படம்: வீரபாண்டியபுரம்
நடிப்பு: ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா, பால சரவணன், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கர், சரத் லோகிதாஸ்
தயாரிப்பு: லெண்டி ஸ்டியோஸ் எஸ்.ஐஸ்வர்யா
இசை: ஜெய்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இயக்கம்: சுசீந்திரன்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா
இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் காதல், மோதல் போக்குடன் உருவாகி இருக்கிறது வீரபாண்டியபுரம்.
அனாதையான ஜெய் , சாதி, கவுரவம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாழும் சரத் லோகிதாஸ் மகளை கோவிலில் வைத்து மணக்கப்போகும் நிலையில் திடீரென்று மனம் மாறும் ஜெய், ”நம் கல்யாணம் உன் குடும்பத்து சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும்” என்று சொல்கிறார். திருமணத்தை தடுத்த நிறுத்த கோபமாக வரும் சரத் லோகிதாஸ், ஜெய்யின் முடிவை கேட்டு கோபத்தை பாசமாக மாற்றிக்கொள்கிறார். ”உங்கள் இருவருக்கும் நானே திருமணம் செய்து வைக்கிறேன்” என்று தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இந்நிலையில் ஜெய்யை திருமணத்தன்று கொல்வதற்காக சரத் லோகிதாஸ் திட்டமிடுகிறார். அதேபோல் சரத் லோகிதாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜெய் பழி வாங்க எண்ணுகிறார். அதற்கான காரணம் என்ன? ஜெய் திருமணம் நடந்ததா? அல்லது பழிவாங்கும் படலம் நடந்ததா? என்பதற்கு வீரபாண்டியபுரம் பதில் சொல்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெய் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கண்முன் வந்து நின்றிருக்கிறார்.
ஹீரோயினுக்கு அடங்கி நடந்து அவர்களை காதலில் விழ வைக்கும் அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் ரசிகர் களை ஈர்த்து வந்த ஜெய் இப்படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோ வாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். இனிமேலும் அப்பாவி வேஷம் போட விடாமல் ஜெய்யை ஆக்ஷன் ஹீரோவாக இயக்குனர்கள் பார்க்க வேண்டும் என்ற முயற்சிக்கு சுசீந்திரன் பிள்ளையார் சுழி போட்டுவிட்டிருக் கிறார். அதற்கு தகுந்தாற்போல் ஜெய்யும் அரிவாள், அடிதடி என மிரட்டி இருக்கிறார்.
இப்படத்தில் கூடுதல் பொறுப்பாக இசை அமைப்பாளராகவும் ஜெய் உழைத்திருக்கிறார். ஏற்கனவே இசை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ரசிகர்களின் ரசனை தெரிந்து மெலடி மெட்டுக்களில் கவர்கிறார்.
மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். இருவரும் இயக்குனர் சொன்னதை கிளிப்பிள்ளைகள்போல் செய்திருக்கின்றனர்.
இரண்டு கிராமத்தின் முக்கிய புள்ளிகளாக ஜெயபிரகாஷ், சரத் கோகிதாஸ் நடித்துள்ளனர். இவர்களின் பகையே கதையை கிளைமாக்ஸ் வரை வேகமாக நகர்த்தி செல்கிறது.
வெண்ணிலா கபடி குழு போன்ற இயல்பான கதைகளை இயக்கி அளித்த சுசீந்திரன் அவ்வப்போது ஆக்ஷன் கதைகளுக்குள்ளும் தனது திறமையை வெளிப்படுத்துகிறார். குறுகிய காலத்தில் படங்களை இயக்கும் என்ற கலையை கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சுசீந்திரன் அதற்கேற்ப கதைகளையும் ஒரு சில திருப்பங்களுடன் படத்தை இயக்கி முடித்து விடுகிறார். குறுகிய காலத்தில் படம் இயக்கினார் என்பதைவிட பல இயல்பான கதைகளும், பிரமாண்ட படங்களும் இவரிடமிருந்து வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வீரபாண்டியபுரம் படத்துக்கான ஒளிப்பதிவை கதையின் தன்மைக்கேற்ற கலர் டோன்களுடன் அழகாக செய்து முடித்திருக்கிறார் வேல்ராஜ் .
இசை அமைப்பாளராகவும் மாறியிருக்கும் ஜெய்க்கு இது தொடக்கம்தான். இசைக்கும் கூடுதலாக செலுத்தினால் காலத்தால் அழியாத பாடல்களை இவரால் தர முடியும் என எதிர்பார்க்கலாம்.
வீரபாண்டியபுரம் – காதல், ஆக்ஷன், பழிக்கு பழியுடன் கூடிய கமர்ஷியல் கலவை.