அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்”
கொரோனா 2 – வது அலை தனது கடுமையான தாக்கத்தால் மக்களை பரிதாபகரமான நிலைக்கு தள்ளியுள்ளது. கொடிய நோய்த்தொற்றிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே தீர்வாக நம் கண்முன் இருப்பது தடுப்பூசி மட்டுமே.
அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வது மிகமிக அவசியம் என்ற அடிப்படையில், தமிழக அரசு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அனைத்து தரப்பினருக்கும் எளிதில் தடுப்பூசி கிடைப்பதற்கு ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசிகளை வழங்க அரசு உத்தரவிட்டால் காலதாமதமின்றி மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு பயன்பெறுவார்கள். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலால் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் ஓரளவிற்கு இயல்புநிலைக்கு திரும்பி மக்கள் தங்களது தொழில்களில் கவனம் செலுத்தி பொருளாதார தேவையை பூர்த்தி செய்து வந்த சமயத்தில் இந்த கொரோனா 2 – வது அலை மீண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அக்டோபரில் 3 – வது அலை வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்ற நிலையில், பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி திட்டமிடுவது மிகுந்த அவசியமாகிறது. அந்த வகையில், பெரிய தொழில், சிறிய தொழில் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான பொருளாதார திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் வகுக்க வேண்டும். சவரத்தொழில், அழகுநிலையம் உடற்பயிற்சிகூடங்கள் போன்ற அமைப்புசாரா தொழில்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உரிய நிவாரண உதவி செய்திட வேண்டும்.
முக்கியமாக, மாதத்தவணை செலுத்தாத குடும்பங்கள் இல்லை என்ற வகையில் ஒவ்வொரு வீட்டிலும் வங்கிக்கடன், வாகனக்கடன், சொந்த கடன் என ஏதேனும் ஒரு கடனுக்கு மாத்தவணை செலுத்தி வருகிறார்கள். அத்தகைய வங்கிக்கடன்கள் / தனியார் நிறுவனிடம் பெறப்பட்ட கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கியோ, வட்டிகளை தள்ளுபடி செய்தோ உதவிட மத்திய அரசு முன்வருவதற்கு தமிழக அரசு அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும், தமிழகத்திற்கு தேவையான கொரோனா பேரிடர் சிறப்பு நிவாரண நிதியை கேட்டு பெற்று மக்கள் சிறப்பாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
பொதுமக்கள் அரசின் நடவடிக்கைக்கு முழுஒத்துழைப்பு வழங்கி, ஒற்றுமையுடன் விழிப்புணர்வாக இருந்தால் கொரோனா இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட முடியும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
இவ்வாறு ரா.சரத்குமார் கூறி உள்ளார்.