படம் : ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்
நடிப்பு:மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன், லட்சுமி, மனோதாஸ், செல்வேந்திரன், பருதி ஏ.எஸ்., சதீஷ்குமார்,
தயாரிப்பு: 2 டி எண்டர்டைன்மெண்ட் ஜோதிகா, சூர்யா
இசை: கிரிஷ்
ஒளிப்பதிவு: சுகுமார் எம்.
இயக்கம்: அரிசில் மூர்த்தி
வெளியீடு: அமேசான் பிரைம்
மண் சார்ந்த படங்கள் வருவது மிகவும் குறைவு. இப்படம் மண்ணின் பாரம்பரியம் மற்றும் பாசத்தை பட்டவர்த்தனமாக காட்டும் படமாக உருவாகி iஇருக்கிறது.
தென் தமிழகத்தில் பூச்சேரி கிராமத்தை சேர்ந்த குன்னிமுத்து போலீஸ் நிலையத்தில் தான் பிள்ளைகள்போல் வளர்க்கும் மாடுகள் காணாமல் போனதாக புகார் தருகிறார். அதைக்கேட்டு கோபம் அடைந்த போலீஸ்காரர், ’மாடு காணோமென்று புகார் தர வந்துவிட்டாயா?’ என்று விரட்டி அனுப்பு கிறார். சோகத்துடன் வீடு திரும்பும் குன்னி முத்து தனது புகாரை போலீஸார் ஏற்கவில்லை என்று மனைவியிடம் சொல்லி புலம்ப அவரும் மாடுகள் காணாமல் போனதால் கண்கலங்குகிறார். அந்த மாடுகளை கன்றுகளாக இருக்கும்போதே தனக்கு கல்யாண சீதனமாக தனது தந்தை தந்தது என்பதால் அன்போடு வளர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் மாடுகளை மந்திரியின் ஆட்கள் கடத்தினார்கள் என்பது தெரியவர அது மீடியாக்களில் வெளியாகி பரபரப்பாகிறது. இதனால் மந்திரிக்கு தலைவலி வந்து சேர்கிறது. இதன் முடிவு என்ன என்பதை படம் விளக்குகிறது.
மாடுகள் காணாமல் போன படத்தை முழுநீள படமாக சூர்யா தயாரிக்க என்ன காரணம் என்று பார்த்தால் அந்த கதைக்குள் ஒளிந்தி ருக்கும் அரசியல் சண்டியர்களை பற்றிய அடாவடிகளை புட்டு புட்டு வைக்கத்தான் என்பது புரிகிறது.
குன்னிமுத்து என்ற கதாபாத்திரத்தில் ஒரு வேட்டி , சட்டை அணிந்து படம் முழுவதும் நடித்துவிட்டு செல்கிறார் மித்துன் மாணிக்கம். போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்து விட்டு குற்றவாளிகளோடு சேர்ந்து அவரும் லாகப்பில் போய் அம்ர்ந்துக்கொள்ளும் போதே அவரது வெள்ளந்தி மனம் வெளிப்படுகிறது.
கருப்பன், வெள்ளையனை (மாடுகள்0 காணவில்லை என்பதால் கண்ணீர் மல்க அவைகளை தேடி அலைவதும், தனது மாடுகளை மேடையில் ஏற்றுவதற்காக அதனை ஒருவர் தடியால் அடிக்க அதைக் கண்டு ஆவேசம் அடைந்து வேகமாக ஒடிச் சென்று மந்திரியை தள்ளிவிட்டு தனது மாட்டை மீட்டு வருவதில் கதையின் முழு ஓட்டமும் அடங்கி இருக்கிறது.
தனது பிள்ளைகள்போல் மாடுகள் மீது அன்பு காட்டி வளர்க்கும் ரம்யா பாண்டியன் மாடுகள் காணாமல் போனதால் அவரும் சோகத்தில் ஆழ்ந்துவிடுவதும், தனது மாடுகளுக்கு பதிலாக வேறு மாடுகளை தரும் மந்திரியை முகத்தில் அடித்தார்போல் கேள்வி கேட்டு அவமானப்படுத்துவது என நடிப்பில் மிளிர்கிறார்.
ஒரே நேர் கோட்டில் சென்றுக்கொண்டிருக்கும் கதை டிவி நிருபர் வாணி போஜன் வந்தபிறகு திசை மாறி பயணித்து களைகட்டுகிறது. மாடுகளை மந்திரி ஆட்கள் கடத்தியதை டிவியில் வெளிச்சம்போடு காட்டி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி அரசியல்வாதிகளை வாட்டி எடுத்திருக்கிறார்.
படத்தில் நடித்திருக்கும் எல்லா பாத்திரங் களும் ஏதாவது ஒரு வகையில் தனது பங்கினை செலுத்தி இருக்கின்றன.
சுகுமார் ஒளிப்பதிவு கிராமத்தையும் நகரத்தையும் சமதளத்தில் படமாக்கி இருக்கிறது. கிரிஷ் இசையில் காட்சிகள் சூடு பிடிக்கிறது.
ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்- காளை மாடுகளுக்குள் ஒரு அரசியல் படம்.