கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான் . ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெப்போலியன், லால், பொன்வண்ணன், மயில்சாமி, சென்றாயன், பிரின்ஸ், காமராஜ் ஆகியோ ருடன் 100 ஜிம்பாய்ஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.ஸ்ரீதர் தயாரித்துள்ளனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு. விவேக் மெர்வின் இசை. யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை. ரூபன் எடிட்டிங்.
இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது.
இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஓட்டலில் சுல்தான் படத்தின் வெற்றி விழாவும், நன்றி தெரிவிக்கும் கூட்டமும் நடந்தது. படக் குழுவினர் கலந்துகொண் டனர்.
சுல்தான் வெற்றி விழாவில் நடிகர் பொன்வண்ணன் பேசியது:
காலத்தின் பேரன்பு அனைவருக்கும் கிடைக்கட்டும். அப்படி கிடைத்த காலத்திற்கு நன்றி. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு தொடங்கியது. இப்படமும் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த ஊரடங்கின் முக்கிய நோக்கம் அனைவரும் ஒன்றிணைய கூடாது என்பது தான். சில தொழில்கள் தங்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் ஒன்று விவசாயம். அதில் முதலிலும், பெரிதும் பாதிக்கப்பட்டது சினிமாத் துறை தான்.
நடிகர் கார்த்தியுடன் அவர் நடித்த முதல் படத்தில் ஒன்றரை வருடம் காலம் பயணித்திருக்கிறோம். அதன்பிறகு, நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘சுல்தான்’ படத்தில் தான் பணியாற்றினோம். அதற்கிடையில், அவர் பல நிலைகளில் நடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால், கார்த்தியிடம் முதல் படத்திற்கும், ‘சுல்தான்’ படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சில பொறுப்புகள் கூடியிருப்பதை மட்டும் தான் பார்த்தேன்.
நடிகர் கார்த்தியைப் பற்றி கூறுவதற்கான உற்ற நேரமும், ஏற்ற சூழலும் இது என்பதால் தான் கூறுகிறேன். ஒரு ஓட்டல் தொழில் என்றால் சிறிது காலத்தில் அதை நன்றாக வளர்த்து, சில வருடங்களில் உலகம் முழுவதும் கூட கிளைகளைப் பரப்பி வளர்ச்சியடையலாம். ஆனால், ரஜினி சார் அப்படி வளர்க்க முடியாது. அவர் ஒவ்வொரு படத்தையும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். முதல் படத்தில் செய்த பணியை ஒவ்வொரு படத்திலும் செய்தாக தான் வேண்டும். இந்த பெருந்தொற்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பிடிவாதமாக திரையரங்கில் வெளியிட காத்திருந்தமைக்கு நன்றி.
நடிகர் மயில்சாமி பேசியது:
என்னால் மறக்க முடியாத படம் ‘சுல்தான்’. ஆனால், நான் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்றதால், இப்படம் வெளியானதில் கவனம் சிறிது குறைந்து விட்டது.
எனக்கு இப்படத்தில் மறக்க முடியாத என்று கூறியது, என் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து விட்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு என்று அழைக்கக் கூடாது. மகாபிரபு என்று தான் அழைக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளின் திருமணம் சமயத்தில் பொருளாதார உதவி செய்தவர் எஸ்.ஆர்.பிரபு.
இப்படத்தில் நான் இருக்கிறேனா? நான் நடித்த காட்சிகள் வருமா? என்று கேட்டேன். இறுதியாக நீங்கள் பேசும் வசனம் தான் வரும் என்று கூறினார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். விவசாயம் சார்ந்த படத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு குறைந்தது 400 பேருக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். அதைச் சிறப்பாக செய்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி என்றார்.
நடிகர் அர்ஜித் பேசியது:
இப்படத்தில் நடித்ததன் மூலம் தினமும் பலரும் தொடர்பு கொண்டு ‘தலையா’ என்று எனது கதாபாத்திரத்தின் பெயர் கொண்டே அழைக்கிறார்கள். இதற்காக எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. நடிகர் கார்த்தி அண்ணாவிடம் நிறைய கற்றுக் கொண்டேன். கண்ணன் அண்ணனிடம் நான் ஓரமாக நிற்பது போன்றே தோன்றுகிறது என்று கேட்டேன். அவர் அமைதியாகவே இருப்பார். ஆனால், படம் பார்த்தவர்கள் அதுபற்றி பேசும்போது என் கதாபாத்திரத்தை வலிமையாக அமைத்திருக்கிறார் இயக்குநர் என்பது தெரிகிறது..
