளிலும் விளக்கி இருப்பது பலருக்கு படிப்பினை.
தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவி வருகிறார் என்று எண்ணி ஸ்ரீகாந்த் சந்தோஷப்படுவதும் ஒரு கட்டத்தில் அவர் வேலையை விட்டு இல்லத்தரசியாக மட்டும் வாழ விரும்புவதை கேட்டு அதிர்ச்சியில் உறைவது அரங்கை அலறவிடுகிறது.
ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக சிந்தியா லூர்தே அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பணம் பணம் என்று வேலை பின்னால் ஓடாமல் குடும்பம் குழந்தை, கணவன் என்று வாழ்க்கையை மனநிறைவுடன் நிம்மதியாக நடத்த வேண்டும் என்று எண்ணி அதற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் போது திடீரென்று ஸ்ரீகாந்தின் குணம் கண்டு சோகத்தில் ஆழ்வது உருக்கம் .
ஸ்ரீகாந்தின் தந்தையாக எம்.எஸ். பாஸ்கர், தாயாக மீரா, அக்காவாக வினோதினி, நண்பனாக பிரேம்ஜி என எல்லோரும் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தம்..
இப்படி ஒரு படத்துக்கு இளையராஜா இசை இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணவே வேண்டாம் ஏனென்றால் இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் காதில் தேனாக பாய்வதுடன் அர்த்தங்கள் ஆயிரம் கூறுகின்றன.
சிந்தியா லூர்தே அர்த்தமுள்ள படத்தை தயாரித்திருக்கிறார்
ராஜேஷ் யாதவ் கேமரா காட்சிகளை மிகைஇல்லாமல் படமாக்கி இருக்கிறது
இயக்குனர் ஜி.சங்கர் என்ன சொல்ல விரும்பினாரோ அதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். பெரும்பாலான விஷயங்களை வசனங்கள் மூலமே சொல்ல முற்பட்டிருக்கிறார்.. அதில் கவனம் செலுத்தி சிலவற்றை காட்சிகளாக வைத்திருந்தால் கூடுதல் பிளஸ் ஆக இருந்திருக்கும்.
.
தினசரி – பணத்துக்கு அப்பால் உள்ள வாழ்க்கையை அடையாளம் காட்டும் படம்.