படம்: வா வாத்தியார்
நடிப்பு: கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், பி.எல். தேனப்பன், ஆனந்தராஜ் , நிழல்கள் ரவி, ராஜ் திலக், ஜி எம் சுந்தர், கருணாகரன், யார் கண்ணன், நிவாஸ் ஆதித்தன், வித்யா
தயாரிப்பு: கே. ஈ ஞானவேல் ராஜா
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
இயக்கம்: நலன் குமாரசாமி
பிஆர்ஓ: யுவராஜ்
தீவிர எம்ஜிஆர் ரசிகர் பூமி பிச்சை (ராஜ்கிரன்) எம்ஜிஆர் உடல்நலம் இல்லாத நிலையில் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் அவர் நடித்த படத்தை திரையில் போட்டு பார்த்து ரசிக்கிறார். அந்த நேரத்தில் எம்ஜிஆர் இறப்புச் செய்தி அவருக்கு வருகிறது, அதே சமயம் அவருக்கு பேரன் ராமு (கார்த்தி) பிறந்த தகவலும் வருகிறது. எம்ஜிஆரே மீண்டும் பிறந்து விட்டார் என்று எண்ணும் பூமி பிச்சை அந்த குழந்தைக்கு எம்ஜிஆர் போல் வித்தைகள் கற்றுக் கொடுத்து வளர்ப்பதுடன், “நீ போலீஸ் அதிகாரியாகி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிறார். ஆனால் பேரன் ராமு (கார்த்தி) வளர்ந்து போலீஸ் அதிகாரி ஆன பிறகு தவறான வழியில் செல்கிறார். இதை அறிந்து வருந்தும் பூமி பிச்சை தனது பேரனை திருத்தும்படி எம்ஜிஆரிடம் வேண்டிக்கொண்டு இறந்து விடுகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் கதை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆரை அவரது ரசிகர்கள் வாத்தியார் என்று அழைப்பார்கள் அதை குறிக்கும் வகையில் படத்திற்கு வா வாத்தியார் என்று டைட்டில் வைத்திருப்பது பொருத்தம்.
படத்தின் முதல் பாதி வரை எம்ஜிஆர் நடித்த படங்களிலிருந்து அவ்வப்போது சில காட்சிகள் திரையிடப்படுவது எம்ஜிஆர் ரசிகர்களை குதுகலப்படுத்துகிறது.
ராமு என்கிற ராமேஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தி தொடக்க காட்சிகளில் லஞ்சம் வாங்குவது, ரவுடிகளுக்கு உதவுவது என்று நம்பியார் வேலைகளை செய்கிறார். எம்ஜிஆர் கதை என்று கூறிவிட்டு இவரை இப்படி காட்டுகிறார்களே என்று சற்று அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அதே கதாபாத்திரம் எம்ஜிஆர் கதாபாத்திரமாக மாறுவது எதிர்பார்க்காத திருப்பம்.
எம்ஜிஆர் நேரில் தோன்றி கார்த்தி உடம்புக்குள் புகுந்துக் கொண்டதும் பெண்களுக்கு ஆபத்து என்றால் வெள்ளை குதிரையில் சென்று உதவுவது, நல்லவர்களை போலீசார் சுட்டுத்தள்ள முயலும்போது அங்கு சாட்டையுடன் தோன்றி வெளுத்து வாங்குவது பரபரப்பு.
கார்த்திக்கு எம்ஜிஆர் போல் ஹேர் ஸ்டைல் காஸ்ட்யூம் எல்லாமே பொருந்தி இருந்தாலும் கார்த்தியின் முகம்தான் தெரிகிறது.
படங்களில் சண்டைக் காட்சிகளில் எம் ஜி ஆர் துவம்சம் செய்வதுபோல் வில்லன்களை சாட்டையில் வெளுப்பது, கையில் இரும்பு கம்பி சுழற்றுவது என ஆக்ஷன் காட்சிகளில் வேகம் காட்டியிருக்கிறார் கார்த்தி.
எம்ஜிஆராக கார்த்தி உருமாறி வரும்போது நான் ஆணையிட்டால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை போன்ற பிரபல பாடல்கள் இடம் பெறுவது ரசிக்க முடிகிறது.

கார்த்தி ஜோடியாக கிருத்தி செட்டி நடித்திருக்கிறார். அதிக வேலை இல்லை. ஒன்றிரண்டு டூயட் பாடுகிறார். நடன காட்சிகளில் இன்னும் கூட வேகமாக அவரை பயன்படுத்தி இருக்கலாம்.
எம்ஜிஆர் ரசிகராக வரும் ராஜ்கிரன் அசல் ரசிகராகவே வாழ்ந்திருக்கிறார்.
எம்ஜிஆர் ரசிகர்கள் பலர் இப்போது அவரது வேடங்கள் போட்டு சுற்றிக்கொண்டிருப்பது போல் ஆனந்தராஜ் எம்ஜிஆர் வேடத்தில் வெள்ளை குதிரையில் சுற்றி சுற்றி வருகிறார்.
நிஜத்தில் தீவிர எம்ஜிஆர் ரசிகரான சத்யராஜ் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கார்த்திகாக சமரசம் செய்து கொண்டு இந்த பாத்திரத்தில் அவர் நடித்திருப்பார் என்று தோன்றுகிறது.
மேலும் நிழல்கள் ரவி, ராஜ் திலக், ஜி எம் சுந்தர், கருணாகரன், யார் கண்ணன், நிவாஸ் ஆதித்தன், வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேலு படத்தை தயாரித்திருக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.
ஜார்ஜ்
சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு ஓகே.
எம்ஜிஆரை சூப்பர்மேனாக காட்ட வேண்டும் என்ற முயற்சியில் ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து அதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. படம் விறுவிறுப்பாக இருக்கிறதா, பரபரப்பாக இருக்கிறதா என்பதை கணக்கு பார்க்காமல் எம்ஜிஆர் பார்முலாவுக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்தால் நல்லவற்றுக்கு மட்டுமே எம்ஜிஆர் துணை நிற்பார் என்பது போல் கருவை அமைத்திருப்பது ரசிகர்களால் வரவேற்கப்படும்.
வா வாத்தியார் – எம்ஜிஆரை சூப்பர் மேனாக காட்டும் முயற்சி..

Review By
K Jatachabdhiran
trending cinemas now.com
