Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வண்ணங்கான் உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கினேன் – இயக்குனர் பாலா

இந்த பொங்கல் பண்டிகையில் பல படங்கள் வெளியானாலும் 12 வருடங்கள் கழித்து வெளியான மதகஜராஜா படத்தின் வெற்றியும், ஏழு வருடங்கள் கழித்து பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் வெற்றியும் மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறி இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் எதிர்கொளும் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தீர்வு காணப்பட வேண்டும் என ‘வணங்கான்’ படம் மூலம் இயக்குநர் பாலா அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது ரசிகர்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கும் அதுவே மிகப்பெரிய காரணமாக அமைந்து விட்டது.

அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும், உணர்வுப்பூர்வமான நடிப்பும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பும், கதாநாயகி ரோஷிணி, தங்கை ரிதா உள்ளிட்ட படத்தில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களின் இயல்பான பங்களிப்பும் என எல்லாம சேர்ந்து வணங்கான் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன..

நல்ல படங்களை தயாரித்தால் மக்கள் நிச்சயம் வரவேற்பு தருவார்கள், வெற்றியை பரிசளிப்பார்கள் என தொடர்ந்து நம்பிக்கையுடன் படங்களை தயாரித்து வரும் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘வணங்கான்’ படத்தின் வெற்றியால் இன்னும் உற்சாகம் அடைந்துள்ளார்.

ஊடகங்களின் நேர்மையான, பாசிடிவான விமர்சனமும் ரசிகர்களின் வரவேற்பும் இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது வணங்கான் படக்குழு.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் பாலா மற்றும் நாயகன் அருண்விஜய் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

“ஒரு படம் முழுக்க கதாநாயகனை வாய் பேச முடியாமல் நடிக்க வைக்க முடியும் என்றால் அந்த பெருமை இயக்குநர் பாலா அண்ணனை தான் சேரும். இந்த படம் மக்களுக்கும் மீடியாக்களுக்கும் ரொம்ப நெருக்கமாகவே அமைந்து விட்டது என நான் நம்புகிறேன். இதை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சிம்புவையோ இயக்குநர் பாலாவையோ அவர்களுடன் பணியாற்றி வேலை வாங்குவது சிரமம் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் கிடையாது. இவர்களை எளிதாக கையாள முடியும் என்று நாம் நினைப்பவர்களிடம் படைப்புத்திறன் இருக்காது. நாம சரியாக இருந்தால் மற்றவர்கள் சரியாக இருப்பார்கள். உறவு என்பது கண்ணாடி போன்றது தான். அதை சரியாக கையாள வேண்டும்” என்று கூறினார்.

நடிகர் அருண்விஜய் பேசும்போது,

‘வணங்கான்’ படத்தை மக்களிடம் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கொண்டு சேர்த்த விதமும் மக்கள் அதை பார்த்துவிட்டு பாராட்டும் போதும் மீடியாக்களின் பங்களிப்பு அதில் நிறைய இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. என்னுடைய திரையுலக பயணத்தில் ‘வணங்கான்’ ஒரு மைல் கல் படமாக அமைந்ததற்கு பாலா சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படம் முழுக்க பேசாமல் நடிக்கும் ஒரு கதாநாயகனாக மக்களை சென்றடைய முடியும் என என் மீதே எனக்கு நம்பிக்கை வர செய்தவர் இயக்குநர் பாலா. அந்த அளவிற்கு எனக்குள்ள இருந்து நிறைய உழைப்பை பாலா சார் வாங்கி இருக்கிறார்.

சைகை மொழியை கற்றுக் கொண்டதாக இருக்கட்டும், உடல் மொழியை மாற்றிக் கொண்டதாக இருக்கட்டும், அந்த கதாபாத்திரத்திற்குள் அவ்வளவு ஆழமாக என்னை கொண்டு போனதாக இருக்கட்டும்.. பாலா சாரின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் அதை செய்திருக்கவே முடியாது. அந்த வகையில் இந்த படத்தின் உருவாக்கமே எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. என் கதாபாத்திரம் இப்படிப்பட்ட தோற்றத்துடன் தான் இருக்க வேண்டும் என பாலா சார் மனதிற்குள் உருவகப்படுத்தி வைத்திருந்தார். எனக்கும் இதுவரை நான் செய்த படங்களிலேயே மாறுபட்டு பண்ணிய கதாபாத்திரம் என்பதால் தான் பல விஷயங்களை இந்த படத்தில் கற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்தை புரிந்து கொள்வது எப்படி என்கிற விஷயத்தை இதில் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் இது போன்று மீண்டும் ஒரு படம் பண்ண முடியுமா என தெரியவில்லை. பொங்கல் பண்டிகை ரிலீஸாக இந்த படம் வர வேண்டும் என, தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்று ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாரின் தைரியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவருக்கும் நன்றி” என்று கூறினார்

இயக்குநர் பாலா பேசும்போது,

“நன்றி என ஒற்றை வார்த்தையில் சொல்லி கடந்து சென்று விட முடியாது. அந்த அளவிற்கு நீங்கள் இந்த படத்தை ரசித்ததால் தான் இந்த அளவிற்கு அதைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய நன்றி. என்னுடைய படங்களின் கிளைமாக்ஸ்களில் தொடர்ந்து வன்முறை, ரத்தம், சோகம் இடம்பெறுகிறதே, இது உங்கள் குருநாதர் பாலுமகேந்திராவிடம் இல்லையே.. உங்களிடம் மட்டும் எப்படி என நீங்கள் கேட்கிறீர்கள், இது கற்றுக்கொண்டு வருவதில்லை.. அது ரத்தத்திலேயே இருக்கிறது. நான் சொல்வது தவறான பதிலாக கூட இருக்கலாம்..

