படம்: மண்டேலா
நடிப்பு: யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி
தயாரிப்பு: ஒய் நாட் ஸ்டுடியோ, எஸ்,சசிகாந்த், ரிலையன்ஸ் எண்டர்டெயின் மெண்ட், விஷ்பெரி பிலிம்ஸ், ஒப்பன் விண்டோ புரடக்ஷன் பாலாஜி மோகன்
இசை: பரத் சங்கர்
ஒளிப்பதிவு: வித்யூ அய்யண்ணா
இயக்கம்: மடோன்னே அஸ்வின்
ரிலீஸ்: ஏப்ரல் 4ம் தேதி 2021 ஸ்டார் விஜய் டிவி
ஏப்ரல் 9ம் தேதி முதல் நெட்ப்ளிக்ஸ்
யோகிபாபு படமென்றாலே காமெடி களத்தில்தான் இருக்கும் என்ற தோற்றத்தை உடைத்து அர்த்தம் பொதிந்த அம்சத்துடன் உருவாகி இருக்கிறது மண்டேலா.
சூரக்குடி கிராமத்தில் மிகவும் குறைந்த அளவே குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊர்தலைவர் சங்கிலி முருகன். அவருக்கு இரண்டு மனைவி, இரண்டு பிள்ளைகள். மனைவிகளுடன் சங்கிலி முருகன் வாழ்கிறார், பிள்ளைகள் இருவரும் தனியாக தங்கள் மனைவி பிள்ளைகளுடன் வசிக்கின்றனர். இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் சாதியினரை சேர்த்துக் கொண்டு எந்த விவகாரம் என்றாலும் ஏட்டிக்கு போட்டி செய்துக்கொண்டு மோதிக் கொள்கின்றனர். அதே ஊரில் அனாதையாக வாழும் யோகி பாபு மரத்துக்கடியில் சலூன் நடத்தி வருகிறார். பெயரே தெரியாத அவரை எல்லோரும் இளிச்சவாயா , ஸ்மைல் என்று வாய்க்கு வந்தபடி அழைக்கின்றனர். அவரும் எதையும் பெரிதுபடுத்தாமல் ஊர்மக்களுக்கு சிகை திருத்தம் செய்வதுடன் அவர்களுக்கு வீட்டு சாமான்கள் வாங்கி தந்து பிழைப்பு நடத்துகிறார். அந்த ஊருக்கு தபால்காரர் பொறுப்பில் வருகிறார் ஷீலா ராஜ்குமார். மரத்துக் கடியில் சிறுக சிறுக சேமித்த பணத்தை யோகிபாபு வைப்பதை கண்டு அதை திருடி செல்கின்றனர். தபால் ஆபிஸில் தனக்கென ஒரு சேமிப்பு கணக்கு தொடங்க செல்கிறார் யோகிபாபு. உண்மையான பெயர் கிடை யாது, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை என எந்த அடையாளமும் இல்லாததால் கணக்கு தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஷீலாவே அவருக்கு நெல்சன் மண்டேலா என ஒரு பெயரை வைத்து அதை பதிவு செய்து ஆதார், ஓட்டர் ஐடி பெற்றுத் தருகிறார். ஊரில் தலைவர் பதவிக்கு தேர்தல் வருகிறது. சங்கிலி முருகன் உடல்பாதிப்பால் தேர்தலில் நிற்காமல் ஒதுங்குகிறார். அவருக்கு பதிலாக அவரது மகன்கள் தேர்தலில் மோதுகின்றனர். இருதரப்பிலும் சம ஒட்டு பலம் இருக்க யோகிபாபுவின் ஒரு ஒட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை. அவரது வாக்கை பெற இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு அவருக்கு பணத்தையும் பொருளையும் அள்ளித் தருகின்றனர். இருவர் தருவதையும் வாங்கிக் கொள்ளும் அவர் யாருக்கு வாக்களிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
பணம் கொடுத்து ஓட்டு கேட்கும் அரசியல் அநாகரிகத்தை அங்குளம் அங்குளமாக தோலுரித்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின்.
டைட்டில் வேடம் ஏற்கும் ஹீரோ, படத்தில் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமோ அந்த உழைப்பை கொஞ்சமும் குறை வில்லாமல் செய்திருக்கிறார் யோகிபாபு.
