படம்: பாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு: சந்தானம், அனைகா சோடி, சஸ்டிகா, மொட்டை ராஜேந்திரன்
தயாரிப்பு: லார்க் ஸ்டுடியோஸ் குமார்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
இயக்கம் ஜே.ஜான்சன்
கானா பாடல் பாடுவதில் திறமையானவர் சந்தானம். அவரை தனது கல்லூரியில் பாட அழைக்கிறார் அனைகா. அதையேற்று அங்கு செல்கி றார். சந்தானம்- அனைகாவுக்கு காதல் மலர் கிறது. இந்த விவரம் சந்தானம் தந்தைக்கு தெரியவருகிறது. அவர் ஏற்கனவே பெரிய தில்லாலங்கடி. மகன் சந்தானம் மற்றும் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது கல்யாணம் செய்து அவர்களுடனும் ரகசியமாக வாழ்ந்து வருகிறார். அவரது மகள்தான் அனைகா. அப்படியென்றால் சந்தானம் காதலிப்பது தனது தங்கையை என்பது ரசிகர்களுக்கு தெரிவதுபோல் தந்தைக்கும் தெரியவருகிறது. அவர்கள் காதலை பிரிக்க தந்தை படாதபாடுபடுகிறார். ஆனால் அப்பாவை வீட்டில் அடைத்துவைத்துவிட்டு மணக்கோலத்தில் சந்தானம் அனைகாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்கி றார். அவர்கள் திருமணம் நடந்ததா என்பதற்கு காமெடி கலாட்டாவுடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுவது கானா பாடல்கள் தான். சந்தானத்தை லோகல் பாஷை பேசவிட்டால் சும்மாவே மிரட்டுவார். இதில் கதாபாத்திரமே அதுதான் என்பதால் லோகல் பாஷை யில் எதுகை மோனை பேசி கலகலக்க வைக்கிறார்.
தொடக்க காட்சியில் தனது காதலை தனது தந்தையே பிரித்துவிட்டார் என்பதை அறிந்ததும் அவரை வாய்க்கு வந்தபடியெல்லாம் கழுவி ஊற்றுவதும் அடிக்க பாய்வது மாக செம சீன் காட்டுகிறார்.
கல்லூரி பெண் அனைகாவுடன் காதல் மலர்ந்த பிறகு இருவரும் ஊர் சுற்றுவதை வரை நார்மலாக காட்சிகள் நகர்கின்றன. ஒரு கட்டத்தில் அனைகா சந்தானத்தின் தங்கை என்ற ரகசியம் உடைந்த பிறகு ஒவ்வொரு காட்சியிலும் காமெடி சூடு பறக்கிறது.
சந்தனத்தின் தந்தையாக வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜின் ஜிராக்ஸ் காப்பிபோல் அச்சு அசல் அவரைப்போல வே இருக்கிறார். வேடத்தை உணர்ந்து இவரும் காமெடி யில் ரகளை செய்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் எப்படியெல்லாம் காமெடி யை புகுத்த முடியுமோ அப்படியெல்லாம் புகுத்தி அமர்க்களப்படுத்துகின்றனர். திருமணம் செய்துவைகா நடுவழியில் புரோகிதரை பிடித்து அழைத்து செல்லும் சந்தானம் அவர் மந்திரம் தெரியாமல் பிதற்றுவதை நக்கலடித்து கலகலக்க வைக்கிறார்.
இவர்கள் போததென்று மொட்டை ராஜேந்திரனுடன் டிவி காமெடி நடிகர்களை அடியளாக்கி அங்கும் ஒரு காமெடி களத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படியொரு கதைய தொட்டால் சுடும். ஆனால் காமெடியாக கையாண்டு விரசம் இல்லாமல் செய்திருக் கிறார் இயக்குனர் ஜான்சன். சந்தனம் நடித்த ஏ 1 படத்தை இயக்கிய ஜான்சன் மற்றொரு காமெடி கலாட்டா.
வலி மாங்கா வலி ரசிகர்களை குத்தாட்டம்போட வைக்கும். சந்தோஷ் நாராயணன் இசை கானாவை ஒருகை பார்த்திருக் கிறது. எங்காவது ஒரு மெலடி கேட்காதா என்ற ஆதங்கம் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.
பாரிஸ் ஜெயராஜ்- சிரித்து விட்டு வரலாம்.