அஜித்குமார் நடித்த பில்லா, ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் மற்றும் பட்டியல் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் அடுத்து இயக்கும் படம் நேசிப்பாயா .
விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்த எக்ஸ் பி கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ அதிக பொருட்செலவில் நேசிப்பாயா படத்தை தயாரிக்கிறார். மறைந்த பிரபல நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆதவ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் நடிகர் அதர்வாவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
ஆதவ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பூ கல்கி கொச்சிலின், சிவா பண்டிட், ஜார்ஜ் கோரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடந்திருப்பதுடன் பெங்களூரு, சென்னையிலும் நடந்திருக்கிறது.
இப்படம் பற்றி இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியதாவது:
தமிழ் படம் இயக்கி நீண்ட நாட்கள் ஆகியிருந்த நிலையில் ஒரு தமிழ் படம் இயக்க எண்ணியிருந்தேன். அந்த நேரத்தில் தான் முரளியின் மகன் ஆதவ் முரளி என்னை வந்து சந்தித்தார். தன்னை ஹீரோவாக என்னுடைய இயக்கத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டார். அந்த நேரத்தில் நான் வேறு ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்த நிலையில் உடனடியாக அவரது படத்தை இயக்க முடியவில்லை. ஆனால் என்னுடன் தொடர்பிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். சுமார் இரண்டு வருடம் அவர் என்னுடன் அடிக்கடி தொலைபேசியிலும், நேரிலும் பேசி வந்தார். அவரது குணம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது பழகும் தன்மை, பேசும் இயல்பு எல்லாமே பிடித்துப்போனதுடன் அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கான உடல் தகுதி மற்றும் நடிப்பு பயிற்சியும் பெற்றிருந்தார். இதையடுத்துத்தான் நேசிப்பாயா படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த முடிவு செய்தேன். அவர் பார்ப்பதற்கு ஆஜானபாகு தோற்றத்தில் இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் இனிமையாகவும் ஒரு குழந்தை போல பழகினார்.
அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யாவை அறிமுகப்படுத்தியபோது அவரும் கட்டுமஸ்தாகதான் வந்து நின்றார் ஆனால் பழகுவதற்கும் பேசுவதற்கும் மிகவும் இனிமையாக நட்பாக இருந்தார். இந்த நட்புதான் அவரை ஈடுபாடுடன் படத்தில் நடிப்பதற்கான வேலையை வாங்க எனக்கு உத்வேகம் அளித்தது. அதேபோல்தான் ஆதவ் முரளியையும் இப்படத்தில் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டுமோ அப்படி எல்லாம் நடிக்க வைத்தேன். அவரும் சலிக்காமல் நடித்தார். சண்டைக் காட்சிகளில் கூட அவர் நிறைய அடி வாங்கி இருக்கிறார். காதல் காட்சிகளிலும் நான் எதிர்பார்த்ததைவிட இன்னும் சிறப்பாகவே நடித்தார். அவரது நடிப்பும் பழகும் முறையும் எனக்கு பிடித்துப்போன நிலையில் அவரை வைத்து இன்னொரு படம் இயக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் உருவாகும்போது அந்தப் படத்தின் பணி நடக்கும்.
நேசிப்பாயா படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் நடந்திருக்கிறது. அதற்குக் காரணம் இந்த படத்தின் கதை அப்படி அமைந்திருக்கிறது மொழி தெரியாத ஒரு நாட்டில் நடக்கும் ஸ்கிரிப்டாக இது அமைந்திருக்கிறது. அதனால்தான் படப்பிடிப்பு களம் அந்த நாடுகளில் அமைந்தது.
நேசிப்பாயா ஒரு காதல் கதை. நிறைய காதல் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல் வெவ்வேறு மாதிரி இருந்திருக்கிறது. இந்த காலத்தில் இருக்கும் காதலைத்தான் இப்படத்தில் படமாக்கி இருக்கிறேன். அத்துடன் குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது
ஸ்பெயினைச் சேர்ந்த. கேமராமேனை இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பயன்படுத்தி இருக்கிறோம். எரிக் பிரைசன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதேபோல் அந்நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். ஒளிப்பதிவும் சரி, சண்டைக்காட்சியும் சரி மிக அற்புதமாக வந்திருக்கிறது. ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை ஒளிப்பதிவும் ஸ்டன்ட் காட்சிகளும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக கார் சேசிங் காட்சியொன்று மிரட்டலாக வந்திருக்கிறது. எந்தக் காட்சியிலும் டூப் போடாமல் ஆதவ் முரளி நடித்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வழக்கமாகவே என் படங்களுக்கு அவர் அற்புதமான இசையமைத்து தருவார் . அதற்கு இன்னொரு காரணம் நாங்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் எங்களுக்குள் நெருங்கிய நட்பு இருக்கிறது. அதனால் அவருடன் உரிமையாக அற்புதமான இசையமைத்து தர வேண்டுமென கேட்பேன்.
நேசிப்பாயா படத்தில் ஆதவ முரளி, அதிதி ஷங்கருடன் பிரபு, சரத்குமார், குஷ்பூ, கல்கி கொச்சிலின் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கி றார்.
இவ்வாறு விஷ்ணு வர்தன் கூறினார்.

நடிகர் ஆதவ் முரளி கூறியதாவது: நடிப்பின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. என் தந்தை உயிருடன் இருக்கும்போதே அண்ணன் அதர்வா மற்றும் என்னை நடிகனாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். எங்களுக்கும் நடிப்பில் ஆர்வம் இருந்தது.
நான் நடிப்புக்காக கூத்துப்பட்டறை மற்றும் மும்பையில் உள்ள அனுபம்கெர் நடிப்பு கல்லூரி ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றிருக்கிறேன். நான் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் மூலமாக அறிமுகமாக வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அவர் இயக்கிய அறிநதும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த பாணி கதையில்தான் நானும் அறிமுகமாக வேண்டும் என்று எண்ணினேன். மும்பையில் அவரை நேரில் சந்தித்து என் ஆசையை வெளிப்படுத்தியபோது அவருக்கு என்னை பிடித்துப் போனது. அவர் வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் உடனடியாக என் படத்தை இயக்க முடியாமல் போனது. ஆனாலும் அவருக்காக நான் சுமார் இரண்டு வருடம் காத்திருந்தேன். பின்பு அவர் இயக்கத்தில் நடிக்கிறேன். முதன்முறையாக படத்தில் அறிமுகம் ஆவதால் என் தந்தை முரளிக்கு ஆதரவு அளித்தது போலவே எனக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ரசிகர்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு ஆதவ் முரளி கூறினார்.
.
