படம்: வீர தீர சூரன் 2ம் பாகம்
நடிப்பு: விக்ரம், எஸ் ஜே சூர்யா, சுராஜ், தூஷ்ரா விஜயன், மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி
தயாரிப்பு: ஹெச் ஆர் பிக்சர்ஸ் ரியா சிபு, மும்தாஜ்.எம்.
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
இயக்கம்: எஸ் யு அருண்குமார்
பிஆர்ஓ: யுவராஜ்
தன் மனைவியை காணவில்லை அவரை காணாமல் செய்துவிட்டார்கள் என்று பெரியவர் (மாருதி) , கண்ணன் (சுராஜ்) ஆகியோர் மீது ஒருவர் போலீஸ் அதிகாரியிடம் ( எஸ். ஜே. சூர்யா) புகார் அளிக்கிறார். ஏற்கனவே கண்ணன் மற்றும் பெரியவர் மீது கோபமாக இருக்கும் போலீஸ் அதிகாரி அவர்களை என்கவுண்டரில் சுட்டுத் தள்ள திட்டமிடுகிறார். இந்த விஷயம் பெரியவருக்கு தெரிந்து மகனுடன் தலைமறைவு ஆவதுடன் போலீஸ் அதிகாரியை தீர்த்து கட்ட வேண்டும் என்று காளியிடம் (விக்ரம்) கூறுகிறார். முதலில் அதற்கு தயக்கம் காட்டும் காளி பெரியவர் தன் காலில் விழுந்து கெஞ்சியதால் கொலை செய்ய ஒப்புக்கொள்கிறார். இதையறிந்த காளியின் மனைவி காளிக்கு தடை போடுகிறாள். இந்த போராட்டத்துக்கிடையில் நடக்கும் உணர்ச்சிகர மான இரண்டு குடும்பங்களில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் தான் கிளைமாக்ஸ்.
வித்தியாசமான வேடங்களில் நடிப்பதென்றால் சீயான் விக்ரமுக்கு கைவந்த கலை. இதற்காக தன் உடலைக்கூட அவர் வருத்திக்கொள்வது வழக்கம். காளி என்ற கதாபாத்திரத்திற்காக அவர் உடலளவில் எந்த மாற்றத்தையும் செய்யாவிட்டாலும் மனதளவில் உணர்ச்சிகளை கொட்டி நடித்திருக்கிறார்.
ஹீரோயிச அறிமுக பாடல் கிடையாது, முத்தம் கொடுத்து கட்டி உருளும் காதல் காட்சி கிடையாது, எதார்த்தமாக நடிக்க வேண்டும், இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்று ஒரு ஹீரோவிடம் அவரது கதாபாத்திரத்திற்கு கண்டிஷன் போட்டால் கதை பக்காவாக இருக்கிறது, நடிப்புக்கு தீனிபோடும் பாத்திரம் என்றால் தன் தரப்பில் எந்த கண்டிஷனும் போடாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரே நடிகர் விக்ரம் தான் என்பதை மீண்டும் இப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.
மனைவி, குழந்தைகள் என்று எளிமையாக சந்தோஷமாக வாழும் வாழ்க்கையே போதும் என்று எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் இருக்கும் விக்ரமை மாருதியும் , சுராஜும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிக்கலில் மாட்டி விடுவதும் அதிலிருந்து விடுபட முடியாமல் விக்ரம் சிக்கிக் கொண்டு ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கு செல்வதும் நைட் ஷோ பார்த்தால் கூட நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
இனி இந்த கதை இப்படித்தான் பயணிக்க போகிறது என்பதை யூகிக்க முடியாத காட்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரிச்சியத்தை அளிக்கிறது.
சண்டைக் காட்சிகளில் சினிமா தனம் இல்லாமல் 10 பேர் 15 பேர் தாக்கினாலும் அதை எதார்த்தமாக எதிர் கொண்டு ரத்தம் கொட்டினாலும், சதையே கிழிந்து தொங்கினாலும் அது பற்றி கவலைப்படாமல் விக்ரம் நடித்திருக்கும் காட்சிகள் இவருக்கு எங்கெல்லாம் அடிபட்டிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.
பெரியவராக மாருதி, அவரது மகன் கண்ணனாக சுராஜ் இருவரும் வில்லன்கள் என்றாலும் அதை சினிமாத்தனமாக இல்லாமல் நயவஞ்சகமாகவும், குடும்ப உணர்வுடனும் வெளிப்படுத்தி காட்சிகளுக்கு கோபத்தையும் வெறியையும் ஏற்றியிருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக வரும் எஸ் ஜே சூர்யாவுக்கு அவர் தனது ராட்சஷதனமான நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த பெரிய சந்தர்ப்பம் என்றாலும் அவரது அந்த ராட்சத நடிப்புக்கு கடிவாளம் போட்டிருக்கிறார் இயக்குனர். இவ்வளவு கோபப்பட்டால் போதும், இவ்வளவு குரல் உயர்த்தி பேசினால் போதும் என்று அவரது கதாபாத்திரத்தை மிகவும் பக்குவமாக செதுக்கி நடைமுறைப் படுத்திருப்பது எஸ் ஜே சூர்யாவின் மறுபக்கத்தை காட்டி இருக்கிறது.
தூஷ்ரா விஜயன் விக்ரமின் மனைவியாக பொறுப்புள்ள ஒரு குடும்ப தலைவியாக, குடும்பத்திற்கு ஒரு ஆபத்து என்றால் கத்தியை எடுக்க கூட தயங்காத ஆக்ரோஷக்காரியாக மாறி ரொம்பவே மாறுபட்டு நடித்திருக்கிறார்.
பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா, ரவி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஹெச் ஆர் பிக்சர்ஸ் ரியா சிபு, மும்தாஜ்.எம். தயாரித்திருக்கிறார்கள். கொஞ்சம் முயன்றால் இந்த படம் தேசிய கதவை மட்டுமல்ல, ஆஸ்கார் கதவையும் தட்டும் தரம் கொண்டது.
ஜிவி பிரகாஷ் குமார் வழக்கமான ஒரு இசை இல்லாமல் ஆரம்ப காலகட்ட த்தில் எப்படி ஒரு எழில் மிகு இசையை தந்தாரோ அந்த எல்லைக்குள் நின்று காட்சிகளையும், பாடல்களையும் இசையால் தூக்கி நிறுத்துகிறார். கல்லூரும், ஆத்தி அடி ஆத்தி பாடல்கள் நாவில் ஒட்டிக் கொள்கிறது.
நான் ஒளிப்பதிவு செய்யும் படம் என்றால் அதற்கு ஒரு தரம் இருக்கும் என்று இன்னொரு முறை உண்மையை உணர்த்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
அதிரடி ஆக்சன், பிரம்மாண்ட சண்டை என காட்சிகளுக்கு வாய்ப்புகள் இருந்தும் அது எல்லாமே படத்தை சினிமாத்தனமாக்கி விடும் என்பதை உணர்ந்து படம் முழுவதையுமே மனிதர்களின் உணர்ச்சி கொப்பளிப்புகளால் கோர்த்து காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ். யூ.
அருண்குமார். இவர் பாரதிராஜாவின் இன்னொரு மறுபதிப்பு.
ஒரு சில காட்சிகளில் விளக்கம் இல்லாமல் இருந்தாலும் அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அநேகமாக அடுத்த பாகத்தில் அதற்கான விடைகள் கிடைக்கும் என்று நம்பலாம்.
வீர தீர சூரன் 2ம் பாகம் – மக்களின் மனங்களை வெல்வான்.