மரத்தடியில் ஒரு சேர் போட்டு, பாதரசம் தேய்ந்து போன கண்ணாடி மாட்டி வைத்து சலூன் நடத்தும் யோகிபாபு மரத்தின் மேலே ஒரு தொட்டில் கட்டி அதில் படுத்து ரேடியோவில் பாட்டு கேட்டபடி கவலை எதுவும் இல்லாமல் தூங்கும் அறிமுக காட்சியே படம் வித்தியாசமான அணுகு முறைக்கு அச்சாரமாக இருக்கிறது.
ஊரார் வீடுகளுக்குள் வாசல் வழியாக செல்ல அனுமதி இல்லாத யோகிபாபு புறவாசல் வழியாக சென்று வேலை செய்வதும் அவர்கள் பணத்துக்கு பதிலாக தரும் கஞ்சியை வாங்கிச் செல்வதுமாக காலத்தை கழிப்பது எதார்த்தம்.
ஊரில் திறக்கப்படும் கழிவறையில் யார் முதலில் செல்வது என்று அடித்துக் கொண்டு நாறும் சங்கிலி முருகனின் இரண்டு பிள்ளை களான ஜி எம்.சுந்தர், ரவி கூட்டம் கடைசியில் யாருக்கும் பயன்படாதபடி கழிவறையை இடித்து தள்ளுவது பல ஊர்களில் இன்றும் நடக்கும் சாதி மோதல்களின் வெளிப்பாடு.
ஊர் தலைவர் தேர்தலில் ஜி எம் சுந்தரும் ரவியும் போட்டி போட மனு தாக்கல் செய்த பிறகு ஊர்மக்களுக்கு பணத்தை அள்ளி வீசுவதும் ஒரேயொரு ஓட்டு கிடைத்தால் வெற்றி வாய்ப்பு என்ற நிலையில் யோகிபாபுவின் ஓட்டை பெற அவரை பணத்தாலும் வசதியான பொருட்கள் கொடுத்தும் குளிர வைப்பது ஒரு கட்டத்தில் ஏலத்தில் அவரது ஓட்டை பெற கோடிகளில் ஏலம் கேட்பது என சமூகத்தின் அவலத்துக்கு சம்மட்டி அடி தரப்படுகிறது.
முழுகதையும் யோகிபாபுவின் ஒற்றை வாக்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பணத்தால் அவரை குளிப்பாட்டும் காட்சிகள் சிலவற்றை குறைத்திருந்தால் ரிபீட் காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
யோகிபாவுடன் வரும் அந்த சிறுவன், எதை கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லும் கதாபாத்திரம், சொம்பை தூக்கிக்கொண்டு காலை கடனுக்கு ஒதுங்க இடம் தேடும் கதாபாத்திரம் என தினம் தினம் கிராமத்தில் காணும் காட்சிகளை அப்பட்டமாக பிரதிபலித்திருக் கின்றனர்.
கிளைமாக்ஸில் இருவரில் யார் ஒருவர் ஜெயித்தாலும் இன்னொரு குரூப் யோகிபாவு வை தீர்த்துக்கட்ட ஆட்களை ஏற்பாடு செய்வதும் தான் கொல்லப்படப்போகிறோம் என்று தெரிந்தும் எந்த பதற்றமும் இல்லாமல் சாவுக்கு துணிந்து யோகிபாபு நிற்பதும் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கிறது. அதேசமயம் ஒரு வாக்கால் ஊருக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதையும் அப்படி செய்தால் ஊரே துணை நிற்கும் என்பதையும் காட்டி சிலிர்க்க வைக்கிறார்கள்.
ஷீலா ராஜ்குமார் சமூக அக்கறையுடன் நடிப்பை வழங்கி உள்ளார். சங்கிலி முருகன் கதாபாத்திரம் பெரியார் தாசனாக சித்தரிக் கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் மடோன்னே அஸ்வின் தனது முதல்படத்தை கமர்ஷியல் வெற்றிக்காக இலக்கு வைக்காமல் சமூதய நலனில் கவனம் வைத்து இயக்கி இருப்பது அவரது துணிவை காட்டுகிறது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படமாக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு இசை எல்லாம் சரிசம விகிதத்தில் கலந்திருக்கிறது.
மண்டேலா – பணத்துக்கு வாக்கு விற்பனை செய்பவர்களுக்கு மூக்கறுப்பு.