Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் படமாக்கி நடித்த ஆறு ராஜாவுக்கு நக்கீரன் கோபால், கே.ராஜன், நடிகைகள் வாழ்த்து

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால், தயாரிப்பாளர்கள் கே ராஜன், மதியழகன், டாக்டர் தாயப்பன், தயாரிப்பாளர்கள் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் மதுமிதா, கோமல் சர்மா, ஸ்ருதி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் ஆறு ராஜா பேசும்போது, “இளம்பெண்கள் கயவர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு.. குறிப்பாக தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்.. இதுபோன்ற நிகழ்வுகள் எதனால் அதிக இடங்களில் நடக்கிறது. இதற்கு என்ன காரணம், இதற்கு என்னதான் முடிவு என, பல கேள்விகளை உள்ளடக்கி நிஜ சம்பவங்களை கருவாக வைத்து, அதேசமயம் அதில் சில மாற்றங்களோடு இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்” என கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர் தாயப்பன் பேசும்போது, “இந்த படத்தின் இயக்குநர் ஆறு ராஜா, இப்படி ஒரு படத்தை இயக்கி நடிக்க போகிறேன் என்று என்னிடம் கூறியதும், உங்களுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதா என்று கேட்டேன். காரணம் இப்போது நடிக்க வருபவர்கள் அதன்பின் அரசியலை குறிவைத்து தானே நகர்கிறார்கள் என்பதால் அப்படி கேட்டேன். ஆனால் இப்படி சமூகத்திற்கு, குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை, என்று தெரிந்ததும் அவருக்கு ஊக்கம் அளித்தேன்” என்று பேசினார்

மெரினா புரட்சி படத்தில் நடித்த நாயகி ஸ்ருதி ரெட்டி இந்த நிகழ்வில் பேசும்போது, “நீண்ட நாட்களாக கொரோனா தாக்கத்தால், வீட்டிலேயே அடங்கியிருந்த சமயத்தில், இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என, அழைப்பு வந்ததுமே அனைவரையும் சந்திப்பதற்காகவே, இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டேன்.. புதியவரான ஆறு ராஜா ஒரு படத்தை இயக்கி இந்த அளவிற்கு கொண்டு வந்திருப்பது, எவ்வளவு கஷ்டம் என்பது, எனக்குத் தெரியும்.. அவரது முயற்சியைப் பாராட்டுகிறேன்” என்று கூறினார்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, “இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரு படத்தில் நடித்த நடிகர் நடிகைகளே அவர்களது பட விழாவிற்கு வருவது இல்லை. அவர்கள் எல்லாம், வேறு ஏதோ உலகத்தில் இருக்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழ் திரையுலகில் ஹீரோக்கள் பற்றாக்குறையா அல்லது அவர்களது டாமினேஷனா என்று சொல்ல முடியாத நிலையில், ஒரு ஹீரோவை சந்தித்து கதை சொல்வதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் இன்னும் பாதி உயிர் போய்விடுகிறது. அந்த படத்தை ரிலீஸ் செய்வதற்குள் மொத்த உயிரும் போய்விடுகிறது. அந்த அளவிற்கு இன்று படத்தயாரிப்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த பாப்பிலோன் படம் கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. இந்த பொள்ளாச்சி சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்காக நக்கீரன் கோபால் அவர்கள் பட்ட சிரமங்களை பற்றி, வீடியோவில் பார்க்கும்போது, அவர் எவ்வளவு போராடி இருக்கிறார் என்பது தெரிந்தது. இந்த மாதிரி சமயத்தில் தைரியமாக இப்படி ஒரு கருத்தை மையப்படுத்தி படம் எடுத்ததற்காக, ஆறு ராஜாவை பாராட்டுகிறேன். தற்போதைய சூழலில் ஒரு சில பெரிய தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே அமேசான், நெட்பிளிக்ஸ் போன்றவை தேடிவந்து வாங்குகின்றன சிறிய படங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் இந்த பாப்பிலோன் படம் சிறிய படம் அல்ல. எப்படி அருவி என்கிற படம் சிறிய அளவில் உருவாகி பெரிய அளவில் கவனத்தை ஈர்த்ததோ, அதேபோல இந்தப்படமும் வெற்றி பெறும்” என்று கூறினார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது, “இதுபோன்ற சமூகம் சார்ந்த நல்ல நிகழ்வுகளில் நானும் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு வலிமையான பெண்ணின் கையில் தான் இருக்கிறது. ஒரு வலிமையான பெண்ணால்தான் ஒரு குழந்தையை வளர்த்து, வலிமையான குடிமகனாக உருவாக்க முடியும். அந்த வலிமையான குடிமகன் தான் இந்த நாட்டை ஆள முடியும். இயக்குனர் ஆறு ராஜா தனது முதல் படத்திலேயே சமுதாய அக்கறையுடன் கூடிய கருத்தை எடுத்துள்ளார் என்பதை பாராட்டுகிறேன். ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற ஒரு பாலியல் வன்கொடுமை நிகழும் பட்சத்தில், அதை மனதிற்குள்ளேயே போட்டு பூட்டி வைத்திருக்கக்கூடாது. தயங்காமல் உடனடியாக தனது பெற்றோர்களுக்கு சொல்ல வேண்டும். அப்படி என்றால் தான், அதன்பிறகு வரும் எந்த ஒரு கடினமான சூழலையும் தாண்டி, அவர்களால் வெளிவர முடியும். அப்படி அந்த விஷயங்கள் வெளியில் வரும்போது தான், இதுபோன்று கொடுமையை செய்பவர்கள் தங்கள் வீட்டு பெண்களைப்போல, மற்றவர்களையும் நினைப்பதற்கு யோசிக்கத் தொடங்குவார்கள். பெண்களை எப்படி வலிமையாக வளர்க்கிறோமோ, அதேபோல பையன்களையும், பெண்களை எப்படி மதிக்க வேண்டும், மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக்கூறி வளர்க்க வேண்டும் . அப்படி செய்யும்போது தான், இந்த நிலை விரைவில் மாறும். இந்த படத்தின் நாயகி ஸ்வேதாவும் மிகப்பெரிய அளவில் வளர்வார்” என்று பேசினார்.

