Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கடைசி விவசாயி (பட விமர்சனம்)

படம்: கடைசி விவசாயி

நடிப்பு: நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு, ரெய்ச்சல், முனீஸ்வரன்,

தயாரிப்பு: எம்.மணிகண்டன்

இசை: சந்தோஷ் நாராயணன்,

பின்னணி இசை: ரிச்சர்டு ஹார்வின்

ஒளிப்பதிவு: மணிகண்டன்

இயக்கம்: மணிகண்டன்

பி ஆர் ஒ: யுவராஜ்

எளிய கிராமத்து மண்ணை எந்த அரிதாரமும் பூசாமல் கடைசி விவசாயி படம் மூலம் கண்ணுக்கு காட்சிபடுத்தி இருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

80 வயது முதியவர் மாயாண்டி கிராமத்தில் தன் உழைப்பை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வாழ்கிறார். 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் நாற்று நடுவது முதல் அறுவடை செய்வது வரை மாயாண்டியே கவனிக்கிறார். இரக்க குணம் கொண்ட அவர் தன் வயலில் இறந்துகிடக்கும் 3 மயில்களின் உடலை தூக்கி வீச மனம் இல்லாமல் நிலத்திலேயே புதைக்கிறார். இதை கண்ட ஒருவர்  மயிலை கொன்று முதியவர் புதைத்தாக போலீசில் புகார் செய்ய முதியவரை போலீஸ் கைது செய்து கோர்ட்டில் நிறுத்துகிறது, கோர்ட்டில் நடக்கும் வாத பிரதிவாதங்கள் அதற்கு விவசாயி மாயாண்டி சொல்லும் வெள்ளந்தியான பதில்களுமே கடைசிவரை கதையை கொண்டு செல்கிறது. இதில் முதியவரின் வாக்கு மூலத்தை கோர்ட் ஏற்கிறதா அல்லது வேறு தீர்ப்பு வழங்குகிறதா என்பதற்கு  பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

மாயாண்டி என்ற முதிய விவசாயி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் நல்லாண்டி. அவரது நிஜ உணர்வுகளே கதாபாத்திரத்தை உயிரோட்டமாக்குகிறது.

மயில்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்படும் நல்லாண்டியிடம், ”உனக்கு ஆதார் அட்டை இல்லை, ரேஷன் கார்டு கூட இல்லை உன்னை எப்படி இந்திய குடிமகன் என்று நம்புவது” என வக்கீல் கேட்கும் கேள்விகள் கிராமத்தில் உள்ள பலரின் உண்மையை நிலையை உணர்த்துகிறது.

“பயிர் கூட ஒரு உயிர் தானே” என்று நீதிபதியிடம் நல்லாண்டி எடுத்துச் சொல்லும் காட்சியில் உள்ள உயிரோட்டம் படம் முழுவதும் பரவி இருப்பதால் உள்ளுணர்வுகளும் காட்சிகளுக்குள்ளேயே சுற்றி வருகிறது.

யானை வளர்ப்பவராக யோகி பாபு நடித்திருக்கிறார். தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் அப்செட் ஆகி நடமாடும் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் கூட வாழும் பாத்திரங்களாக தெரிவதால் கதையின் எதார்த்தம் காக்கப்படுகிறது.

தயாரிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என மூன்று பொறுப்பையும் மணிகண்டனே ஏற்றிருப்பதால் துல்லியமாக காட்சிகளையும் வசனங்களையும் படமாக்கி அப்ளாஸ் பெறுகிறார்.

படத்தின் ஒரு ஹைலைட் முதியவர் நல்லாண்டி என்றால் மற்றொரு ஹைலைட் நீதி மன்ற காட்சிகள். நீதிபதியாக வரும் ரெய்ச்சல் கோர்ட்டின் நடைமுறைகளையும், நீதிபதியாக எப்படி வார்த்தைகளை பிரயோகப் படுத்துவது என்பதை உணர்ந்து நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசை வழக்க மாகவே மக்களிசை அடிப்படையில் ஒலிக்கும். இப்படத்திலும் அவரது இசையில் 2 பாடல்கள் இதமாக ஒலிக்கிறது. ரிச்சர்ட் ஹார்வி பின்னணி இசை கூடுதல் பலம்.

கடைசி விவசாயி – அடுத்த தலைமுறைக்கு அவசிய தேவை.

 

Related posts

சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட “அங்கம்மாள்”

Jai Chandran

Jai Bhim Fame ‘Manikandan’ New Movie Comedy Genre

Jai Chandran

உலகெங்கும் டான் படம் வெளியிடும் ஐபிக்ஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend