படம்: புலிக்குத்தி பாண்டி
நடிப்பு: விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், ஆர்.கே.சுரேஷ். வேலா ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், ஆடுகளம் நரேன், சுஜாதா சிவகுமார், நமோ நாராயாணா, மாரிமுத்து,
தயாரிப்பு: கலாநிதி மாறன், எம்.முத்தையா
இசை: என்.ஆர்.ரகுநந்தன்,
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்
இயக்கம்: எம்.முத்தையா
ரிலீஸ்; சன் டிவி (15.1.2021)
ஊரில் யாராவது தப்பு செய்தால் தட்டிக்கேட்கும் குணம் படைத்தவர் விக்ரம் பிரபு. போலீஸ் செய்யும் தப்பை தட்டிகேட்டு கைதாகும் விக்ரம் பிரபு அவர் வாயாலேயே ஜாமீனில் விடச் செய்கிறார். மகளுக்காக ஒருவனை கத்தியால் குத்திவிட்டு வந்த பெரியவருக்கும் விக்ரம் பிரபு ஜாமீன் வாங்கி தருகிறார். பெரியவரின் மகள் லட்சுமி மேனனை பார்த்து காதல் கொள்ளும் விக்ரம் பிரபு அவரை பெண்கேட்டு வீட்டுக்கே செல்கிறார். சண்டியருக்கு வாழ்க்கை படமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் லட்சுமிமேனன் விக்ரம் பிரபவுக்கு அறிவுரை கூறுகிறார். அதைகேட்டு திருந்தும் விக்ரம்பிரபு அடிதடியை தூக்கிபோட்டுவிட்டு லட்சுமி மேனன் கழுத்தில் தாலி கட்டி குடும்பஸ்தன் ஆகிறார்.பொறுப்பாக வயலுக்கு சென்று கரும்பிலிருந்து வெல்லம் செய்து வியாபாரியாகிறார். இதற்கிடையில் லட்சுமி மேனன் தந்தையை கடன் பாக்கி தரவேண்டும் வேலா ராமமூர்த்தி கூட்டம் பிடித்து செல்கிறது. அவர்களிடம் பேசும் விக்ரம்பிரபு தனது இரண்டு வீட்டில் ஒரு வீட்டை வேலா ராமமூர்த்திக்கு எழுதி கொடுத்துவிட்டு பெரியவரை மீட்டு வருகிறார். விக்ரம்பிரபு வீட்டின் பக்கத்து வீட்டில் தனது வைப்பபாட்டியை குடி அமர்த்துகிறார் வேலா ராமமூர்த்தி அவரால் வரும் கலவரத்தில் இரண்டு குடும்பத்துக்கும் பகை வளர்கிறது. ஒரு கட்டத்தில் லட்சுமி மேனன் வீட்டுக்குள் புகுந்துவிடுகிறார் வேலா ராமமூர்த்தி. அவரை அடித்து துரத்துகிறார் லட்சுமி மேனன். அவர் மீது விக்ரம் பிரபு போலீசில் புகார் கொடுக்கிறார். போலீசிலிருந்து அவரை மீட்க சமாதான பேச்சு நடக்கிறது. வீட்டை திருப்பு கொடுத்துவிடுகிறோம் புகாரை வாபஸ் வாங்கு என்று விக்ரம் பிரபுவிடம் கூற அவர் அதை ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கும்போதுதான் எதிர்பாராத அந்த அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. அதற்கு முடிவு காண்கிறது கிளைமாக்ஸ்.
புலிக்குத்தி பாண்டி என்ற கதாபாத்திரத்தை ஏற்று வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார் விக்ரம் பிரபு. இவரை தவிர வேறு ஹீரோ யாராவது இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்பார்களா என்பது சந்தேகமே. நடிகர் திலகம் சிவாஜிக்கு இருந்த துணிச்சல் இந்த இளம்வயதிலேயே விக்ரம் பிரபுவுக்கு வந்திருப்பது அவர் நடிப்பை நடிப்பா க நேசிக்கிறார் என்பதற்கு சரியான உதாரணம்.
ஆரம்ப காட்சிகளில் விக்ரம் பிரபு ஆக்ஷனில் காட்டும் வேகமும் நடனத்தில் காட்டும் அசைவுகளும் முழுமையான நடிகராகி இருக்கிறார் என்பதை உணர்ந்துகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்த தவறுக்காக அவரையே நய்ய புடைத்து கேரக்டருக்கு வலு சேர்க்கிறார். லட்சுமி மேனன் மீது காதல் கொள்ளும் விக்ரம்பிரபு நேராக அவரது வீட்டுக்கு சென்று பெண் கேட்பதும் பிறகு லட்சுமி மேனன் அவரை சந்தித்து வம்பு தும்புகளை கைவிட சொன்னதும் அதை எல்லாம் விட்டுவிட்டு விட்டுக்கொடுக்கும் குணத்துக்கு மாறி சண்டை சச்சரவுகளுக்குள் தலையிடாமல் ஒதுங்குவதுமாக பவ்யமான குடும்பஸ்தனாகி விடுகிறார்.
லட்சுமி மேனனுக்கு கொஞ்சம் கனமான வேடம்தான் அதை நன்றாக தோளில் தாங்கி இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் லட்சுமி மேனனுக்கு கனமான வேடமாக அமந்திருப்பது அவரது அதிர்ஷ்டம்தான்.
ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வெட்டு குத்து என்று வேலா ராமமூர்த்தியும் ஆர் கே சுரேஷும் அடாவடி செய்வது காட்சிகளை ரணகளமாக்குகிறது. சிங்கம் புலி குரூப் காமெடி செய்கிறது. விட்டில் பூச்சியாய் விழிப்புணர்வு பாடல்கள் பாடிவிட்டு சில நிமிடங்களில் மறைந்துவிடுகிறார் சமுத்திரக்கனி.
இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புலிக்குத்தி பாண்டி ஹீரோயிசம் கொண்ட கதை இல்லை யதார்த்தமான உண்மை கதையின் பிரதிபலிப்பு. நிஜத்தில் சினிமா தனத்தை அதிகம் சேர்க்காமல் சொல்லவும், ஸ்கிர்ப்ட்டில் தலையிடாமல் இயக்குனர் சொன்னதை நடிக்கும் ஹீரோவும் கிடைத்ததுதான் இந்த கதைக்கு கிடைத்த பலம். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவும்., என் ஆர் ரகுநந்தனின் இசையும் படத்தை உணர்வோடு பதியச் செய்திருக்கிறது.
புலிக்குத்து பாண்டி- விக்ரம் பிரபுவின் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும்.