நடிகை மதுமிதா பேசும்போது, “மிகப் பெரிய ஒரு சமூகக் இடைவெளிக்குப் பிறகு இவ்வளவு பேரை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எதையும் பாசிட்டிவாக நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பாசிட்டிவ் என்றாலே பயந்த காலகட்டம் என்றால் இந்த கொரோனா காலகட்டம்தான். ஒவ்வொரு புது வருடமும் ஒவ்வொரு விஷயத்திற்காக வேண்டிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த புது வருடத்தில்தான் தான், நாம் உயிரோடு இருந்தால் போதும் என்றே, பலரும் வேண்டிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் சினிமா சில வருடங்களாகவே தொய்வடைந்த நிலையில்தான் இருக்கிறது. அதிலும் இந்த கொரோனாவால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஒரு சிறு துளியாக வந்தது தான் ஓடிடி.. ஆனால் அது பத்தாது.. நமக்கு தேவையான பெருவெள்ளம் என்றால் அது திரையரங்குகள் தான். இனி வரப்போகும் நாட்களில் அனைத்து படங்களும் தியேட்டர்களில் வெளியாக வேண்டும். எத்தனையோ கமர்ஷியல் படங்கள், சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. ஆனால் இதுபோன்ற சமூக அக்கறை, சமுதாய விழிப்புணர்வு கொண்ட படங்களும் ஹிட் ஆகணும். நாம் நிறைய மேடைகளில் பேசினாலும், நிறைய புத்தகங்களைப் படித்தாலும், இன்னும் இதுபோன்ற பாலியல் வன்முறை குற்றங்களுக்கு, சரியான தண்டனை நம் நாட்டில் இல்லை. சில பெண்களின் வாழ்க்கை சீரழிந்து போக, மோசமான சில ஆண்கள் காரணமாக இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களை வெளிக்கொண்டு வந்து இப்படி படமெடுக்கும் ஆறு ராஜா போன்ற நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று பாராட்டினார்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் (கில்டு) ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “பெண்களின் பாதுகாப்பை பற்றி பேசும் இந்த படம், சரியான நேரத்தில் தான் வருகிறது. தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம் பற்றி, வெளி உலகிற்கு கொண்டுவந்த நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களுக்கு, இந்த நேரத்தில் நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளலாம். நூறு ஆண்களில் ஐந்து பேர் மட்டும் தான், கெட்டவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு செய்தியையும் நக்கீரன் பத்திரிக்கையை பார்த்தால்தான் நான் நம்புவேன். இந்த விழாவிற்கு நக்கீரன் கோபால் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்கிறபோதே, இந்த படம் சொல்ல வரும் கருத்து எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடிகிறது.

