மங்களூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார், துருவ் விக்ரம். அதே கல்லூரியில் படிக்க வருகிறார், பனிட்டா சந்து. அவரை பார்த்தவுடனே துருவ் மனதில் காதல் பிறக்கிறது. வேறொரு கல்லூரி மாணவன் வந்து பனிட்டாவிடம் வாலாட்ட, அதை கேள்விப்பட்டு அவனை அடித்து துவம்சம் செய்கிறார் துருவ். இதையடுத்து பனிட்டா துருவ்வை தீவிரமாக காதலிக்க தொடங்குகிறார். மேற்படிப்பு முடிந்து டாக்டர் பணியில் சேரும் துருவ், தன் காதலியை பெண் கேட்டு செல்லும்போது, பனிட்டாவின் தந்தை சாதி வித்தியாசத்தை குறிப்பிட்டு, அவர்களின் காதலுக்கு தடை விதிக்கிறார். இதை தொடர்ந்து ஆறு மணி நேரம் கெடு விதித்து, அதற்குள் உறுதியான ஒரு முடிவை சொல்லியாக வேண்டும் என்று, பனிட்டாவுடைய பதிலுக்கு காத்திருக்கிறார் துருவ்.
ஆனால், அவரிடம் இருந்து சரியான ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்காத நிலையில் இதயம் உடைந்து கலங்கும் துருவ், தீவிர போதைக்கு அடிமையாகி விடுகிறார். பிறகு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவர், காதலிக்கு வேறொருவனுடன் திருமணம் ஆகிவிட்டதை அறிந்து அதிர்ச்சிஅடைகிறார். இந்நிலையில், விபத்தில் சிக்கிய ஒருவருக்கு ஆபரேஷன் செய்ய, கடுமையான போதையில் மூழ்கியுள்ள துருவ், ஆபரேஷன் தியேட்டருக்கு செல்கிறார். இதனால் அவர் மீது மெடிக்கல் கவுன்சிலில் புகார் தரப்பட்டு, நீதிபதி முன்னால் விசாரணை நடக்கிறது. எப்படியாவது தன்னை காப்பாற்ற முயற்சிக்கும் குடும்பத்தினர் மத்தியில், தன் மனசாட்சி உறுத்தியதால் தவறை ஒப்புக்கொள்கிறார் துருவ்.
தொடர்ந்து டாக்டராக செயல்பட முடியாத நிலையில், எல்லா சம்பவங்களையும் மறக்க வெளிநாடு செல்கிறார். எனினும் காதலியின் ஞாபகம் அவரை விடாமல் துரத்த மீண்டும் இங்கு வந்து செட்டிலாகிவிடுகிறார். அப்போது பனிட்டா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரிடம் சென்று, சாதி பிரச்னையால் தோற்றுப்போன தங்கள் காதலை புதுப்பித்துக்கொள்வதற்கு அனுமதி கேட்கிறார். இது சரியா, தவறா என்று முடிவு எடுக்க முடியாமல் திணறும் பனிட்டா, துருவ் காதலை மீண்டும் ஏற்றுக்கொண்டாரா? பனிட்டா திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பதற்கு விடை சொல்கிறது படம்.
விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் இது. முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு அட்டகாசமான பாடிலாங்குவேஜையும், மேனரிசங்களையும் வெளிப்படுத்தி நடித்து, நம்பகமான புதுவரவு என்பதை நிரூபித்து உள்ளார். பனிட்டாவை வெறித்தனமாக காதல்செய்வது, குடும்பத்தினர் பாசத்தை முதலில் உதாசீனப்படுத்தி விட்டு; பிறகு அவர்களை நினைத்து கலங்குவது, தனது நண்பர்களிடம் நயமாக நட்பை வெளிப்படுத்துவது, காதலிக்கு திருமணம் ஆகிவிட்டதை அறிந்து துடிப்பது, கர்ப்பமாக இருக்கும் காதலியை பார்த்ததும்; மீண்டும் அவருடன் சேர துடிப்பது, போதைக்கு அடிமையாகி அதிலேயே வாழ்வது என்று, பல்வேறு குணங்களை வெளிப்படுத்தி, சில காட்சிகளில் விக்ரமுக்கே சவால் விடுகிறார் துருவ்.
அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு, காதலனுடன் விநாடிக்கு விநாடி லிப்லாக் முத்தக்காட்சியில் அசத்துவது, பிறகு அவனுடன் படுக்கையில் தன்னை முழுவதுமாக ஒப்படைப்பது என்று, கேரக்டரை உணர்ந்து நடித்து இருக்கிறார் பனிட்டா. துருவ் தந்தையாக கடலோரக் கவிதைகள் ராஜா, பாட்டியாக லீலா சாம்சன், நண்பனாக அன்புதாசன், வக்கீலாக பகவதி பெருமாள் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். சினிமா ஹீரோயினாக வந்து, துருவ்வை காதலிக்கும் பிரியா ஆனந்துக்கு சின்ன கேரக்டர் என்றாலும், தன் இருப்பை பதிவு செய்துவிட்டு செல்கிறார்.
கல்லூரி மாணவர்கள் காதலை இயல்பாக கடத்திச் சென்று, மனதுக்கு மிக நெருக்கமாகி விடுகிறது ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு. ரதன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளின் நகர்வுக்கு உதவி செய்திருக்கிறது. தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழுக்கு கொடுத்து இருக்கிறார், இயக்குனர் கிரிசாயா. படத்தில் வரும் சில பெட்ரூம், முத்தக்காட்சிகள் நெளிய வைக்கிறது. முதல் பாதி, நீளம் அதிகம். இதுபோன்ற சிறு குறைகளை மறக்கடிக்கிறது படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும், கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டும். ஆதித்ய வர்மா, இளசுகளின் காதல் போராட்டம்.