படம்: சுல்தான்
நடிப்பு: கார்த்தி, ராஷ்மிகா மந்தன்னா (அறிமுகம்), நெப்போலியன், லால், யோகிபாபு, சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து, பிரின்ஸ், சென்றாயன், மயில்சாமி, சதீஷ், ஹரீஸ் பெரடி, ராமசந்திர ராஜு, நவாப் ஷா, அர்ஜெய், மற்றும் சுல்தான் பாய்ஸ் 100 பேர்,
தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு
பாடல் இசை: விவேக் மெர்வின்
பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: சத்யன் சூர்யன்
இயக்கம்: பாக்யராஜ் கண்ணன்
100 ரவுடிகளை வைத்துக் கொண்டு ஊரையே கட்டுக்குள் வைத்திருக்கிறார் நெப்போலியன். அவருக்கு போட்டியாக மற்றொரு கூட்டம் பழி வாங்க சுற்றி வருகிறது. இந்நிலையில் நெப்போலியன் மனைவி அபிராமி ஆண் குழந்தை பெற்றெடுக்கிறார். அந்த குழந்தைக்கு சுல்தான் என பெயரிடும் மாமன் லால் மற்றும் 100 ரவுடி பாய்ஸ் சேர்ந்து வளர்க்கின்றனர். சுல்தானாக வளரும் கார்த்தி ரோபோ கல்வி படித்துவிட்டு ஊர் திரும்புகிறார். அடுத்து ரோபோ படிப்பை மையமாக வைத்து தொழில் தொடங்க எண்ணுகிறார். வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். இந்நிலையில் சிலர் நெப்போலியனையும் கூட்டத்தையும் சுட்டு தள்ளுகின்றனர். துப்பாக்கி சூட்டில் தப்பிக்கி றார் நெப்போலியன். இதற்கிடையில் சேலம் பகுதி கிராமத்திலிருந்து வரும் சில விவசாயிகள் தங்கள் ஊரையும் மக்களையும் அழிக்கும் ரவுடி கூட்டத்தின் கொட்டத்தை அடக்கி மக்களை காப்பாற்ற கேட்கின்றனர். அவர்களை காப்பாற்றுவதாக நெப்போலியன் வாக்கு தருகிறார். படுக்கைக்கு செல்லும் நெப்போலியன் மரணம் அடைகிறார். இந்நிலையில் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ்தான் என்பதை அறிந்து அவரை சந்தித்து பேசுகிறார் கார்த்தி. 100 ரவுடிகளையும் என் கவுன்ட்டரில் சுட்டுத்தள்ளுவேன் என்று எச்சரிக்கும் போலீசிடம் 6 மாதம் டைம் வாங்கிக் கொண்டு வரும் கார்த்தி 100 பேரையும் திருத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில் கிராம மக்களுக்கு நெப்போலியன் செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற லால் முடிவு செய்கிறார். கார்த்திக்கு தெரியாமல் அவர்கள் புறப்பட தயாராகும்போது தானும் வருவதாக கூறுகிறார் கார்த்தி. 100 ரவுடிகளும் கிராமத்துக்கு வந்து அந்த ஊரை அடக்கி ஆளும் வில்லனை அழிக்க எண்ணுகின்றனர். அந்த விவரம் கார்த்திக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு கார்த்தி எடுக்கும் முடிவு என்ன? அந்த கிராமத்தை காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
தீரன் அதிகாரம் ஒன்று, கைதி படங்களின் வரிசையில் கார்த்திக்கு மகுடம் சூட்டும் மற்றொரு படமாக சுல்தான் அமைந்திருக்கிறது சுல்தான். 100 ரவுடிகளை அடக்கி ஆளவதற்கு ஏற்ற இமேஜ் தனக்கு இருக்கிறது என்பதை தனது அசாதாரண நடிப்பின் மூலம் நிரூபித்திருக் கிறார்.
முதல் காட்சி தொடகத்திலிருந்தே 100 சுல்தான் பாய்ஸ் திரையை அடைத்துக்கொண்டு அட்டகாசம் செய்கின்றனர். அவர்களை என்கவுன்ட்டரில் போட்டு தள்ள போலீஸ் எச்சரிக்கும்போது அவரிடம் 6 மாதம் டைம் வாங்கும் கார்த்தி 100 பேரையும் திருத்துவதாக உறுதி தரும்போது இது நடக்கக்கூடிய காரியமா? என்று எண்ணத் தோன்றுகிறது.
