படம்: கோடியில் ஒருவன்
நடிப்பு: விஜய் ஆண்டனி, ஆத்மிகா, திவ்யா பிரபா, ராமசந்திர ராஜூ. சச்சின் கெஹெந்தர், சூப்பர் சுப்பராயன், பூ ராம், பிரபாகர், சூரிராஜ் பாப்ஸ், ஆதித்யா கதிர்
தயாரிப்பு: டி.டி.ராஜா, டி ஆர்.சஞ்சய் குமார்,
இணை தயாரிப்பு: கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா, எஸ்.விக்ரம் குமார்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார்
இயக்கம்: ஆனந்த கிருஷ்ணன்
ஊரில் பஞ்சாயத்து பெண் தொகுதி என்பதால் தனக்கு தெரிந்த பெண் திவ்ய பிரபாவை நிறுத்துகிறார் கட்சிக்காரர் பூ ராம். கவுன்சிலராக தேர்வான அவர் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய எண்ணுகிறார். ஆனால் பூ ராம் அரசு ஒதுக்கும் பணத்தில் தனக்கு கமிஷன் தரும்படி கேட்கிறார். அதற்கு திவ்யா ஒப்புக் கொள்ளாததால் அவரை அடியாட்களை வைத்து எரிக்கிறார். கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா உடலில் தீ பிடித்த நிலையில் ஆற்றில் விழுகிறார். இதில் அவர் உயிர்பிழைக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவருக்கு பிறக்கும் மகன் விஜய் ஆண்டனி. தாயின் சொல்பேச்சை கேட்டு ஐஏ எஸுக்கு படிக்கிறார். அதற்காக சென்னை வரும் அவர் குடிசை மாற்று வாரிய பகுதி குடியிருப்பில் வீடு வாடகை எடுத்து தங்குகிறார். அப்பகுதியில் படிக்காமல் திரியும் மாணவர் களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து அவர்களை தேர்வில் பாஸ்செய்ய வைக்கிறார். இந்நிலையில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் அவர் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு சுயேட்சை ஆக வெற்றி பெறுகிறார். அதேபகுதியே சேர்ந்த பழைய கவுன்சிலர், மற்றும் ரவுடிகள் விஜய் ஆண்டனியை அழிக்க பார்க்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்யும் அவரை பலவந்தமாக ராஜினாமா செய்ய வைக்கிறார்கள். அவரோ எம் எல் ஏ தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது அதரவு இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் விஜய் ஆண்டனி எடுக்கும் முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.
இதுபோல் அரசியல் கதைகள் நிறைய வந்திருந்தாலும் விஜய் ஆண்டனிக்கு இந்த கதாபாத்திரம் புதுசு. விஜய ராகவன் என்ற கதாபாத்திரத்தில் அமைதி காட்ட வேண்டிய நேரத்தில் அமைதியாகவும் அநியாயத்தை எதிர்க்க வேண்டிய நேரத்தில் ஆவேசத்தை வெளிப்படுத்தியும் நடித்திருக்கிறார்.

தேர்வுக்கு செல்ல வேண்டிய மாணவனை ரவுடி கூட்டம் அழைத்து வந்து தவறான வேலைக்கு பயன்படுத்த முயலும்போது அங்கு வரும் விஜய் ஆண்டனி சமாதானமாக பேசிப்பார்த்து மாணவனை அழைத்து செல்ல முயல அவரை ரவுடிகள் தாக்கும்போது பதிலடி கொடுத்து திணறடிப்பது அட்டகாசம்.
கவுன்சிலராக தேர்வான பிறகு அந்த பகுதியை செழிப்பாக்கி கவர்னரின் பாராட்டு பெறு வதும், தன்னை அழைக்க நினைக்கும் கட்சிக்காரரிடம் நைசாக பேசி தனது பகுதி பிரச்னைகளை சீர் செய்வதும் என தந்திரமான நடிப்பில் கவர்கிறார்.
கே ஜி எப் வில்லன் ராமசந்திர ராஜூ ஆளும் கட்சி மாவட்ட செயலாளராக வந்து விஜய் ஆண்டனியை தன் கட்சியில் சேர வைக்க எண்ணுவதும் அது நடக்காது என்று தெரியும்போது அவரை மிரட்டி கவுன்சிலர் பதவியை பறிப்பதுமாக வில்லத்தனத்தை வெகு இயல்பாக காட்டியிருக்கிறார். ஹீரோயின் ஆத்மிகா அந்த காலத்து தேவிகாவை நினைவுபடுத்துகிறார். அழகான தோற்றம் அதற்கேற்ற அளவான நடிப்பு காட்டி கவர்கிறார்.
சூப்பர் சுப்பராயன் பழைய ரவுடி கவுன் சிலராக மிரட்டுகிறார். விஜய் ஆண்டனியின் தாயாக வரும் திவ்யா பிரபா தீயில் எரிந்த காயத்துடன் மகனை உயர்படிப்பு படிக்க வைக்கும் வைரக்கியம் காட்டி மனதில் இடம் பிடிக்கிறார்.
இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் அரசியல் கதையை கமர்ஷியல் களத்தில் இயக்கி பெரிய ஹீரோவுக்கான படமாக மாற்றியிருக்கிறார்.
என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு மிரட்டல். நிவாஸ் கே பிரசன்னா இசை பின்னணியில் கைகொடுத்திருக்கிறது.
கோடியில் ஒருவன் – ஜெயிப்பான்.

