Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சப்தம் (பட விமர்சனம்)

படம்: சப்தம்

நடிப்பு: ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ். பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா , அபிநயா

தயாரிப்பு: 7 ஜி சிவா

இசை: தமன் .எஸ்.

ஒளிப்பதிவு: அருண் பத்மநாபன்

இயக்கம்: அறிவழகன்

பி ஆர் ஓ: சதீஷ் S2

பழமையான மருத்துவ கல்லூரி ஒன்றில் அடிக்கடி சில மாணவ,  மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அமானுஷ்ய தீய சக்திகளால் இந்த சம்பவம் நடப்பதாக கல்லூரி நிர்வாகம் சந்தேகம் அடைகிறது. அமானுஷ்ய சக்திகள்  கல்லூரிக்குள் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக மும்பையில் இருந்து பேய்  ஆராய்ச்சியாளர் ஆதி வரவழைக்கப்படுகிறார். அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படவே கல்லூரி முழுவதிலும் ஒவ்வொரு இடமாக தான் வைத்திருக்கும் கருவிகள் மூலம் ஆவி இருக்கிறதா என்பதை ஆராய்கிறார். அதில் ஆவி இருப்பது உறுதியாகிறது. எதற்காக அந்த ஆவிகள் பழிவாங்களை நடத்துகிறது என ஆராய்கிறார். அது பின்னோக்கி காலத்தை நகர்த்துகிறது. கல்லூரியின் நூலகம் இருந்த இடம்  முன்பு ஒரு தேவாலயமாக இருந்தது. அங்கு நடந்த சம்பவங்கள்தான் அமானுஷ்ய சக்தியின் பழிவாங்களுக்கு காரணம் என்பது தெரிகிறது. அதன் பிறகு நடப்பது என்ன? அமானுஷ்ய பேயாக வந்து பழிவாங்குவது யார்? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

இயக்குனர் அறிவழகன் இப்படத்தை வெறும் பேய் கதையாக இல்லாமல் விஞ்ஞான ரீதியாக சில அமானுஷ்ய ஆராய்ச்சி விஷயங்களை உள்ளடக்கி ஏற்கனவே இதுபோல் சம்பவங்கள் நிஜத்தில் நடந்திருக்கிறது என்ற உதாரணங்கள் காட்டி நம்பும்படி படமாக்கி இருக்கிறார்.

அமானுஷ்ய சக்திகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளராக ஆதி நடித்திருக்கிறார் . கையில் நீண்ட மைக் வைத்துக் கொண்டு கூடவே சில கருவிகளையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று பேய் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முயலும் காட்சிகள் படபடப்பை அதிகரிக்கிறது.

கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் லட்சுமி மேனனிடம் ஆதி உதவி கேட்பதும், ஒரு கட்டத்தில் லட்சுமி மேனனையே பேய் உலுக்கி எடுத்து தூக்கி வீசுவதை பார்த்து அதிர்ச்சி அடைவதும் அரங்கில் திகில் கிளப்புகிறது.

ஆக்ஷன் கதையாக இருந்தால் 50 பேரை அடித்து பறக்க விட்டு ஸ்டைல்காட்டி நடித்து விட்டு சென்றிருப்பார் ஆதி ஆனால் இதில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. பேய் ஆராய்ச்சியாளர் என்ற பாத்திரத்தில் அந்த ஆராய்ச்சியாளராகவே மாறி ஆவிகளுடன் நைசாக பேசி அவைகளை கட்டுப்படுத்துவது, அவற்றின் நிறைவேறாத ஆசைகளை கேட்டு அதற்கேற்ற நிவாரணங்கள் தருவது என பொறுமையாக நடித்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

படத்தில் சிம்ரன், லைலா முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் என்ன வேடத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை படத்திலேயே பார்த்து ரசிப்பது நல்லது. ஆனால் ஒரு விஷயம் இதில் லைலா ஏற்றிருக்கும் பாத்திரம் இதுவரை அவர் ஏற்றிராத பாத்திரம் இனி அவரை பல படங்களில் வில்லியாக பார்க்கலாம்.

7 ஜி சிவா படத்தை தயாரித்திருக்கிறார்.

காட்சிகளுக்கு ஏற்ப இசையை தந்து படத்திற்கு துணை நின்றிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.எஸ். வெவ்வேறு உயிர்களின் இசை தொகுப்பை சப்தமாக மாற்றி காதுக்குள் ரீங்காரமிடச் செய்திருப்பது புதிய அனுபவம்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு வித்தியாசமான கலர் டோனை காட்சிகளில் பிரதிபலிப்பது கண்களுக்குள் காட்சிகளை பதிய வைக்கிறது.

ஏற்கனவே ஈரம் என்ற பேய் படத்தை வித்தியாசமான அணுகு முறையில் தந்த இயக்குனர் அறிவழகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சப்தம் என்ற மற்றொரு திகில் படத்தை விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிறார். இந்த படத்துக்காக அவர் திரட்டி இருக்கும் ஆதாரங்கள் கதைக்கு வலு சேர்க்கிறது. அந்த ஆதாரங்கள் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு வருவதால் ரசிகர்கள் அதையும் காண வேண்டியது அவசியம்.

சப்தம் – ஓங்கி ஒலிக்கும்.

 

Related posts

அந்தோனி படப்பிடிப்பு இலங்கையில் நிறைவு

Jai Chandran

கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா

Jai Chandran

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் வி.ஆர்.நாகேந்திரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend