நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி 2024 விக்கிரவாண்டியில் வி சாலையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் என லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் விஜய் பேசும்போது கட்சி கொள்கைகளை அறிவித்தார்.
இதை அடுத்து நவம்பர் மூன்றாம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டார். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை வைத்தார். மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அந்த தீர்மானங்கள் விவரம் வருமாறு:
1. கொள்கைகள், கொள்கைத் தலைவர்களை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம்
கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும். பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை போன்ற பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக எப்போதும் முன்னெடுக்கும்.
பெருந்தலைவர் காமராஜராலும் இந்த மண்ணில் விதைக்கப்பட்ட மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்றுவதோடு, அவரது நேர்மையான நிர்வாகச் செயல்பாட்டையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம்.
அதேபோல, இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கிக் காட்டிய அண்ணல் அம்பேத்கரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, சமூகநீதியை நிலைநிறுத்தப் போராடிய அண்ணலின் வழியை எந்நாளும் பின்பற்றுவோம்.
2.கொள்கைத் திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்று, தமிழக அரசியல் களத்தில், புதிய வரலாறு படைத்திருப்பது. காலாகாலத் திற்கும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மாநாட்டுப் பணிகளுக்காக. இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும் கடுமையாக உழைத்த மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட நிர்வாகிகள்,
அனைத்து அணிகளின் நிர்வாகிகள். சட்டமன்றத் தொகுதிகளுக்கான தற்காலிகப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை. பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள். ஒருங்கிணைப்பாளர் கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும், பந்தல் வடிவமைப்பாளர் திரு. ஜே.பி.விஸ்வநாதன் அவர்களுக்கும், மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளுக்கும், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
3.மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம்
ஆறுகள். மலைகள். கடல்கள். மண்ணின் இயற்கை வளங்கள் மட்டுமல்ல. ஒரு மண்ணின் குணநலன்களும் ஆகும். அதுபோல ஒரு கட்சியின் கொள்கைகள்தான் அக்கட்சியின் வளத்தையும் குணநலன்களையும் பேசுபவையாக இருக்கும். மேலும், அரசியல் என்பது மாநில மற்றும் மக்கள் தேவைகளையும் உரிமைகளையும் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் கொள்கைகளும் இருக்க வேண்டும். கொள்கைகள் என்பவை, மக்கள் சார்ந்தும் மண்ணைச் சார்ந்துமே இருக்க வேண்டும்.
இதை நுட்பமாக உணர்ந்ததால் மட்டுமே, இந்தத் தமிழ்நாட்டு மண்ணில் இருக்கும் அனைத்து மக்களுக்கான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மட்டுமல்லாது மக்கள் மற்றும் மாநில உரிமைகளைச் சார்ந்த நலன்களையும் பேணிப் பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் வந்தது. அதனால்தான் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் இருக்க வேண்டாம் என்ற முடிவையும் திண்ணமாக எடுத்தது.
மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத் தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு “மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்” என்று பெயர் சூட்டியுள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத் தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
4.ஜனநாயகக் கொள்கை தீர்மானம்
ஜனநாயக நாட்டில் உண்மையான மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஆளும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று. உண்மையான, நேர்மையான கருத்துகளைத் தெரிவிப்பதும் மக்களுக்காகப் போராடுவதும் எதிர்க் கட்சிகளின் கடமை மட்டுமல்ல. உரிமையும் ஆகும். அத்தகைய உரிமையை, அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் தடுக்க முயல்வதும், ஊடகங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுப்பதும், சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகுமுறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.
5.பெண்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
6.சமூக நீதிக் கொள்கை தீர்மானம்
7.மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்
8.விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட் டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர் களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர் களின் வாரிசுகளுக்கு. இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்து கிறது.
9.கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம்
கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று, கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10. ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம்
கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.
தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள், தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக்கொள்ள, ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி, மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம், இந்தச் சர்வதேசச் சட்டத்தை வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராடும் என்பதை இச்செயற்குழு அறிவிக்கிறது.
11.மொழிக் கொள்கை தீர்மானம்
12 மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம்
13. சட்டம் – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்
14. மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கத் தீர்மானம்
ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன் வாயிலாக ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியதுதான் தற்போதைய ஆளும் கட்சியான திமுக. தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
15.மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம்
மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து, அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விடக் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
16.உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்
17. தமிழ்நாட்டின் தொன்மப் பெருமைப் பாதுகாப்புத் தீர்மானம்
18.விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்
19.கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம்
20.முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யத் தீர்மானம்
21. இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்
22. இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம்
23. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்
24.தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்
ஆளும் அரசுகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது, மக்கள் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டும் எங்களின் அரசியல் அணுகுமுறை அல்ல. ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும் ஆக்கப்பூர்வ மான அணுகுமுறையாகக் கருதுகிறோம்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்குகிறது. இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருவதற்காகத் தமிழக அரசை இச்செயற்குழு வரவேற்கிறது.
25.ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2,376 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை இச்செயற்குழு வரவேற்கிறது.
26.இரங்கல் தீர்மானம்
