தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க 2025 ஆண்டு தீபாவளி மலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் , சி.வி.கணேசன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் மற்றும் நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் நா.இளங்கோவன், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியது:
சமுதாயத்தில் பத்திரிகைகள் பல்வேறு புரட்சிகளை காலம் காலமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. பலரது உயர்வுக்கும் வாழ்வுக்கும் பத்திரிகைகள் எவ்வளவோ துணை புரிந்திருக்கின்றன. சில நேரங்களில் சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் வெளியிட்டு அது குறிப்பிட்ட நபர்களை பாதிக்கும் விதமாக அமைந்துவிடுகிறது.
என்னை பற்றி கூட ஒரு பத்திரிக்கையில் ஒரு நிருபர் , நான் குடித்துவிட்டு படபிடிப்பு நேரத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாக எழுதினார். அதற்கு காரணம் அவர் என்னிடம் வந்து பணம் கேட்டார் நான் தர மறுத்து விட்டேன். அந்த கோபத்தில் என் மீது அவதூறு எழுதினார் .ஆனாலும் பத்திரிக்கையாளர் கங்காதரன், நான் கார் வைத்திருக்கிறேன் டிரைவர் வைத்துக் கொள்வதில்லை. எங்கு சென்றாலும் அவர் காரை அவரே ஓட்டிச் செல்வார். அதனால் அவர் மதுவே குடிப்பதில்லை என்று எழுதி எனது நியாயத்தை வெளிப்படுத்தினார். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் இன்று தீபாவளி மலர் வெளியீட்டு விழாவை நடத்துவது சிறப்பானது சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு எம்.எஸ். பாஸ்கர் பேசினார்.
போலீஸ் உதவி கமிஷனர் நா.இளங்கோவன் பேசியது:
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க தீபாவளி மலர் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. நான் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் எனக்கு எழுத்திலும், பேச்சிலும் ஆர்வம் உண்டு. நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் நான் பேரூரை கூட ஆற்றுவேன். இந்த விழாவில் பங்கேற்று இருக்கும் அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்குவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் பேசியதாவது:
இச்சங்கத்தின் தலைவி கவிதா எனது நண்பர். எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் கேட்பார். ஆனால் அந்த உதவி தனிப்பட்ட முறையில் அவருக்கானதாக இருக்காது அது எல்லோருக்கும் பயன்படும்படியான ஒரு பொதுவான உதவியாகத்தான் இருக்கும்
இந்த விழாவில் பங்கேற்க அமைச்சர் வந்திருக்கிறார். அவர் தனது முக்கிய அலுவல் நேரத்திலும் இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பதற்கு காரணம் விழாவுக்கு வருவதாக அவர் கொடுத்த வாக்குறுதிதான். கடலூரில் இடி விழுந்து விவசாயிகள் சிலர் இறந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு முதல்வர் சார்பில் நிவாரணம் அளித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை வந்து இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்றிருக்கும் நிருபர்கள் பலர் எனக்கு அறிமுகமானவர்கள் எனது நண்பர்கள். தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சங்கத்துக்கு தேவையான உதவிகள் பற்றி இங்கே சங்கத் தலைவி கோரிக்கையாக வைத்தார். சங்க லெட்டர் பேட்டில் அந்த கோரிக்கைகளை எழுதி தந்தால் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று அந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முயற்சிப்பேன்.
இவ்வாறு பூச்சி முருகன் கூறினார்.
நடிகை ரேகா பேசியது: சினிமாவில் நிறைய படங்களில் நல்ல கேரக்டரில் நடித்துள்ளேன். நம் நினைவுகளை திரும்பி பார்க்க வைப்பது, நாம் நடித்த படங்களின் போட்டோக்களும், அந்த படங்கள் குறித்து பத்திரிகையில் வந்த செய்திகளும் தான். இப்போது யூட்யூப் சோஷியல் மீடியா வந்துவிட்டது. ஆனாலும், ஆனந்தவிகடன், ராணி, குமுதம், தினத்தந்தி, தினமலரில் வந்த செய்திகளை, போட்டோவை மறக்க முடியுமா? அதை பொக்கிஷமாக வைத்து இருக்கிறேன். நான் பலருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கான காலம் வரும் அந்த நேரத்தில் நான் முடிந்த உதவியை எல்லோருக்கும் செல்வேன்.
இந்த தீபாவளியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
சங்க தலைவர் எஸ்.கவிதா பேசியது: எங்கள் சங்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் போலீஸ் அதிகாரி, நடிகர் சங்க துணை தலைவர், நடிகை ரேகா, எம் எஸ் பாஸ்கர், பட தயாரிப்பாளர் சம்பத்குமார் ஆகியோர் எங்கள் சங்க விழாவில் பங்கேற்று வாழ்த்த வந்ததற்கு நன்றியும் வணக்கம்.
பத்திரிகை துறையினருக்கு அரசு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. ஆனால் அந்த வரிசையில் சினிமா பத்திரிகையாளர்களை அரசு என்றைக்குமே கண்டு கொண்டதில்லை. இது குறித்து ஏற்கனவே கூட இவ் விழாவில் பங்கேற்ற அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதன் பிறகும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. எனவே எங்கள் சங்கத்துக்கு அலுவலகம் இல்லாத நிலையில் குறைந்த வாடகையில் ஒரு அலுவலகம் வீட்டு வசதி குடியிருப்பில் ஒதுக்கி தர வேண்டும் அல்லது நடிகர் சங்கத்திலாவது ஒரு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் சி.வி.கணேசன் பேசியது: முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு நன்றியும், வணக்கமும். அண்ணன் சகோதரர் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனிஇடம் பெற்றுருக்கிறார். அவர் ஒரு மாமனிதர்.அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், ஏன் நான் கூட அவர் அனுமதியுடன் அறிவாலயம் செல்ல முடியும். அவர் அனுமதியுடன்தான் கட்சி தலைவரை சந்திப்பேன்அங்கே எங்களை நன்கு உபசரிப்பார். அப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கிறார். இந்த பத்திரிக்கை சங்கத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். உள்ளாட்சி அமைப்புக்கு 2 முறை,
, சட்டசபைக்கு 4 முறை, பார்லிமென்ட்டுக்கு ஒருமுறை என மொத்தம் ஏழு முறை தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன்., 26 வயதில் தொடங்கி, பூச்சி முருகன் அண்ணனுடன் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றியுள்ளேன். போட்டி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கணும். நிலவில் துணிச்சலாக, முதலில் களம் இறங்கியதால் ஆம்ஸ்ட்ராங் வரலாற்றில் இடம் பிடித்தார். வாழ்க்கையில் முன்னேற துணிச்சல், லட்சியம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். அவரே வெற்றியாளனாக மாறுகிறார். மேலும் குடும்ப உறுப்பினர்களை மதிக்க வேண்டும் . இவ்வாறு அமைச்சர் கணேசன் பேசினார்.
பின்னர் தமிழ்நாடு திரைப்பட பத்திரிகாலம் சங்க தீபாவளி மலரை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் வெளியிட்டனர்.
விழா நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் அமுதவாணன் நகைச்சுவையாக தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்பு உரை ஆற்றினார்.
முடிவில் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்பு, தீபாவளி பொருட்கள், புத்தாடை அடங்கிய 8 பொருட்கள் தீபாவளி பரிசுடன், சிறு தொகையும் வழங்கப்பட்டன.