படம்: விலங்கு (வெப் சீரீஸ்)
நடிப்பு: விமல், இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், ஆர்,என்.ஆர். மனோகர், ரேஷ்மா, சக்ரவர்த்தி,
தயாரிப்பு: எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன்
இசை: அஜீஷ்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
இயக்கம்: பிரசாந்த் பாண்டியராஜ்
ரிலீஸ்: ஜீ5 வெப் சீரீஸ்
பி ஆர் ஒ: சதீஷ் (AIM)
திருச்சி பகுதியையொட்டி உள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார் விமல். அதே காவல் நிலையத்தில் பால சரவணன், முனிஷ் காந்த் போன்றவர்களும் போலீஸாக பணியாற்றுகின்றனர். அப்பகுதியில் உள்ள காட்டில் அழுகிய நிலையில் ஒரு பிணம் இருப்பதாக தகவல் வர அதுபற்றி விசாரிக்க செல்கிறார் விமல். சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரி டி எஸ் பி வருகிறார். அவர் மேற்பார்வை யிட்டுவிட்டு புறப்பட்டு செல்லும் நிலையில் யாரோ அந்த பிணத்தின் தலையை திருடி செல்கிறார்கள். இதைக்கேட்டு விமல் அதிர்ச்சி அடைகிறார். டி எஸ் பிக்கும் தகவல் தெரிவிக்கப்பட அவர் விமலை கடுமை யாக கண்டிப்பதுடன் குறிப்பிட்ட நாளுக்குள் காணாமல் போன தலையை கண்டுபிடிக்காவிட்டால் டிஸ்மிஸ் ஆகிவிடுவாய் என்று எச்சரிக்கிறார். தலையை தேடிபோலீஸ் பட்டாளம் ஊரெங்கும் அலைகிறது. இதற்கிடை யில் பலரை பிடித்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையத்தில் டீ வாங்கி தருவதுபோன்ற வேலைகள் செய்யும் வேலையாள் மீது சந்தேகம் வருகிறது. முதலில் ஒப்புக்கொள்ள மறுக்கும் அவன் போலீஸ் அடி வாங்கிய பிறகு தான்தான் கொலை யாளி என ஒப்புக்கொள்கிறான். அவன் செய்தது ஒரு கொலை அல்ல 8 கொலை என தெரியவர போலீஸ் பட்டாளமே பயந்து நடுங்குகிறது. காணாமல் போன தலைகிடைத்ததா? 8 கொலை செய்தது எதற்காக என்று ஒவ்வொரு மர்ம முடிச்சு அவிழும்போதும் பரபரப்பு அதிகரிக்கிறது. இதன் கிளைமாக்ஸ் என்ன என்பதை ஜீ5 வெப் சீரிஸில் காணாலாம்.
ஏழு எபிசோட்கள் கொண்ட விலங்கு வெப் சீரிஸ் முதல் ஒரு சில எபிசோட்கள் இலகுவாக தொடங்கி அடுத்தடுத்து ஜெட் வேகத்தில் பறக் கிறது. நடிகர் விமல் நடித்திருக்கும் முதல் வெப் சீரீஸும் இதுதான்.
திருச்சி பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து விலங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. காட்டு பகுதிக்கு அழுகிய பிணம் பற்றி விசாரிக்க விமல் செல்லும்போது வழக்கமான விசாரணையாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டி ருக்கும்போது அங்கு உயர் அதிகாரி டி எஸ் பி இருக்கும்போதே பிணத்தின் தலை காணாமல்போனதும் வெப் சீரிஸில், சீரியஸ்னஸ் ஆரம்பமாகி விடுகிறது. அதன்பிறகு தொடருக்கு இறக்கை கட்டிவிட்டிருக்கிறார் இயக்குனர்… சும்மா பர பரவென பறக்கிறது.
வழக்கம்போல் விமல் அமைதியான வராக வந்தாலும் நடிப்பில் பல இடங் களில் மாறுபாடு காட்டி வித்தியாசப் படுகிறார். போலீஸ் நிலையத்தில் டீ வாங்கி தரும் நபர்தான் கொலையாளி என்று தெரிந்தபிறகு அவனிடம் நைசாக பேசி உண்மையை கக்க வைப்பது நல்ல சாதுர்யம்.
”சார் ஒண்ணு இல்ல.. ரெண்டு சார்.. ”என்று அந்த நபர் கூற
”என்னது” என்று விமல் கேட்க,
”2 கொலை செஞ்சேன் சார்” என்று அவர் கூறுவதும் அடுத்தடுத்த காட்சிகளில் அந்த ரேட்டிங்கை அவர் எட்டு கொலைவரை ஏற்றிக்கொண்டு செல்லும்போது விமல் பயந்து நடுங்குவது மட்டுமல்ல இன்ஸ்பெக்டர் முதல் அத்தனை போலீஸும் பயத்தில் அந்த நபரை பார்ப்பது கலகலப்பையும் திகிலையும் ஒன்றாக கலந்து தருகிறது.
”வாங்க ஸார் வீட்ல டீ சாப்பிட்டுட்டு போகலாம்: என்று கொலையாளி அழைக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலமாகிவிடும்.
கொலையாளி யார் என்று தெரியும் வரை பிடிபடும் குற்றவாளிகளை பால சரவணன் அடி பின்னிபெடலெடுக் கிறார். இவர் போலீஸா அல்லது வில்லனா என்று கேட்கும் அளவுக்கு முற்றிலுமாக உருமாறி இருக்கிறார். பல படங்களில் காமெடியனாக பார்த்துக் கொண்டிருந்த பால சரவணனா இது என நடிப்பில் வெளுத்துகட்டி இருக்கிறார்.
விமல் மனைவியாக இனியா நடித்திருக்கிறார். முக்கியமான வேலையில் விமல் வெளியில் இருக்கும்போது பிரசவ வலியில் மட்டுமல்லாமல் கர்ப்பிணியான அவர் கீழே விழுந்தும் டென்ஷன் ஏற்படுத்து கிறார். போஸுக்கும் குடும்ப கஷ்டங்கள் இருக்கிறது என்பதை காட்சிகள் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர்.
முனிஷ்காந்த். ஆர் .என். ஆர். மனோகர், நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, ரேஷ்மா, ஆகியோரும் பாத்திரத்தை நிறைவு செய்கின்றனர்.
எஸ்கேப் ஆர்ட்ஸ் மதன் தயாரிக்க ஜீ5 ஒடிடி தளம் இதனை வெப் சீரீஸாக வெளியிடுகிறது.
பிரசாந்த பாண்டிராஜ் போலீஸ் கதையை மிக நுணுக்காமாக ஆராய்ந்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு குறையாமல் படத்தை இயக்கி உள்ளார். இதை படமாகவே வெளியிட்டிருக்க லாம் ஆனால் கதையில் பல்வேறு காட்சிகள் விளக்க வேண்டி உள்ளதால் அதன் நீளத்தை கருதி வெப் சீரிஸாக விலங்கு கதையை இயக்கியதாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார். காட்சிக்கு அவசியம் என்ற நோக்கில் சில கெட்ட வார்த்தைகளும் இடம் பெற்றிருப்பது வெப் சீரிஸுக்கே உள்ள அடையாளம்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு காட்சிகளை கண்ணுக்குள் பதிய வைக்கிறது.
அஜீஷ் இசை படம் முழுக்க முக்கிய காட்சிகளை உயர்த்திப்பிடிக்கிறது.
விலங்கு – போரடிக்காத வெப் சீரிஸாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும்.