2021ம் ஆண்டு தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் பெரும்பாலான நடிகர் நடிகைகள் வாக்களித்தனர். நடிகர் விஜய் யாரும் எதிர்பார்க்காவிதமாக நீங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்களிக்க புறப்பட்டார். அவரது வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வேகமாக அவர் புறப்பட்டதை கண்டதும் அப்பகுதியிலிருந்த ரசிகர்கள் அவரை டூ வீலரில் பின்தொடர்ந்தனர்,
நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார். அவரைகண்டதும் ரசிகர்கள் திரண்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்தி, விஜயை வாக்கு சவடிக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
இதுகுறித்து விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ்,’வாக்குச்சாவடி மையம் மிக அருகில் இருந்ததால் சைக்கிளில் வந்தார். நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை’ என்றார்.
வாக்களளித்துவிட்டு வெளியில் வந்த விஜய் மீண்டும் தனது வீட்டுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி வீடு திரும்பினார். விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
’பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம்’ என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ கூறும் போது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என்றார்.