படம்: பராசக்தி
நடிப்பு: சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா, குலப்பள்ளி லீலா, குரு சோமசுந்தரம், சேத்தன், ராணா டகுபதி, காளி வெங்கட் மற்றும் பலர்
தயாரிப்பு: டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன்
கதை: சுதா கொங்கரா, அர்ஜுன் நடேசன்
வசனம்:சுதா கொங்கரா, அர்சுன் நடேசன், மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி
இசை: ஜி வி. பிரகாஷ்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
இயக்கம்: சுதா
கொங்கரா
ரிலீஸ்: இன்பம் உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ்
பிஆர்ஓ: சதீஷ் ( AIM), சிவா
தமிழில் அத்தி பூத்தார் போல் அவ்வப்போது சில வரலாற்று படங்கள் வந்து நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வரிசையில் பொங்கலையொட்டி திரைக்கு வந்திருக்கும் படம் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி.
கதை: 1959ம் ஆண்டு காலகட்டங்களில் மத்திய ஆளும் வர்க்கத்தினர் இந்தி திணிப்பை நிகழ்த்த தொடங்கினர். அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. புறநானூற்று படை என்ற மாணவர் அமைப்பு இந்தி திணிப்பை எதிர்த்து துடிப்பு மிக்க மாணவர் செழியன் ( சிவகார்த்திகேயன்) தலைமையில் ரயில் எரிப்பு போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க அரக்க குணம் கொண்ட திரு நாடன் ( ஜெயம் ரவி) தலைமையில் அதிரடிப்படை வந்து மாணவர்களை வேட்டையாடுகிறது. இந்நிலையில் இந்தியை ஏற்காத மாநிலங்களில் இரு மொழி கொள்கை தொடரும் என்று மத்திய அரசு அறிவிக்கிறது. அதன் பிறகு சில காலம் ஓய்ந்திருந்த இந்த பிரச்சனை மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு கையில் எடுக்கும் போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதிக்கின்றனர். அந்தப் போராட்டத்தை அடக்க அதிகாரி திரு நாடன் துணை ராணுவ படையையே அழைத்து வருகிறார். மாணவர்களுக்கும், மத்திய அதிகார வர்க்கத்துக்கும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் வெல்வது யார் என்பதை உணர்ச்சி கொப்பளிக்க கிளைமாக்ஸ் சொல்கிறது.
திரைப்படம் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் அதனை திராவிட கருத்துக்களும், மேலாதிக்க வர்க்கத்தினர் சக மக்களை எப்படி அடிமைப்படுத்தி உயரே வரவிடாமல் தடுக்கிறார்களோ அவர்களின் அடக்கு முறையை உடைத்தெறியும்
ஆயுதமாகவும் பயன்படுத்தினார்கள். அந்த உணர்வு மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தி அடக்கு முறையை ஒழித்து ஜனநாயக மாறுதல்களை நிகழ்த்தி காட்டியது. அப்படி ஒரு காலகட்டம் மீண்டும் வரும் ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழ் மொழி காக்க எப்படி எல்லாம் தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடி தியாகச் செம்மல்களாக இருந்தார்கள் என்பதை கண்முன் நிறுத்தும் படமாக வந்திருக்கிறது பராசக்தி.
இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகன் என்ற தங்களின் அடையாளத்தை கழற்றி ஏறிந்து விட்டு மொழிப்போர் தியாகிகளாக மாறி இருப்பது இப்படி எல்லாம் நடிக்கக் கூட இப்போது நடிகர்கள் இருக்கிறார்களா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக செழியன் கதாபாத்திரத்தை ஏற்று புறநானூறு படைத்தலைவராக வரும் சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்தை எப்படி உள்வாங்கினார், அதுவாகவே மாறி ரத்தமும் சதையுமாக எப்படித்தான் நடித்தாரோ என்ற வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறார்.
முதல் போராட்டத்தில் தனது நண்பன் இறந்த பிறகு போராட்ட குணத்தை கைவிட்டு அமைதியாகி வேலைக்கு செல்வதும், அப்போதும் இந்தி திணிப்பால் தனக்கு வர வேண்டிய வேலை கிடைக்காமல் போனதும் மீண்டும் ஒரு புரட்சிக்கு பொங்கி எழும்போது அரங்கை அனலில் கொப்பளிக்க வைக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்தி திணிப்புக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை கையெழுத்து இயக்கம் மூலம் பிரதம மந்திரி முன்னிலையில் நிரூபிக்க சிவகார்த்திகேயன் நடத்தும் இன்னொரு போராட்டம் நம் மக்கள் மீது இந்தியை திணிப்பதற்காக இவ்வளவு அடக்குமுறைகளை மத்திய ஆளும் வர்க்கம் செய்ததா என்பதை இன்றைய இளைய தலைமுறை உணர்ந்துகொள்ள ஒரு வரலாற்று பதிவு சான்றாக கண்களுக்குள் பதிகிறது.
சிவகார்த்திகேயன் தம்பியாக அதர்வா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
திரு நாடன் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஜெயம் ரவி இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்றதில்லை என்று சொல்லும் அளவுக்கு கொலைக்கு அஞ்சாத சர்வாதிகார அதிகாரியா
க பயமுறுத்துகிறார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக வரும் ஸ்ரீ லீலா இதுவரை நடன புயலாக விருந்து படைத்து கொண்டிருந்தார் அவரை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆட்டத்தை குறைத்துக் கொண்டு நடிப்பை மெருகேற்றி காட்டி இருக்கும் ஸ்ரீலீலாவுக்கு ஹீரோயின் அந்தஸ்தை இந்த படம் உறுதி செய்கிறது.
இதுவரை கூறப்பட்டவை படத்தில் இடம்பெறும் சிறுபகுதி தான் இதைவிட பெரிய சரித்திர நிகழ்வுகள் படத்தில் இடம் பெற்றிருக்கிறது இதை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்தியை திணித்தால் என்ன? இந்தி கற்றுக் கொண்டால் என்ன? என்று சில தற்குறிகள் கேள்வி எழுப்பலாம் அந்த கேள்விக்கு இந்த படம் பதில் அளிக்கிறது. ஒரு மொழி அழிந்தால் அந்த இனமே அடிமை ஆகிவிடும் என்பதற்கு இதைவிட தெளிவாக யாரும் விளக்கம் சொல்லி விட முடியாது.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்திருக்கிறார். இப்படி ஒரு படத்தை தயாரிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அதைவிட பெரிய துணிச்சல் இந்தப் படத்தை இயக்குவதற்கு வேண்டும். அந்த துணிவை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
படத்தில் இடம்பெறும் அர்த்தமுள்ள வசனங்களை சுதா கொங்கரா, அர்சுன் நடேசன், மதன் கார்க்கி, ஷான் கருப்பசாமி எழுதி உள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசை காட்சிக்கு ஏற்ப ஒலித்திருக்கிறது. பாடல் வரிகளில் அர்த்தத்தை சிதைக்காமல் அதற்கு சலங்கை கட்டி இருக்கிறது.

ரவி கே சந்திரன் வரலாற்று காலத்திற்கு ரசிகர்களை கொண்டு சென்று விடுகிறார்.
அந்தக் களத்தில் வைத்து இயக்குனர் சுதா
கொங்கரா நேரில் பார்க்கும் படியாக மொழிப்போர் போராட்டத்தை கண் முன் காட்சிப்படுத்தி கரவொலி எழுப்ப வைக்கிறார்.
பராசக்தி — ஒரு மொழி போராட்டத்தின் வீர வரலாறு .

Review By
K Jayachandhiran
trending cinemas now.com
