படம்: ஹவுஸ்மேட்ஸ்
நடிப்பு: காளி வெங்கட், தர்ஷன் ஹர்ஷா பைஜு, வினோதினி, மாஸ்டர் கென்ரிக்
இசை ராஜேஷ் குமரேசன்
தயாரிப்பு: கிரியேட்டவ் புரடியூசர் ராஜவேல்
ஒளிப்பதிவு:சதீஷ்
இயக்கம்: ராஜவேல்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல்.நாசர், திரு
வெளியீடு: நடிகர் சிவகார்த்திகேயன்
தர்ஷனை, ஹர்ஷா காதலிக்கிறார். தந்தை எதிர்ப்பதால் வீட்டை விட்டு வெளியேறி தர்ஷனை மணக்கிறார். சொந்த வீடு வாங்கி அதில் தர்ஷன் குடியேறுகிறார் ஆனால் அந்த வீட்டில் அமானுஷ்யமாக ஏதேதோ நடக்கிறது. அதை கண்டு பயந்த ஹர்ஷா, தர்ஷனிடம் கூறுகிறார். முதலில் நம்ப மறுத்தாலும் பின்னர் அவரே நேரில் கண்டு அதிர்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே அந்த வீட்டில் வாழ்ந்த காளி வெங்கட் குடும்பம் இந்த அமானுஷ்ய வேலைகளை செய்வது தெரிய வருகிறது. இவர்கள் கண்ணுக்கு அவர்கள் தெரியவில்லை அவர்கள் கண்ணுக்கு இவர்கள் தெரியவில்லை. எல்லாமே சுவற்றில் எழுதி உரையாடலை பகிர்கின்றனர். இவர்களுக்கு இந்த கதி ஏன் ஏற்பட்டது, இதன் முடிவு தான் என்ன என்பதற்கு விஞ்ஞான ரீதியில் குழப்பமான பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
ஹவுஸ் மேட்ஸ் பேய் படமா, டைம் ட்ராவல் படமா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு புதிய ஜெர்னரில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ராஜவேல்.
படம் தொடங்கிய சில நொடிகளிலேயே அமானுஷ்ய விஷயங்கள் தொடங்கி விடுவதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடனே காட்சிகள் நகர்கின்றன.
ஒரே வீட்டில் தர்ஷன் குடும்பமும், காளி வெங்கட் குடும்பமும் முறையே வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்கின்றனர் என்று சொல்லி காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்த பார்த்திருக்கிறார்கள். காட்சிகளும் எதிர்பார்த்தபடி சுவாரசியமாகவும் காமெடியாகவும் நகர்கிறது.
வழக்கமாக பேய் படத்தில் வீட்டில் இருக்கும் மனைவி பேய் இருக்கிறது என்பார் ஆனால் அதை கணவர் நம்பவே மாட்டார்… இப்படிப்பட்ட காட்சிகளை பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்ன ஃபார்முலாவோ அதே காட்சிகளை இந்த படத்திலும் வைத்து கடுப்பேற்றி இருக்கிறார்கள்.
தர்ஷன், ஹர்ஷா பைஜூ ஜோடி பொருத்தம் ஓ கே. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் ஹர்ஷா பய உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தி திக் திக் செய்கிறார்.
படத்தில் நம்ப முடியாத காட்சிகள் நிறைய இருக்கின்றன ஆனால் அவற்றை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள். குழந்தை சென்டிமென்ட்டை படத்தில் வைத்திருப்பது பாச உணர்வுகளை தொடுகிறது. புரியாத கேள்வி என்னவென்றால் இந்த காலகட்டத்தில் உயிரோடு இல்லாத ஒரு நபர் சென்ற காலகட்டத்தில் விபத்திலிருந்து உயிர் பிழைத்துக் கொள்வதாக காட்டுவதுதான் கடைசிவரை புரியாத புதிராக இருக்கிறது.
ராஜவேல் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருப்பதுடன் படத்தையும் இயக்கி இருக்கிறார். கமர்சியலாக காமெடியாக ஒரு கதையை சொல்ல வேண்டும் அதை வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்காக ரசிகர்களை குழப்பி இருக்க வேண்டாம்.
ராஜேஷ் குமரேஸ் இசை, சதீஷ் ஒளிப்பதிவு கை கொடுக்கிறது.
ஹவுஸ் மேட்ஸ் – புரிந்தும் புரியாமலும்.

By
ஜெயச்சந்திரன் கே www.trendingcinemasnow.com
