திரையுலக அஷ்டவதானி டி.ராஜேந்தர் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்தார்.
டி.ராஜேந்தருக்கு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக அவரது மகன் சில்பம்பரசன் டி.ஆர். முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்துவந்தார். தற்போது அதற்கான விசா கிடைத்ததை யடுத்து இன்று டி.ராஜேந்தர் அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் டி.ராஜேந்தர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை இரண்டு முறை நேரில் சந்தித்து நலம்பெற வாழ்த்தினார். என் மீது எனது அரசியல் ஆசான் தலைவர் கலைஞர்தான் பாசம் வைத்திருந்தார். அவர் மறைந்தபிறகு என் மீது பாசம் காட்ட யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் கலைஞரின் மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை தோளில் தட்டிக்கொடுத்து நலம் விசாரித்தபோது அவர் என் மீது வைத்திருக்கும் பாசத்தை தெரிந்துக் கொண்டேன். அதேபோல் அவரது மகன் உதயநிதி என்னிடம் நலம் விசாரித்தார். இதை என் வாழ்வில் மறக்கமாட்டேன்.
ஜி.கே.வாசன், பாரிவேந்தர், எனது நண்பர் கமல்ஹாசன் ஆகியோர் என்னிடம் நலம் விசாரித்தனர். நான் விரைந்து குணம் ஆக வேண்டும் என்று எனது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் பலரும் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் எனது நன்றி. என் நம்பிக்கைக்கும் மேல் ஆண்டவன்தான் என்னை இன்று உங்கள் முன் நின்றுபேசும் அளவுக்கு அருள் செய்திருக்கிறார். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் அக்கறையோடு சிகிச்சை அளித்து பார்த்துக்கொண்டனர். என் மகன் சிலம்பரசன் டி.ஆர் எனக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கான. அத்தனை முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக் கிறார். அவருடன் ஐசரி கனேஷும் அதற்கான உதவிகள் செய்துவருகிறார்.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.