படத்தின் துவக்கத்தில் அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலை, ஒரு கையில் விநாயகர் சிலையுடன் தோன்றுவதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான ஒரு குறியீடு தான். பல வருடங்களாகவே கன்னியாகுமரியை களமாக கொண்டு படங்கள் எடுக்கப்படவே இல்லை. மற்ற எல்லா ஊர்களையும் படங்களில் கொண்டு வந்து விட்டார்கள். இது மட்டும் பாக்கி இருக்கிறதே என்பதற்காக கன்னியாகுமரியை எடுத்துக் கொண்டேன்.

என்னுடைய படங்கள் இரண்டே கால் மணி நேரத்திற்குள் தான் இருக்கும். இந்த படத்தில் கதை சொல்லப்பட்ட விதம், குறிப்பாக இரண்டாம் பகுதி ரொம்பவே வேகமாக செல்லும். அதனாலேயே உங்களுக்கு ஏதோ சிறிய படம் போல தோன்றுகிறது. இந்த படத்தின் கதை சென்னையில் நிஜமாகவே ஒரு பள்ளியில் நடந்த நிகழ்வு தான்.. பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.. பாலியல் கொடுமைகளுக்கு இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட இன்னும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

பேசிப்பேசி தான் எல்லா விஷயத்தையும் புரிய வைக்க வேண்டும் என்கிற இந்த காலகட்டத்தில் பேசாமலும் புரிய வைக்கலாம் என எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி தான் அருண்விஜயின் வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரம். கிறிஸ்துவத்தை கிண்டல் பண்ணுகிறேனா என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அந்த தங்கை கதாபாத்திரம் பாடும் ஒரு பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.. அதன்பின் நீங்கள் அப்படி சொல்லவே மாட்டீர்கள்.. நடிகர் திலகம் சிவாஜியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கதாபாத்திரம் என் படத்தில் வந்து விடுகிறதோ என்னவோ ?

இந்த படத்தில் எப்படி ஜெயிலில் இரண்டு பெண்கள் சர்வ சாதாரணமாக ஒரு கைதியை சென்று பார்க்க முடியும் என சிலர் லாஜிக் கேட்டார்கள் ஆனால் அது ஜெயில் அல்ல.. அது மருத்துவமனையிலேயே உள்ள தனியான நோயாளிகள் பிரிவு. நீதிபதி அதைத்தான் உத்தரவாக சொல்லி இருப்பார். அதை பலர் கவனிக்க தவறியதால் தான் லாஜிக் மிஸ்டேக் என கூறுகிறார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலிருந்து மிஸ்கினுடன் இணைந்து ஒரு படம் பண்ணி விட வேண்டும் என ஆர்வமாக இருந்தேன். அது இந்த படத்தில் நிறைவேறி விட்டது.

சூர்யா நடித்திருந்தால் இந்த படம் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வி இப்போது தேவையில்லை. ஏனென்றால் அருண்விஜய் நடித்து, இதோ இப்போது இந்த படத்தை நீங்களே ஹிட் பண்ணியும் கொடுத்து விட்டீர்கள். என்னை எல்லோரும் கோபக்காரன் என்றும், என்னிடம் பயப்படுகிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்படி இதுவரை எங்காவது நடந்திருக்கிறதா ? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அருண்விஜய், இதற்கு முன் நடித்த, என்னுடன் பணியாற்றியவர்களிடம் கூட கேட்டுப் பாருங்கள். என்றாவது ஒரு நாள் கூட யாரிடமாவது முகம் சுண்டி இருக்கிறேனா என்று கேட்டு பாருங்கள்.

என்னுடைய படங்களில் நடித்த ஹீரோக்கள் அடுத்து என் படங்களுக்கு மீண்டும் நடிக்க வருவது இல்லையே எனக் கேட்கிறீர்கள்.. ஏன் சூர்யா, ஆர்யா எல்லோருமே நடித்திருக்கிறார்கள் தானே..? அது மட்டுமல்ல புதுப்புது நடிகர்களுடன் பணியாற்றும்போது புது அனுபவங்கள் கிடைக்குமே. மாற்றுத்திறனாளிகளை பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு அப்படியே விலகி செல்லக்கூடாது. அவர்களின் உலகத்தையும் நாம் காட்ட வேண்டுமே. நம்மிடையே தானே, நம்மை நம்பித்தானே அவர்களும் வாழ்கிறார்கள்.

பொங்கலுக்கு வெளிவந்த மதகஜராஜா படம் வெற்றி பெற்றிருக்கிறது. விஷாலுக்கு என் வாழ்த்துக்கள். விஷாலுக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டதற்கு ‘அவன் இவன்’ படத்தில் நான் அவரது கண் பார்வை குறைபாடான கதாபாத்திரத்தை கொடுத்தது தான் என ஒரு சிலர் குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். இன்னும் சிலர் நான் அவரது கண்ணை தைத்து விட்டதாக வேறு கூறினார்கள். இதில் நான் என்ன செய்வது ? அவரவர்களுக்கு தோன்றியதை பேசுகிறார்கள். அதை கண்டுகொள்ள தேவையில்லை. அதேபோல சீமான் பெரியார் பற்றி என்ன சொன்னார் என்று இப்போது வரை எனக்கு தெரியாது. நேற்று கூட அவரிடம் பேசினேன். இது பற்றி நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரும் என்னிடம் அரசியல் பேச மாட்டார்” என்று கூறினார்.

Related posts

Chiranjeevi, Mohanlal & Simbu to launch teaser of Vikrant Rona

Jai Chandran

விரைவில் திரையில் ! ஜீவி பிரகாஷ் குமாரின் “பேச்சிலர்”

Jai Chandran

Mani sir has beautifully completed Ponniyin Selvan- Karthi

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend