Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பைசன் காளமாடன் (பட விமர்சனம்)

படம்: பைசன் காளமாடன்

நடிப்பு : துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள், அருவி மதன்

தயாரிப்பு: சமீர் நாயர், தீபக் சீகல், பா ரஞ்சித், அதிதி ஆனந்த்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: எழிலரசு கே

இயக்கம்: மாரி செல்வராஜ்

பிஆர்ஓ: குணா, யுவராஜ், சதீஷ்

கதை: நெல்லை பகுதி கிராமத்தில் கந்தசாமி (லால்), பாண்டியராஜா (அமீர்) என்ற இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இரு பெரும்புள்ளிகள். எந்த நேரத்தில் யாரை வெட்டி சாய்ப்பார்கள் என்பது தெரியாமல் எப்போதும் ஒரு ரவுடி படையுடனே வலம் வருகிறார்கள். அதே ஊரில் பள்ளிக்கு சென்றாலும், தான் ஒரு கபடி வீரனாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் காளமாடன் (துருவ் விக்ரம்) அதற்கு தகுதியான நபராக இருக்கிறார். ஆனால் உள்ளூர் கபடி அணியில் கூட காள மாடனை சேர்க்க மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். முன்னேறவே முடியாமல் தடைக்ககற்கள் போடப்பட்டு பின்னுக்கு தள்ளப்படும் இளைஞன் காளமாடன் எவ்வாறு ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடும் வீரனாக இடம் பிடிக்கிறான் என்பதை ரத்தமும் சதையுமாக கதை கூறுகிறது.

பள்ளியில் கடவுள் வாழ்த்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் மறைந்திருந்து சாப்பாடு திருடி தின்னும் துருவ் விக்ரமை பள்ளி ஆசிரியர் அருவி மதன் கண்டுபிடித்து அடித்து விரட்டி,” அம்மாவை அழைத்து வா” என்று சொன்னதும்
காலில் இருக்கும் செருப்பை கழட்டி விட்டு பள்ளி மைதானத்தில் நிற்காமல் ஓடும் துருவ் விக்ரமின் எனர்ஜியை கண்டு ஆச்சரியப்படும் மதன்,” யார்ரா நீ, இவ்வளவு நேரம் நிற்காமல் ஓடுற.. உன் ஆசை கபடி வீரனாக ஆவது என்றால் அதை நான் நிறைவேற்றித் தருகிறேன்” என்று சொல்லி அடுத்தடுத்த காட்சிகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விடுகிறார்.

கயிற்றில் இருந்து அறுபட்ட காளைபோல் காளமாடன் துருவ் விக்ரம் கபடி போட்டிக்களத்தில் தீயாக சுழல்கிறார், புலியாக சீறுகிறார்.

ஒரு டிசர்ட்டும், கால் சட்டையும் அணிந்து எதிரணிக்கு கபடி பாட்டு பாடி செல்லும் துருவ் விக்ரம் கட்டாந்தரையில் அந்தர் பல்டி அடித்து எதிரணி வீரர்களை தோற்கடிப்பது அரங்கை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது . அதேபோல் ஆக்சன் காட்சியிலும் கோபக்காரனாக மாறி எதிரியை கண் மண் தெரியாமல் தாக்கி முரட்டு வீரனாக மனதில் பதிகிறார் துருவ் விக்ரம்.

ஆசிய போட்டியில் இந்திய டீமில் தானும் ஒரு வீரனாக இணைவதற்கு துருவ் விக்ரம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் சூழ்ச்சிகள் நடப்பில் நடக்கும் நிஜத்தை பிரதிபலிக்கிறது.

சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்திற்காக உயிரையும் துணிவார். அதே துணிச்சல் அவரது மகன் துருவ் விக்ரமிடமும் இருப்பதை இப்படத்தில் காண முடிகிறது. துருவ் விக்ரமின் கடின உழைப்பு அவரை ஹீரோக்கள் ஓட்டத்தில் முன்னணி இடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தும். ஆனால் அவரது உழைப்பு மட்டும் கிஞ்சித்தும் குறையக் கூடாது என்பதில் கவனம் இருக்க வேண்டும்.

துருவ் விக்ரம் காதலியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். உடல் மெலிந்து நடிப்பில் மெருகேறி அந்த காலத்து நடிகை சோபாவை ஞாபகத்துக்கு கொண்டு வருகிறார் .

துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி நடித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து விட்டோம் நம்மை முன்னரே விட மாட்டார்கள், ஆபத்தானவர்களிடமிருந்து மகனையாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற ஒரு தந்தையின் பயத்தையும் தவிப்பையும் சீனுக்கு சீன் வெளிப்படுத்து கிறார்.

அமீர் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் காவலனாக பாண்டியராஜா என்ற கதாபாத்திரத்தில் அசல் போராளியாக கண் முன்நிற்கிறார்.
அமீரை ஒழித்தே தீருவேன் என ஒரு பக்கம் கங்கணம் கட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம் அதே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துருவ் விக்ரமை தன் அணியில் சேர்ந்து கபடி ஆடும்படி சொல்லும் லால் வில்லத்தனத்தை எதார்த்தமாக வெளியிட்டிருக்கிறார்.

மேலும் ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

சமீர் நாயர், தீபக் சீகல், பா ரஞ்சித், அதிதி ஆனந்த் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னா இசை காட்சிகளுக்குள் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறது.

எழிலரசு கேமரா நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை பதிக்கிறது.

90 காலகட்டங்களில் கபடி விளையாட்டு ஆட்டம் ரத்தையும் சதையுமாக உணர்ச்சி பிழம்பாக இருக்கும். அந்த ஆட்டத்தை இப்படத்தில் நிகழ்த்தி காட்டியிருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் வழக்கம்போல் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு உச்ச சாயலில் குரல் கொடுத்திருக்கிறார்.

கபடி போட்டியை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன ஆனாலும் இந்த படத்தில் இடம்பெறும் கபடி போட்டிகள் மனதை பதற விடுகிறது.

பைசன் காளமாடன் – கட்டுக்கடங்காத காளை.

Review by

J Jayachandhiran

Trendingcinemasnow.com

 

 

 

 

Related posts

Five Directors Movie “Vowels” Audio Launch Event..

Jai Chandran

RadheShyam to stick to festive release date of 14th Jan, 2022

Jai Chandran

என் ரசிகர்கள் விஜய் படம் பாருங்கள், விஜய் ரசிகர்கள் என் படம் பாருங்கள்.. நடிகர் சிம்பு அறிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend