படம்: சேசிங்
நடிப்பு: வரலட்சுமி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, ஜெரால்ட், யமுனா
தயாரிப்பு: மதுயழகன் முனியாண்டி
இசை: தசி
ஒளிப்பதிவு: இ.கிருஷ்ணசாமி
இயக்கம்: கே.வீரக்குமார்
நகரில் போதை பொருள், கடத்தல், வட்டிக்காரர்கள் தொல்லை அதிகரிக்கிறது. அத்துடன் இளம் பெண்களை கடத்தி பாலியல் பலாத்கார கொடுமையும் நடக்கிறது. உயர் போலீஸ் அதிகாரியின் மகளும் கடத்தப்படுகிறார். அந்த பெண்ணை போலீஸ் அதிகாரியான வரலட்சுமி காப்பாற்றுகிறார். கடத்தல், போதை மருந்து கும்பலை கண்டுபிடிக்கும் பொறுப்பு வரலட்சுமியிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் மர்மமாக கொல்லப்படுகின்றனர். அவர்களை கொன்றது யார், போதை மருந்து கூட்டத்தை வரலட்சுமியால் பிடிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
படத்துக்கு சேசிங் என்று பொருத்தமாக டைட்டில் அமைந்திருக்கிறது. கடத்தல் கும்பலை போலீஸ் அதிகாரிகள் சேஸ் செய்கின்றனர். கடத்தல் கும்பல் போலீஸ் அதிகாரி வரலட்சுமியை சேஸ் செய்கின்றது. அதற்கேற்ப கார் துரத்தல், ஆக்ஷன் காட்சிகள் என சூடு பறக்கிறது.
படத்தின் பெரும்பகுதி மலேசியாவில் படமாக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள முக்கிய இடங்களை அழகாக படமாக்கி கண்களுக்கு விருந்து படைத்திருக்கின் றனர்.
வரலட்சுமி போலீஸ் அதிகாரியாக வேகம் காட்டி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அசத்தியும் இருக்கிறார். குண்டர்களை விரட்டி விரட்டி தாக்குகிறார்.
பெண்களை பலாத்காரம் செய்து அடாவடி வில்லத்தனம் செய்யும் வில்லன் சூப்பர் சுப்பராயான் மர்மமான முறையில் கொல்லப்படுவது எதிர்பாராத ஷாக்.
போதை மருந்து கூட்டத்தை பிடிக்க தனது டீமுடன் மலேசியா செல்லும் வரலட்சுமி கையில் கிடைக்கும் போதை மருந்து ஏஜென்ட் ஜெரால்டை திடீரென்று சுட்டுக்கொல்லும்போது எதற்காக சுட்டார் என்று பல கேள்விகள் எழுகிறது. அதற்கு ஒரு பிளாஷ் பேக் சொல்வது சென்டிமென்ட் டச்.
படத்தில் காதல் காட்சிகள் எதுவும் கிடையாது. அதனால் டூயட்டுக்கு வாய்ப்பில்லை. அதேசமயம் மலேசிய கிளப் டான்ஸ் ஒன்று இளசுகளை ஈர்க்கிறது.
பால சரவணன் சில இடங்களில் கலகலப்பாக பேசி சிரிப்பூட்டுகிறார். ஏசியாசின் மீடியா நிறுவனம் சார்பில் மதியழகன் முனியாண்டி தயாரித்திருக்கிறார்.
முதல்முறையாக இயக்குனராகி இருக்கும் கே.வீரக்குமார் ஆக்ஷன், கடத்தல், செண்டிமெண்ட் என கமர்ஷியலாக படத்தை இயக்கி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஈ.கிருஷ்ணசாமியின் கேமரா மலேசியாவை வான் வழியாகவும், தரைமார்கமாகவும் எழில் குறையாமல் படமாக்கி இருக்கிறது. தஷி இசை காட்சிக்கு தேவையான இசையை வழங்கி உள்ளார்.
படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் அதிகம். கார் சேசிங் காட்சிகளில் வேகம் இருக்கிறது. சண்டை காட்சிகளில் கூடுதல் வேகம் காட்டி இருந்தால் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும்.
சேசிங்- கமர்ஷியல் ஆக்ஷன்.