குள்ள நடிகர் பிரபு பேசியது:
சிறுவயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி எனது புகைப்படத்தை கொடுத்து வந்தேன். பிறகு, திருப்பூருக்கு சென்று விட்டேன். அங்கிருந்தே இப்படத்தின் வாய்ப்பு வந்தது. இப்படத்தை பார்த்துவிட்டு திருப்பூர் திரையரங்கில் வெளிவரும் போது அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்.
நடிகர் காமராஜ் பேசியது:
பெரிய ஜாம்பவான் நடித்திருக்கும் இப்படத்தில், நான் நடித்ததற்காக எனது சொந்த ஊரில் நன்றாக நடித்திருக்கிறாய். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினார்கள். பாடி பில்டருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் பாடி பில்டர் போட்டியில் கலந்து கொள்ள எங்களுக்குள் சில ரகசியங்கள் இருக்கும். அதை அதற்கான இடத்தில் கூற மாட்டோம். ஆனால், நடிகர் கார்த்தி அந்த ரகசியத்தைக் கூறினார். அது நான் நடிப்பதற்கு என்னை ஊக்கப்படுத்தியது. அதற்காக நடிகர் கார்த்திக்கு நன்றி.
நான் மிஸ் இந்தியா பட்டம் வென்ற போது நீ இதற்காக கடவுளால் படைக்கப்பட்டவன் என்று கூறினார்கள். அதுபோல, சினிமாவிற்காக படைக்கப்பட்டவர் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். அவரிடம் பல திறமைகள் இருக்கின்றது என்றார்.
நடிகர் சென்றாயன் பேசியது:
திரையரங்கில் கைத்தட்டல் வாங்கி நீண்ட நாள் ஆகின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். அது ‘சுல்தான்’ படத்தில் நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநரிடம் எனக்கு இப்படத்தில் ஏதாவது பஞ்ச் வசனம் கொடுங்கள் என்று கேட்டேன். உனக்கு இப்படத்தில் காது கேட்காது, அதை வைத்து ஒரு பஞ்ச் இருக்கிறது என்று கூறினார். நடிகர் கார்த்தி சாரும் ஆமாம், இருக்கிறது பொறுங்கள் என்றார். அதேபோல, நான் நடித்த அந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள் விழுந்தது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தேன். அங்கு இருக்கும் திரையரங்கில் நான் சிறு வியாபாரி. இப்போது அந்த திரையரங்கில் நான் நடித்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது பெற்றோர் பார்த்துவிட்டு நீ நடித்த காட்சிகளுக்கு பலத்த கைத்தட்டல் ஒலிக்கிறது என்று கூறினார்கள்.
இசையமைப்பாளர்கள் விஜய், மெர்வின் பேசியது:
விஜய் (மெர்வின்) பேசும்போது,இங்குள்ள படக்குழுவினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக் கொள்கிறோம்’:என்றார்
மெர்வின் (விஜய்) பேசும்போது,’விடியற்காலை 4 மணிக்கு அனைவரும் குடும்பத்துடனும், அதேசமயம் முககவசம் போன்ற பாதுகாப்போடு வந்து பார்த்தார்கள். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கதைகூறும் போது எப்படி இருந்ததோ அதைவிட திரையில் நன்றாக வந்திருக்கிறது. எங்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி’ என்றார்.
படத்தொகுப்பாளர் ரூபன் பேசியது:
100 பேரை வைத்துக் கொண்டு தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. அதை பிரமாண்டமாக சிறப்பாக தயாரித்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு. மேலும், சிறு படங்கள் கூட ஓடிடியில் வெளியிடும்போது, மீண்டும் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி.
