Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

திரௌபதி 2 (பட விமர்சனம்)

படம்: திரௌபதி 2

நடிப்பு: ரிஷி ரிச்சர்டு, நட்டி, வேல ராமமூர்த்தி, ரக்ஷனா இந்துசூடன், ஒய் ஜி மகேந்திரன், தினேஷ் லம்பா, சிராங் ஜானி, பரணி, தேவயானி சர்மா, கணேஷ் கவுரங்

தயாரிப்பு: சோழ சக்கரவர்த்தி

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: பிலிப் ராஜ் சுந்தர்

இயக்கம்: மோகன் ஜி

பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா (D ‘One), அப்துல் ஏ நாசர்

திரௌபதி  முதல் பாகத்தை சமூக படமாக இயக்கிய மோகன் ஜி திரௌபதி 2 படத்தை ஒரு வரலாற்று படமாக இயக்கியிருக்கிறார். அதுவும் 14ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த வீர வல்லாளர் வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாக்கி இருக்கிறார்.

திருவண்ணாமலை  மன்னர் வீர வல்லாளர் (நட்டி) அண்ணாமலையாரின் பக்தராக இருந்து ஆட்சி புரிகிறார். இந்த நிலையில் டெல்லியில் முகலாய அரசின் சுல்தான் துக்ளக் தனது ராஜ்யத்தை தென்னிந்தியா வரை விரிவாக்க எண்ணி வல்லாளரை தீர்த்து கட்டி அல்லது மதம் மாற்றி
தனது அடிமை ராஜ்யமாக மாற்ற திட்டமிடுகிறார். இந்த நிலையில் வல்லாளர் தனது தளபதி வீரசிம்ம காடவராயாரிடம் (ரிஷி ரிச்சர்ட்) சில பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
அதேசமயம் வல்லாளர் மதுரை சுல்தான் படையினரால் சூழ்ச்சியாக கொல்லப்படுகிறார். மேலும் வல்லாளரின் இளவரசனை துக்ளக் படை கடத்தி பிடித்து வைத்திருக்கிறது. இளவரசனை மீட்டு தனது ராஜ்யத்தை காடவராயர் எப்படி மீட்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

டெல்லி சுல்தான் துக்ளக் ஆட்சி எப்படி எல்லாம் இந்திய மக்களை மத ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தியது என்பதை விளக்கும் வகையில் கோயில்களை இடித்து, கடவுள் சிலைகளை உடைத்து, இந்து மக்களை இஸ்லாமியர்களாக மாற்றி கொடுமை செய்த காட்சிகள் படத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை இடம்பெறுகிறது.

மன்னர் வீரவல்லாளர்  கதாபாத்திரத்தில் நட்டி நடித்திருக்கிறார். முதன்முறையாக நட்டியை மன்னர் வேடத்தில் பார்க்க முடிகிறது. அவரும் அதற்கு ஏற்ப தனது நடிப்பு, உடல்மொழியை மாறுபட்டு காட்டி நடித்திருக்கிறார். 80 வயதை கடந்த மன்னராக இருந்தாலும் ராஜதோரணை மட்டும் மாறவில்லை என்பதை அவரது வேகமான நடை, தெளிவான வசன உச்சரிப்பு நிரூபிக்கிறது.

காடவராயர் கதாபாத்திரத்தில் ரிஷி ரிச்சர்ட் சரியாக பொருந்தியிருக்கிறார். கத்தி சண்டை காட்சிகளில் பயிற்சி எடுத்து நடித்திருப்பது பலன் தந்திருக்கிறது. படை வெற்றிக்கு பிறகு ரிஷி ஆடும் நடனம் அசத்தல்.

திரௌபதி கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ரக்ஷனா இந்துசூடன் அழகு. அவரது பேச்சில் மென்மை இருந்தாலும் துணிச்சலும், தோரணையும் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறது.

வேல ராமமூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

துக்ளக் வேடத்தில்
நடித்திருக்கும் சிராங் ஜானி, மதுரை சுல்தானாக தினேஷ் லம்பா அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.

வரலாற்று மன்னர் கால கதையாக இருந்தாலும் அதற்கான பிரம்மாண்டங்கள் குறைவு. அதை ஈடு கட்டும் வகையில் நிஜ கோட்டை கொத்தள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி ஈடு கட்டியிருக்கிறார்கள்.

சமூக ரீதியாக திரௌபதி, பகாசூரன், ருத்ர தாண்டவம் போன்ற படங்களில் சில சர்ச்சை கருத்துக்களை கூறி சர்ச்சை இயக்குனராக தனது இமேஜை வளர்த்துக் கொண்டிருக்கும் மோகன் ஜி இந்த படத்தில் மதரீதியாக சில கருத்துக்களை கூறியிருந்தாலும் அது வரலாற்று பின்னணியில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் கற்பனை கதாபாத்திரங்களையும் கதைக்குள் நுழைத்திருப்பதுடன் குலத்தொழில் பற்றி பேசி தனது காவி சிந்தனையையும் பதிவு செய்திருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் மெலடியும், போர்பரணியும் ஒலித்தாலும் சில இடங்களில் ஏ ஆர் ரஹ்மான் இசை பாதிப்பு இருப்பதை உணர முடிகிறது.

பாகுபலி அளவுக்கு கதைக்கு பிரமாண்டம் தேவை, ஆனால் பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைப்பதுபோல் இருந்த பட்ஜெட்டில் இடறாமல் படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் சோழ சக்கரவர்த்தி.

ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தர் உழைப்பு காட்சிகளை மன்னர் காலத்தில் நடக்கும் வகைக்கான உணர்வை உறுதிப்படுத்துகிறது.

துக்ளக்கை
காடவராயர் கொன்றார் என்பதுபோல்காட்டுவது வரலாறு கிடையாது.

திரௌபதி 2 – வரலாறும், புனைவும் பிணைந்த படம்.

Review By

K Jayachandhiran

Trending cinemas now.com

 

 

Related posts

VVSTrailer & SaamanyuduTrailer are trending 1 Million Views

Jai Chandran

“பராசக்தி” பட உலகை அறிமுகப்படுத்தும் விழா..

Jai Chandran

KavingarSnekan – KannikaRavi Released The 1st Look of HELPME

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend