படம்: அகத்தியா
நடிப்பு: ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா, யோகி பாபு, செந்தில், எட்வின், மெட்டில்டா,
தயாரிப்பு: ஐசரி கணேஷ்
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: தீபக் குமார்
இயக்கம்: பா. விஜய்
பிஆர்ஓ: நிகில் முருகன்
சினிமா ஆர்ட் டைரக்டரான ஜீவா புதுச்சேரியில் படம் ஒன்றுக்காக தன் கையில் உள்ள லட்சங்களை செலவு செய்து அரங்கம் அமைக்கிறார். திடீரென்று தயாரிப்பாளர் படப்பிடிப்பை கேன்சல் செய்வதால் ஜீவாவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதை ஈடுகட்ட படப்பிடிப்புக்காக அமைத்த பேய் அரங்கை பொதுமக்கள் பார்வைக்காக வடிவமைத்து அனுமதிக்கின்றனர். இந்நிலையில் அந்த அரங்கிற்குள் பல்வேறு அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அங்கிருக்கும் வெள்ளைக்கார பேய் எட்வின், ஜீவாவை துரத்தி அடிக்கிறது. முந்தைய காலகட்டத்தில் இதே வெள்ளைக்கார அதிகாரிக்கு அவரது தங்கையை குணமாக்குவதற்காக அர்ஜுன் சித்த மருத்துவம் செய்து சிகிச்சை அளிக்கிறார். எலும்புருக்கி நோயான கேன்சருக்கும் அர்ஜுன் மருந்து கண்டுபிடிக்க முனையும்போது அவர் கொல்லப்படுகிறார். அர்ஜுனுக்கும் ஜீவாவுக்கும் என்ன சம்பந்தம்? வெள்ளைக்கார பேய் எட்வின் ஜீவாவை துரத்தி அடிப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
பேய் படங்களில் கொஞ்சம் வித்தியாசமான படமாக உருவாகி இருக்கிறது அகத்தியா.
பாடலாசிரியர் பா. விஜய் இப்படம் மூலம் இயக்குனராகியிருக்கிறார். பாடலாசிரியருக்கு இயக்கத் தெரியுமா என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காக பக்காவான ஒரு கமர்சியல் ஹாரர் பேண்டஸி படத்தை குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் இயக்கியிருக்கிறார்.
ஜீவா சினிமா ஆர்ட் டைரக்டராக ஒரு தொழில்நுட்ப கலைஞர் வேடத்தை ஏற்றிருக்கிறார். படத்தில் அவர் அரங்கத்தை போடுகிறாரோ இல்லையோ தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பணத்தை கொட்டி பிரமாண்ட அரங்குகள் அமைக்க அதில் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குனர் பா விஜய்.
ஜீவாவுக்கு அடிக்கடி அர்ஜுன் கனவில் வருவது இவர்கள் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வந்தாலும் இவர்களுக்ககுள் ஒரு சம்பந்தமும் இருப்பதை இயக்குனர் அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.
சித்த வைத்தியராக அர்ஜுன் வேடமேற்றிருக்கிறார் அதேசமயம் அவருக்கான ஆக்சன் காட்சிகளில் குறை வைக்கவில்லை.சித்த வைத்தியம் பற்றி ஒரு புரிதலோடு அவர் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது அவர் பேசும் வசனங்களில் தெளிவாக தெரிகிறது.
கை கால்களை அசைக்க முடியாமல் இருக்கும் வெள்ளைக்கார டேவிட்டின் தங்கையை குணமாக்குவதற்காக அர்ஜுன் தரும் சிகிச்சைகளும், ஊக்க வார்த்தைகளும் தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும் தன்னம்பிக்கையை தரும்.
எட்வின் தங்கையாக வரும் மெட்டில்டா அழகோ அழகு.
ஜீவா காதலியாக வரும் ராசி கண்ணா, தாயாக வரும் ரோகிணி, டாக்டர் பூர்ணிமா பாக்யராஜ், மற்றும் செந்தில், யோகி பாபு தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்குனர் அவதாரம் எடுத்தாலும் அதில் ஈடுபாடு காட்டி செய்திருக்கும் வேலை படத்தை ரசிக்க வைக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக சித்த வைத்திய பாடல் பல நோய்களுக்கும் மூலிகை மருந்துகளை பாடல் வரிகளிலேயே சொல்வது பலருக்கு pபலன் தரும்.
ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பேண்டஸி படம் என்பதால் ஒரு பக்கம் பேய் ஆட்டம் இருந்தாலும் மற்ற எல்லா காட்சிகளையும் கலர்ஃபுல்லாக செய்து கண்களுக்கு வண்ண விருந்து படைத்திருக்கிறார்.
அகத்தியா- ஃபேண்டசி ஹாரர்.

