படம்: தூநேரி
நடிப்பு: ஜான் விஜய், நிவின் கார்த்திக், மியாஸ்ரீ, மரியா சார்ம், அஷ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா, சந்தோஷ், மணிகண்டன், கிருