படம்: தங்கலான்
நடிப்பு: விக்ரம், பூ பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல்,
தயாரிப்பு: நேஹா ஞானவேல்ராஜா
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
அரங்கம்: மூர்த்தி
ஒளிப்பதிவு: ஏ கிஷோர் குமார்
இயக்கம்: பா ரஞ்சித்
பி ஆர் ஓ: யுவராஜ்
தங்கலான் இயக்குனர் பா ரஞ்சித் படமா, சீயான் விக்ரம் படமா என்றால் இது இருவரது படமும்தான். . பா. ரஞ்சித் தனது அரசியல் பேசி இருக்கிறார், அந்த அரசியலை தனது பாணியில் அடித்து நொறுக்கி வெளிப்படுத்தி யிருக்கிறார். நடித்திருக்கிறார் விக்ரம்.
சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் காலகட்டத்தில் ஒருபுறம் மிராசுகளின் பிடியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அடிமைகள் போல் சிக்கி தவிக்கின்றனர். நிலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சொந்தமானது, அந்தக் காட்டை திருத்தி உழைத்து நெல்லை விளைய வைப்பதும் ஒடுக்கப்பட்ட வர்கள் வேலை ஆனால் அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை. அவர்களை அடிமை போல் நடத்தும் மிராசு களுக்கு தான் அத்தனையும் சொந்தம். பொறுத்து பொறுத்து பார்த்த தங்கலான் ஆதிக்க மிராசுவை எதிர்க்க துணிகிறான் .அந்த நேரம் பார்த்து தங்கம் கிடைக்கும் இடத்தில் சுரங்கம் தோண்டி தங்கம் எடுத்து தர வேண்டும் என்று தங்கலானிடம் பிரிட்டிஷ் அதிகாரி கேட்பதுடன் அதற்கான சம்பளமும் தருகிறேன் தங்கத்தில் பங்கும் தருகிறேன் என்று வாக்குறுதி தருகிறார். அதை நம்பி யானைமலை பக்கம் உள்ள பகுதியில் தங்கத்தை எடுக்க தனது கூட்டத்தினரை தங்கலான் அழைத்துச் செல்கிறான். அவர்களால் தங்கம் வெட்டி எடுக்க முடிந்ததா? அந்த தங்கத்தில் அவர்களுக்கு பங்கு கிடைத்ததா? என்பதற்கெல்லாம் கிளைமாக்ஸ் ரத்தமும் சதையுமாக பதில் அளிக்கிறது.
தங்கலான் பாத்திரத்திற்கு விக்ரமைத் தவிர வேறு எந்த நடிகருமே பொருத்தமாக இருந்தி ருக்க முடியாது என்பதை 100 சதவீதம் தனது நடிப்பின் மூலம் அறுதியிட்டு காட்டி இருக்கிறார்.. உடல் பொருள் ஆவி அத்தனையும் தருவார்கள் என்பவர்களே அதனை இந்த கதாபாத்திரத்திற்காக விக்ரம் தந்திருக்கிறார்.
தங்களை அடிமையாக வைத்தி ருக்கும் மிராசுவிடமிருந்து தம் இனத்தை காப்பதற்காக பிரிட்டிஷ் அதிகாரியிடம் ஒப்பந்தம் பேசும் விக்ரம் அதற்காக தனது இன மக்களை தங்கம் வெட்டி எடுக்க காடு மலை தாண்டி அழைத்துச் செல்வது நம் கால்களை பதம் பார்க்கிறது. அந்தளவுக்கு கரடு முரடு, பாம்பு தேள், அமானுஷ்யங்கள் என்று அத்தனையும் தங்கலான் அதாவது விக்ரமுடன் சேர்ந்து அவரது இன மக்களும் அனுபவிப்பது கண்களில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கிறது.
தங்கத்தை எடுக்க மலையை தோண்டும்போது அங்கிருந்து பாம்புகள் சீறி வர அவற்றை கைகளால் பிடித்து இரண்டாக பீய்த்து எறியும்போது விக்ரமின் முரட்டுத்தனம் நரம்பை முறுக்கேற்றுகிறது.
பாறையின்.மீதும் கட்டான் தரை மீதும், பள்ளத்திலும் மேட்டிலும் எத்தனை முறை விக்ரம் விழுந்து எழுந்து நடித்திருப்பாரோ எவ்வளவு ரத்த காயம் பட்டிருப்பா ரோ என்பதை கணக்கிட முடியாதளவுக்கு உடலில் ஆடை கூட இல்லாமல் கோவணம் மட்டும் அணிந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் அவர் நடித்திருப்பது இதைவிட ஆஸ்கருக்கு என்ன நடிப்பு தேவை என்ற கேள்வி எழ வைக்கிறது.