சேலம் பகுதி கிராமத்து மக்களை கே ஜி எஃப் வில்லன் ராமசந்திர ராஜூவிடமிருந்து காப்பாற்ற லால் தனது ரவுடி கூட்டத்துடன் புறப்பட தயாராகும்போது திடீரென்று கார்த்தி இடைமறித்து எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க யோகிபாபு தனக்கு பெண் பார்க்க எல்லோரையும் அழைத்துச் செல்வதாக பொய் சொல்வது காமெடி. உடனே கார்த்தி தானும் உடன் வருவதாக கூறி புறப்படுவதும் 100 பேருடன் கிராமத்துக்கு வரும் கார்த்தி அவர்களை மண்டபத்தில் அடைத்து பூட்டி வைத்து வெளியில் வரக் கூடாது என்று மடக்கிப் போட்டதும் சுல்தான் பாய்ஸ் தவித்துபோகின்றனர்.
யோகிபாபுவுக்கு பெண் பார்க்க செல்லும் கார்த்தி அங்கு கல்யாண பெண்ணாக வந்து நிற்கும் ராஷ்மிகாவை பார்த்து அசந்து, போக யோகி பாபுவோ எனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று அசால்ட்டாக சொல்வது கலகலப்பு.
கண்டிப்பாக அந்த பெண்ணை பிடிக்கவில்லையா என்று யோகிபாபுவிடம் உறுதி செய்துக்கொள்ளும் கார்த்தி தானே ராஷ்மிகாவை கல்யாணம் செய்துகொள்வதாக கூறுவதும் ஆனால் ராஷ்மிகா கார்த்தியை மணக்க சம்மதிக்காமல் உதறுவதும் சுவரஸ்யம்.
ராஷ்மிகாவை காதலிப்பதாக சொல்லிக்கொண்டு கார்த்தி காலத்தை கடத்திவிடுவாரோ என்று எண்ணும்போது மீண்டும் கே ஜி எஃப் வில்லன் ராமசந்திர ராஜின் கொட்டத்தை புகுத்தி அந்த களத்துக்குள் கார்த்தியை இறக்கிவிட்டு காட்சிகளில் அனல்பறக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
வயதானவரை கட்டிவைத்து சவுக்கால் ராமசந்திர ராஜூ அடிக்க திடீரென்று அந்த சவுக்கை கையில் பிடித்து இழுத்து ராமசந்திர ராஜுவை யும் அவரது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்து விசில் பறக்க விடுகிறார் கார்த்தி.
100 ரவுடிகளையும் விவசாயிகளாக மாற்றி அனைவரையும் வயலில் இறக்கி விட்டு விவசாயம் பார்க்க வைத்திருப் பது புதிய சிந்தனை.
கார்த்தியின் முதல் சண்டை காட்சியிலேயே ஆக்ஷனில் அனல் பறக்கவிட்டிருக்கின்றனர். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் அரங்கமே தீப்பிடிக்க வைத்துவிடுகிறார் கார்த்தி. ஸ்டண்ட் மாஸ்டரின் கைவண்ணம் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
தெலுங்கு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா முதன்முறை யாக நேரடியாக இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ஸ்கோர் செய்கிறார். 4 காதல் டூயட், 4 காதல் வசனம் என்றில்லாமல் அவரது காதலையும் அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார்கள்.
ராஷ்மிகாவிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கண் அசைவு மிரட்டல்களும் மிஸ் ஆகவில்லை.
100 ரவுடிகள் கதை என்றதும் குடும்ப சென்ட்டி மென்ட் டுக்கும், பெண்கள் சென்டி மென்ட்டுக்கும் இடம் இருக்காதோ என்று யோசிக்க விடாமல் குடும்ப சென்டி மென்ட்டையும், தாய்க்குலங்களின் சென்டிமென்ட்டையும் கதைக்குள் கலந்து கதையை ஜனரஞ்சகமாக்கி இருப்பது பலம்.
நெப்போலியன், லால் மற்றும் 100 சுல்தான் பாய்ஸ் கதைக்கு தூண் ஆக நிற்கின்றனர்.
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக் கின்றனர். பாக்யராஜ் கண்ணன் இப்படியொரு கதையை யோசித்தது பெரிய விஷயமில்லை அதை கச்சிதமாக படமாக்கி மிகப் பெரிய பொறுப்பை தோளில் சுமந்து வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
காட்சிக்கு காட்சி கூட்டம் என்றாலும், அதை அசராமல் படம் பிடித்திருக்கிறார் சத்யன் சூர்யன்.
பாடல்களை ஆரவாரமாக்கி இருக்கிறது விவேக் மெர்வின் இசை. பின்னணி இசை மூலம் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
சுல்தான் – இது கார்த்தியின் பாட்ஷா.