அதேபோல, இப்படத்திற்கு கொரோனா பீதியிலும், குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து செல்கிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகனின் பெயர் என்ன? அபிமன்யு, சுல்தான், 100 தலை இராவணன், விக்ரம், கிருஷ்ணன், ஓரங்கா என்று ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும். இதில் எந்த பெயர் என்று எனக்கும், இயக்குநருக்கும் நகைச்சுவையான பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும். எங்களுக்கும் மட்டுமல்ல, இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும். எனக்கு என் அம்மாவைப் பிடிக்கும். அதுபோல சினிமாவைப் பிடிக்கும். சினிமா நீண்ட காலம் வாழ வேண்டும், என்றார்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பேசியது:
கார்த்தியை இப்போது சுல்தான் என்று அழைக்கிறார்கள். அதுபோல, எஸ்.ஆர்.பிரபுவும் சுல்தான் தான். இப்படம் ஆரம்பத்திலிருந்தே பெரிய போராட்டமாக தான் இருந்தது. எங்களுக்கு சவாலாக இருந்தது வெப்பநிலை தான். காலையில் நாங்கள் எதிர்பார்த்த வெப்பநிலை மாலையில் தான் கிடைக்கும். அவ்வளவு நேரமும் காத்திருந்துதான் எடுப்போம் என்றார்.
எஸ்.ஆர்.பிரபு பேசியது:
எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் துறைக்கும் சிறப்பான படம் ‘சுல்தான்’. திரைத்துறையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்கள். நாங்களும் இடையில் ஓடிடிக்கு போகலாம் என்று நினைத்தோம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால், இப்படம் திரையரங்கிற்கான படம் என்பதால் பிடிவாதமாக திரையரங்கிற்கே கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். எங்களைப் போலவே படம் எடுத்துவிட்டு வெளியிட காத்திருந்தவர்கள், உங்கள் படத்தின் வரவேற்பைப் பார்த்துவிட்டு தான் நாங்கள் எங்கள் படங்களை வெளியிடுவோம் என்று கூறினார்கள். அவர்களின் நம்பிக்கைக்காகவும் இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டோம். இதற்கு கார்த்தி அண்ணாவிற்கும், சூரியா அண்ணாவிற்கும் நன்றி.
பெரும்பான்மையான விமர்சனங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனாலும், ஒருசில எதிர்மறையான விமர்சனங்களும் இருந்தது. அதைத்தாண்டி, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சமயத்தில் ‘கர்ணன்’ படமும் வெளியாக இருக்கிறது. அப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தில் இறுதிவரை எங்களுக்கு லால் சார் ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றி என்றார்.
நடிகர் லால் பேசியது:
நான் சுலபமாக தமிழில் பேசுவேன். ஆனால், உங்களுக்கு புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும். சுல்தான் மாதிரி பிரமாண்டமான படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் சண்டை, நடனம், நடிப்பு, உணர்வுரீதியாக என அனைத்தும் இருக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
அதைவிட, இப்படத்தில் லால் நன்றாக நடித்திருக்கிறார் என்று செய்தி, வீடியோ வருவதைப் பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறது. இப்படத்தில் முரட்டுத்தனமாக உடலமைப்பு உள்ளவர்களுக்கு சிறிய அழகான மனசு இருக்கிறது. அதேபோல, சிறிய உடல் கொண்ட பிரபுவிற்கு பெரிய மனது. இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேசியது:
இப்படத்தை திரையரங்கிற்கு கொண்டு சென்ற எஸ்.ஆர்.பிரபு, அதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் சுல்தான் கார்த்தி சாருக்கும் நன்றி. இப்படத்தை பார்த்தவர்கள், முதலில் நான் சென்றேன், பிறகு எனது குடும்பத்தை அழைத்துச் சென்றேன். எனது பெற்றோர்கள் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்கிறார்கள் என்று என்னை தொடர்பு கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படத்தில் எனக்கு அப்பாவாக இருந்தது லால் சார் தான். சுல்தான் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், படப்பிடிப்பில் நான் மறந்தாலும் கூட அவர் நினைவு வைத்திருந்து பணியாற்றினார். என் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருப்பார் என்று கூறினார். ஆனால், லால் சார் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்த நெப்போலியன் சாருக்கு நன்றி. சுயேட்சையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை செல்ல வேண்டும் என்று நடிகர் மயில்சாமி அண்ணனை வாழ்த்துகிறேன். முதல் பாட்டிலிருந்து இறுதிவரை படம் சிறப்பாக வருவதற்கு இசையமைப்பாளர்கள் தான் காரணம். அவர்களுக்கு நன்றி. இறுதியாக, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் இருக்கும் பலம் அதற்காக அவருக்கு நன்றி என்றார்.