படம்: ஈஸ்வரன்
நடிப்பு: சிம்பு. நிதி அகர்வால், நந்திதா சுவேதா, பாரதிராஜா, மனோஜ், முனிஸ்காந்த், பாலா சரவணன்
தயாரிப்பு: பாலாஜி காபா
ஒளிப்பதிவு: திரு
இயக்கம்: சுசீந்திரன்
வாரிசுகளை பிரிந்து கிராமத்தில் வாழ்கிறார் பாரதிராஜா. அவரை கவனித்துக்கொள்கிறார் சிம்பு. சென்னையில் வாழும் பிள்ளைகளை கொரோனா காரணம் காட்டி ஊருக்கு வரவழைக்கிறார் பாரதிராஜா. ஏற்கனவே பாரதிராஜாவால் சிறைக்கு சென்ற ஸ்டன் சிவா பாரதிராஜா குடும்பத்தை பழிவாங்கும் வெறியுடன் இருக்கிறார். இந்த நேரம் பார்த்து சோழி பிரசன்னம் பார்க்கும்போது குடும்பத்தில் ஒரு உயிர் பிரியப்போகிறது என்று ஒரு ஜோதிடர் சொல்கிறார். ஊரிலிருந்து பாரதிராஜாவின் பிள்ளை, பேரன் பேத்தி, மருமகள்கள் வந்த பிறகு அவர்களை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார் ஸ்டன் சிவா. அவரிடமிருந்து பாரதிராஜா குடும்பத்தினரை சிம்பு எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
சிம்புவுக்கு இதுவொரு புதுக்களம். எப்போதும் மார்டன் கெட்டப்பிலேயே அவரை பார்த்த ரசிகர்களுக்கு கிராமத்து இளைஞனாக சட்டை லுங்கி. நெற்றியில் பட்டை என அசல் கிராமத்து இளைஞனாக மாறி இருப்பதுடன் கிராமத்துக்குரிய வீரமும் அவரிடம் துள்ளி நிற்கிறது. நந்திதாவிடம் காதல் சிலுமிசங்கள் செய்யும் சிம்பு அந்த காதல் இல்லை என்றான பிறகு நிதி அகர்வாலின் காதலை கண்டுகொள்ளாமல் ஒதுங்குவது யதார்த்தம். ஆனாலும் விடாப்பிடியாக சிம்புவை மாமா மாமா என்று சுற்றி வருகிறார் நிதி அகர்வால். பாம்பு பிடிக்கும் காட்சிகளில் பரபரப்பு காட்டுகிறார் சிம்பு.
ஸ்டன் சிவாவுடன் மோதலுக்கு நிற்கும்போது அசத்தலான ஆக்ஷன் ஹீரோ என்பதை நிரூபிக்கிறார் சிம்பு. ரசிகர்களை எப்படியெல்லாம் கவர வேண்டுமோ அப்படியெல்லாம் நடித்து கவர்கிறார். பாடல் காட்சிகளில் சிம்பு காட்டும் ஸ்டைல் அவரது தனி முத்திரை. திகட்ட திகட்ட நடன காட்சிகளில் பீய்த்து உதறியிருக்கிறார். ஏற்கனவே சிம்புவிடம் இருக்கும் வேகம் இப்படத்தில் இன்னும் அதிகரித்திருக்கிறது. நீ அழிக்க வந்த அசுரன்னா நான் காக்க வந்த ஈஸ்வரன் என்று பஞ்ச் வசனம் பேசி ரசிகர்களை பரவசப்படுத்துகிறார்.
சிம்புவின் நண்பராக வரும் பாலா சரவணன் காமெடியில் கலக்குகிறார். பாரதிராஜாவின் இளவயது தோற்றத்தில் அவரது மகன் மனோஜ் நடித்துள்ளார்.
எஸ்.தமன். இசை சிம்புவின் ஆட்டத்துக்காக போட்டது போல் அவ்வளவு கனக்கச்சிதம். அறிமுக பாடல் என்றாலும் காதல் பாடல் என்றாலும் ஆட்டத்தில் அனல் பறக்கவிடுகிறார் சிம்பு. திருவின் ஒளிப் பதிவு குறைவைக்கவில்லை.
சிம்பு நடித்த படங்களில் 28 நாட்களில் முடிந்த படம் இது என்ற சிறப்பை ஈஸ்வரன் பெறுகிறது. இயக்குனர் சுசீந்திரன் சிம்புவை லாவகமாக கையாண்டு காட்சிகளில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஈஸ்வரன் – சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் ஜாக்பாட்.