படம்: உடன்பிறப்பே
நடிப்பு: சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, நரேன், கலையரசன், சூரி, சிஜாரோஸ், சித்தார்த், நிவேதிதா சதிஷ், வேல்ராஜ், வேல ராமமூர்த்தி, தீபா, நமோ நாரயணன்,
இசை: டி.இமான்
தயாரிப்பு: ஜோதிகா, சூர்யா (2டி எண்ட்ர்டெயின்மெண்ட்)
இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்
இயக்கம்: இரா சரவணன்
பி.ஆர். ஒ: யுவராஜ்
வைரவன் (சசிகுமார்) , மாதங்கி (ஜோதிகா( உடன்பிறந்த அண்ணன், தங்கை. ஜோதிகாவை அந்த ஊர் பள்ளி ஆசிரியர் சமுத்திரக்கனிக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஒரே குடும்பமாக இருக்கும் இவர்களுக்குள் எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தால் மனக்கசப்பு ஏற்படுகிறது. சமுத்திரக்கனி ஜோதிகாவை அழைத்துக்கொண்டு தனிக் குடித்தனம் செல்கிறார். அப்போது ஏற்படும் பகை 15 வருடமாக சசிகுமாருக்கும் சமுத்திரக்கனிக்கும் இடையே தொடர்கிறது. ஆனால் அண்ணன் மீது பாசத்துடனே நாட்களை கழிக்கிறார் ஜோதிகா. இவர்களின் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகின்றனர். ஜோதிகாவின் மகளை சசிகுமாரின் மகனுக்கு தரவிரும்பாத சமுத்திரக்கனி அவரை வேறு மாப்பிள்ளைக்கு தர முடிவு செய்து நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அதேசமயம் சசிகுமார் குடும்ப சகிதமாக வந்து சமுத்திரக்கனியிடம் பெண் கேட்கிறார். அவர தர மறுக்கிறார். கூடியிருக்கும் ஊர்மக்கள் பேசி திருமண நிச்சயதார்த்தத்துக்கு சமுத்திரக்கனியை ஒப்புக்கொள்ளச் செய்கின்றனர். இந்நிலையில் சமுத்திரக்கனியின் மகளை யாரோ கத்தியால் குத்தி விடுகிறனர். உயிருக்கு போராடும் அவரை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். சசிகுமார் மீது இருக்கும் கோபத்தால்தான் யாரோ தன் மகளை குத்திவிட்டார்கள் என்று சமுத்திரக்கனி எண்ணுகிறார். இதில் உள்ள மர்மத்தை சசிகுமார் கண்டுபிடித்து அவர்களை தீர்த்துக்கட்டுகிறார். இந்த விவகாரத்தில் மறைந்திருக்கும் வேறு சில உண்மைகள் வெளிவரும்போது ஷாக் ஏற்படுகிறது அது என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
ஜோதிகா நடித்திருக்கும் 50 வது படம் உடன்பிறப்பே. அவரது நடிப்புக்கு தீனி போடுவதாக அமைந்திருக்கிறது மாதங்கி கதாபாத்திரம்.
குளத்தில் மூழ்கிவிட்டார் ஜோதிகா என்று சூரியும், ஊர் மக்களும் பயந்து அவரை குளத்துக்குள் மூழ்கி தேடும்போது குளத்திலிருந்து அம்மன் சிலையுடன் ஜோதிகா வெளிவரும் அறிமுக காட்சியே சிலிரிப்பை ஏற்படுத்துகிறது.
ஜோதிகாவின் பண்பட்ட நடிப்பை இப்படத்தில் காணமுடிகிறது. அண்ணன் சசிகுமார் மீது பாசத்தை பொழியும் கருணையான பார்வையாகட்டும், அவரது குடும்ப கவரவத்தை காப்பாற்ற தான் பிள்ளை பெறுவதைக்கூட தள்ளி வைத்த வைரக்கியமாகட்டும் அனைவரின் உள்ளத்திலும் தங்கையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துக் கொள்கிறார் ஜோதிகா.
பிரசவம் பார்க்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் கட்ட வேண்டும் என ஆஸ்பத்திரியில் ஏழை பெண்ணிடம் ஊழியர் கெடுபிடி செய்ய அப்போது வரும் ஜோதிகா தனது தாலியை அடகு வைத்து அந்த பணத்தை கொடுத்து தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றும் காட்சி பெண்கள் மனதை மெழுகாக உருக வைக்கிறது.
கணவர் சமுத்திரக்கனியின் பேச்சையும் மீறாமல், அண்ணன் சசிகுமாரையும் விட்டுக்கொடுக்காமல் ஊர் மக்களிடம் ஜோதிகா வாதாடுவது கதாபாத்திரத்தின் நடுநிலைத்தன்மையை நிரூபிக்கிறது. இப்படிப்பட்ட ஜோதிகா கடைசியில் காளி போல் மாறி ஆவேசமாகும்போது ஜோவின் கண்களில் அனல் தெறிக்கிறது.
லேசான நரை, தூக்கி வாரிவிட்ட சிகை அலங்காரம், வேட்டி சட்டை என பெரிய மனித தோரணையில் கொஞ்சம் தாதாயிசத்தையும் சேர்த்த கதாபாத்திரமாக வருகிறார் சசிகுமார். சமுத்திரக்கனியின் மகளை ரவுடிகள் கத்தியால் குத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று ரவுடிகளை துவம்சம் செய்து அதிரடி காட்டுகிறார்.
பள்ளி வாத்தியராக சமுத்திரக்க்னி சட்டத்தின்படி நடக்கும் பாத்திரம் ஏற்றிருக்கிறார். மற்றவர்களுடம் அன்பு காட்டும் சமுத்திரக்கனி சசிகுமாரை கண்டால் மட்டும் கோபம் அடைவது இருவரும் நேருக்கு நேராக மோதிக்கொள்வார்களோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
சசிகுமாரின் விசுவாசியான சூரியை சமுத்திரக்கனி போலீசில் சிக்க வைக்கும் அந்த சாப்பாடு போடும் சீன் கலகலப்பு. ’என்னை என்கவுண்டரில் சுட்டாலும் சரி சமுத்திரக்கனியுடன் டூவீலரில் வரமாட்டேன்’ என்று போலீசிடம் சூரி புலம்புவது வெடி சிரிப்பை வரவழைக்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் வேல்ராஜ் முறைத்துப்பார்த்து பயமுறுத்துகிறார். அதேசமயம் படத்தின் ஒளிப்பதிவாளராக கிரமத்து அழகை கண்களுக்குள் படரச் செய்கிறார். மேலும் நரேன், கலையரசன், சிஜாரோஸ், சித்தார்த், நிவேதிதா சதிஷ், வேல ராமமூர்த்தி, தீபா, நமோ நாரயணன் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையில் மெலடிகள் காதை வருடுகின்றன.
உடன்பிறபே- பாசக்கார அண்ணன் தங்கை.