கங்கம்மாவாக நடித்திருக்கும் அந்த குண்டு பெண் பூ பார்வதியா? ஆச்சரியப்பட வைக் கிறார் . ஜாக்கெட் அணியாமல் அவர் நடித்திருக்கும் எதார்த்தமான காட்சிகள் விக்ரமுடன் உழைப்பை நடிப்பில் பங்கு போட்டு கொண்டு பாத்திரத்தோடு ஒன்றி இருக் கிறார்.
மாளவிகா மோகனனை எங்கே காணோம் என்று தேடிக் கொண்டி. ருக்கும்போது அவர்தான் சூனியக் காரி ஆரத்தி ஆக வேடம் ஏற்றிருக்கிறார். மாஸ்டரில் விஜயுடன் பார்த்த அந்த மாளவிகா மோகனனா இவர், அடையாளமே தெரியவில்லை.
பசுபதி தன் இன மக்களை யாரும் நீச்சமக்கள் என்று கூறி விடக் கூடாது என்பதற்காக பூணூல் போட்டுக் கொண்டு உடலெங்கும் நாமத்தை தீட்டிக்கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று ராமானுஜரை பின்பற்றுவது போல் காட்டுவதும் தங்கலான் பேச்சைக் கேட்டு தங்கம் எடுக்கச் சென்று உடலில் கல்லடி காயங்கள் பட்டு துடிப்பதெல்லாம் கடுமையான காட்சிகள்.
இதேபோல் உடன் நடித்திருக்கும் துணை நடிகர்களும் மாண்டாலும் பரவாயில்லை என்றுதான் நடிதிருப்பார்கள் போலிருக்கிறது அடியையும் அனலையும், ஆக்ரோஷ புயலையும் அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
“சாவுக்கு துணிந்தவன்தான் இங்கு உயிர் வாழ முடியும்” என்று விக்ரம் பேசும் ஒரே வசனம் ஒடுக்கப்பட்ட வர்களை எந்த அளவிற்கு மிராசுகளும் மேலின மக்களும் கசக்கிப் பிழிந்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக படம்பிடிக் கிறது. இந்த போராட்டம் பாட்டன் காலம், பூட்டன் காலத்திலிருந்து நடக்கிறது இன்றும் நடக்கிறது எதிர்காலத்திலும் நடக்கும் என்று விக்ரம் பேசினாலும் அது இயக்குனர் பா ரஞ்சித்தின் குரலாகவே எதிரொலிக்கிறது
பா ரஞ்சித் அரசியல் பேசுவது தவறல்ல ஆனால் எல்லா படத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் மட்டுமே பேசுகிறாரே என்ற ஒரு ஆதங்கம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. தாழ்ந்த சாதியினர் மட்டுமே தான் இந்த அடிமைத் தனத்திற்கு ஆட்பட்டார்களா அதே அதிகார வர்க்கத்திற்கு பிற சாதியினர் பட்ட அவதி எல்லாம் எடுத்து கூறப்போவது யார் என்பதுதான் இன்னொரு பெரிய கேள்வியாக தொக்கி நிற்கிறது.
ஏற்கனவே கே ஜி,எஃப் ஒன், கேஜிஎப் 2 என தங்க சுரங்கம் பற்றி கதைகள் வந்திருந்தாலும் தங்கலான் அதற்கு முந்தைய காலகட்டத்தை தொடும் கதையாக வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் இருந்து கோலாருக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறார்கள் அவர்கள் எப்படி அடிமை போல் அங்கு நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று நம்மை நேரில் காண வைக்கும்படியான அழுத்த மான காட்சிகளை கண்முன் விரிய வைத்து இருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித். அதனை ஒரு தூசி கூட மிஸ் ஆகிவிடாமல் கேமரா மூலம் பதைபதைக்கும் காட்சிகளாக படமாகி தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ கிஷோர் குமார்.
படத்திற்கு பின்னணி இசையில் அதிரவிட்டிருக்கும் ஜி வி பிரகாஷ் பாடலில் . சந்தோஷத்தையும், ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
மலை குகை அரங்கு, தங்க சுரங்க அரங்கு என்று தத்ரூபமாக அரங்குகள் அமைத்திருக்கும் .மூர்த்தி அதேபோல் ஸ்டண்ட் காட்சிகள் அமைத்த ஸ்டன்t மாஸ்டர் உழைப்பும் படத்திற்கு தூண்.
தங்கலான் – புரட்சியில் ஒரு மிரட்சி..
By Jayachandhiran