சினிமா தியேட்டர்கள் கொரோனா தளர்வில் கடந்த நவம்பர் மாதம் திறக்கபட்டாலும் 50 சதவீத டிக்கெட்டுக்கே அனுமதி அளித்தது தமிழக அரசு. இதனால் பெரிய படங்கள் வெளியாகவில்லை. 100 சதவீத அனுமதி வேண்டும் என தமிழக அரசுக்கு திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று பொங்கல் முதல் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அனைவருக்கும் வணக்கம்.
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு தமிழக முதலமைச்சருக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் எங்கள் நன்றிகள்.
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் (SoP’s) கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம். திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
இவ்வாறு பாரதிராஜா கூறி உள்ளார்.