பொறாமையும் போட்டியும் நிறைந்த இந்த உலகில், இந்த நிகழ்விற்கு, இந்த படத்தில் சம்பந்தப்படாத நடிகைகள் கூட வந்திருப்பதும் அவர்கள் தமிழிலேயே பேசுவதும், மிகச்சிறந்த விஷயம்.. தமிழ்நாடு, கொரோனா என்கிற மிகப்பெரிய கொடிய விஷத்தில் இருந்து, தப்பித்து இருக்கிறது. பெரும்பாலும் இந்த நோய் அதைக்குறித்து பயந்தவர்களிடம்தான், தனது வேலையை காட்டியிருக்கிறது. பயப்படாதவர்களிடம், வீரர்களிடம், கொரோனா செல்லுபடியாகவில்லை. பிளாட்பாரத்தில் குடியிருக்கும் சாதாரண மனிதர்களை கொரோனா எதுவும் செய்யவில்லை பார்த்தீர்களா..? அதனால் கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “ஒரு புதிய இயக்குனர், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தனது முதல் படத்தை உருவாக்கியுள்ளது குறித்து பெருமைப்படுகிறேன். ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில், திரையுலகம் தயாரிப்பாளர்களின் கையில் இருக்கிறது. ஆனால் இங்கே தமிழ் திரையுலகமோ ஹீரோக்களின் பிடியில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.. இங்கு இருக்கும் தயாரிப்பாளர்கள், பெரும்பாலும் வட்டிக்கு வாங்கித்தான், படம் எடுத்து வருகிறார்கள். அதனால் இப்போது உள்ள ஹீரோக்கள், 20 சதவீத சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, மொத்த படமும் வியாபாரம் ஆன பின்பு, அவர்களுக்கான மீதி சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாமே.. அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா ?” என்று பேசினார்.

நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் பேசும்போது, “பொதுவாக நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது. ஆனால் எனது நண்பரும் பொடா சட்டத்தில் என்னுடன் சிறையில் இருந்தவருமான டாக்டர் தாயப்பன், இந்தப்படம் குறித்தும், இந்த படத்தின் இயக்குனர் ஆறு ராஜா குறித்தும் கூறி, என்னிடம் அவரை அழைத்து வந்தார். அவரிடம் பேசியபோதுதான், இந்த பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஒரு படத்தை உருவாக்கியிருப்பதாக கூறி, இந்த விழாவிற்கு நீங்கள் வந்தால் பொருத்தமாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.. சமூக விழிப்புணர்வு சார்ந்த விழா என்பதாலும், பலபேருக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும்.. இது போன்ற வளரும் இயக்குனருக்கு, ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த விழாவில் நான் கலந்து கொண்டேன்.

பெண்களை ஏமாற்றி, அவர்களை மிரட்டி, பாலியல் வன்முறை செய்த கும்பல் குறித்து, பொள்ளாச்சியிலிருந்து முதலில் இரண்டு வீடியோக்கள் எனக்கு வந்தது. அதை பார்த்ததும் என்கிற ஈரக்குலையே நடுங்கி விட்டது. அதன் பின்னணி குறித்து விசாரிக்கும் போதுதான். அந்த அயோக்கியர்களுக்கு பக்கபலமாக. அரசியல் புள்ளிகள் இருப்பதும் தெரிய வந்தது. அதன்பிறகு அந்த வழக்கை திசை திருப்ப. காவல்துறையில் இருந்து என்னென்னவோ முயற்சிகள் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றது. அதன்பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை, இரண்டு வருடங்களாக கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இனியாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் விதமாக, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான், என்னுடைய எண்ணம். இது போன்ற படங்களின் மூலம், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற, விழிப்புணர்வு கருத்தை, தனது முதல் படத்திலேயே கூறியுள்ள இயக்குனர் ஆறு ராஜா அவர்களுக்கு, எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பயப்படாதவர்களையும், வீரர்களையும், கொரோனா தாக்காது என்று, இங்கே ஜாக்குவார் தங்கம் பேசினார். என்னை யாருக்கும் பயப்படாதவர், வீரர் என்றும் அவர் கூறினார். ஆனால் என்னையும் கொரோனா தாக்கியது. நானும் 15 நாட்கள் சிகிச்சை பெற்று, ஓய்வு எடுத்து தான், அதிலிருந்து மீண்டு வந்தேன்” என்று பேசினார்.

நிகழ்ச்சியை பி ஆர் ஓ ஏ ஜான் தொகுத்து வழங்கினார். முன்னதாக மறைந்த பத்திரிகையாளர்கள் மேஜர் தாசன், நெல்லை பாரதி விஜயலட்சுமி ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாப்பிலோன் படத்துக்கு  ஷாம் மோகன் இசை அமைத்துள்ளார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சுதர்சன்  எடிடிங் செய்கிறார். மோகனராஜன் எழுதி உள்ளார்  குரு அய்யாத்துரை, ஜெகதீஷ், ரியா சுஷ்மா பாடல்கள் பாடி உள்ளனர்.  பாபி ஆண்டனி,  அர்ச்சனா நடன் அமைத்துள்ள்னர்; பில்லா ஜெகன் ஸ்டண்ட் அமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு ஏ. .ஜான்

Related posts

GV Prakash – Aishwarya to share screen space

Jai Chandran

கம்யூ. பாலகிருஷ்ணனுக்கு சூர்யா நன்றி கடிதம்

Jai Chandran

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் டீசர் ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend