படம்: கமலி ஃப்ரம் நடுக்காவேரி
நடிப்பு: கயல் ஆனந்தி, பிரதாப் போதன். இமான் அண்ணாச்சி, ரோஹித், ஸ்ரீஜா, ராஜேஷ், அனிருத், கவி, அனீஷ், சிவன். வைத்தீஸ்வரி, நிவேதா
தயாரிப்பு: அபண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமி.
ஒளிப்பதிவு:லோகையன்
இசை:தீனதயாளன்
இயக்குனர்: ராஜசேகர் துரைசாமி
தஞ்சை பகுதியையொட்டிய நடுக்காவேரி கிராமத்தில் பள்ளி மாணவியாக சுட்டித்தனமாக திரிகிறார் கயல் ஆனந்தி. பள்ளியில் மதிப்பெண் வாங்குவதில் மிகவும் மந்தம். பத்திரிகை ஒன்றில் ஐஐடி மாணவர் ரோஹித் முதல் மாணவனாக வருவதைக் கண்டு ஆச்சர்யம் அடையும் ஆனந்தி பத்திரிகை. டிவியில் வரும் ரோஹித்தின் தோற்றத்தை பார்த்து காதல் கொள்கிறார். தானும் ஐஐடியில் சேர்ந்து எப்படி யாவது ரோஹித்தை காதலிக்க முடிவு செய்கிறார். ஐஐடியில் சேர்ந்து படிப்பது எளிதான விஷயம் இல்லை. கடினமான இரண்டு தேர்வுகளை அவர் எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஐஐடியில் சேர முடியும். அதற்காக கோச்சிங் பெற முயற்சிக்கிறார். அதே கிராமத்தில் நகரில் கல்லூரி ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரதாப்போதன் இருக்கிறார். அவரிடம் ஐஐடி பயிற்சிக்கு சேர்கிறார் ஆனந்தி. தீவிர பயிற்சிக்கு பிறகு ஐஐடி நுழைவு தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் சேர்கிறார்.
ரோஹித்தை காதலிக்கும் எண்ணத்துடன் சென்ற ஆனந்தி படிப்பில் கோட்டை விடுவதுடன் சக மாணவர்களால் அவமானப் படுகிறார். போனவேகத்தில் ஊர் திரும்பு கிறார். அவர் வந்ததை யறிந்து பிரதாப்போத்தன் சந்தித்து தைரியம் கூறுகிறார். புது உற்சாகத் துடன் மீண்டும் ஐஐடிக்கு செல்கி றார் ஆனந்தி. அதில் அவரால் சாதிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் விடை கூறுகி றது.
மேலோட்டமாக படிப்பு என்று சொல்லிவிட்டு படம் முழுவதும் காதல் கும்மாளம் என்றில்லாமல் மேலோட்ட மாக காதல் முலாம் பூசிக்கொண்டு படம் முழுவதும் படிப்பின் முக்கியத்துவம் என்ற கதையின் போக்கை புதுமையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி.
கயல் ஆனந்திக்கு ஒரு லைஃப் ரோல் என்றால் மிகையாகாது. வேடத்தை முழுவதுமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். சுட்டித்தனமாக ஊரில் சுற்றி திருந்தவர் காதல் வயப்பட்டு அதற்காக படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்குவது புதிய சிந்தனை. வழக்கமாக இது பல படங்களில் உல்டாவாக இருக்கும்.
பிரதாப் போத்தனிடம் கோச்சிங் சென்றவர் அவர் ஏ பி சி டியை படிக்கச் சொல்லி கொடுத்ததும் இது என்ன பிரமாதம் என்று படித்துவிட்டு வந்து பிரதாப்பிடம் சொல்ல அவரோ முதல் லெட்டர் என்ன கடைசி லெட்டர் என்ன 12வது லெட்டர் என்ன என்று தனித்தனியாக கேட்டு படிப் பில் செலுத்த வேண்டிய கவனம் பற்றி புரியவைப்பது நிஜகோச்சிங் செண்டருக்கு சென்றால் கூட இப்படியொரு பயிற்சி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல், இதுவரை நீ கற்றுக்கொண் டது என்று ஒரு அட்வைஸ் கொடுத்து அதிலும் ஒரு தன்னம்பிக்கை தருவது படிக்க துடிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் கிடைக்க வேண்டிய அம்சம்.
ஐஐடிக்கு படிக்கச் சென்று ரோஹித் பின்னால் சுற்றி வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து அவமானப்படும் ஆனந்தி உச் கொட்ட வைக்கிறார். பிறகு ஊருக்கு வந்து பிரதாப்பிடம் அட்வைஸ் பெற்று புது உற்சாகத் துடன் ஐஐடிக்கு சென்று அதிரடி யாக படிப்பை தொடரும்போது புதுமைப்பெண்ணாக கண்முன் நிற்கிறார்.
ஹீரோ ரோஹி த் அழகான தோற்றத்துடனும் கதாபாத்தி ரத்தின் தன்மைக்கு ஏற்ப பொருந்தியும் இருக்கிறார்.
டெல்லிக்கு சென்று க்விஸ் போட்டியில் கலந்துகொள்ள ஆனந்தியுடன் செல்ல வேண்டும் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைவது, பிறகு அவருடன் சென்று டெல்லியில் குவிஸ் போட்டியில் கலந்துகொள்வதும் இதுவரை கையாளாத நடைமுறை. அந்த குவிஸ் போட்டியை பிகில் பட கால்பந்து போட்டியின் கிளைமாக்ஸுக்கு சமமாக டென்ஷனுடன் இயக்குனர் கையாண்டிருப்பது அப்ளாஸ் அள்ளுகிறது. நகரமோ, கிராமமோ படிக்கும் விதத்தில் படித்தால் நடுக்காவேரி கமலியும் ஐஐடி சாம்பியன் ஆகலாம் என்ற தன்னம்பிக்கைதான் கதைக்கு பலம்.கோச்சிங் மாஸ்டராக நடித்திருக்கும் பிரதாப்போதன் அசல் மாஸ்டராகி இருக்கிறார்.
இப்படியொரு கதையை தயாரித்திருக்கும் அபண்டு ஸ்டுயோஸை கைகொடுத்து பாராட்டலாம். முதல் படம் என்றாலும் கமர்ஷியல் அம்சம் என்ற பெயரில் கண்டதை அள்ளித் தெளிக்காமல் தீர்க்கமான ஒரு கதையை துணிச்சலாக பேசி இருக்கிறார் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி. எப்படி படித்தால் ஞாபகம் இருக்கும் என்பதற்கு காட்சி வடிவில் தரும் டிப்ஸ்கள் சூப்பர்.. ஐடி கனவில் இருக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும்
இசையின் பங்கும் ஒளிப்பதி வாளரின் கைவண்ணமும் குறை சொல்ல முடியாத ஆளுமை.
கமலி ஃபிரம் நடுக்காவேரி- கமலியின் துணிச்சலான கல்வி நடை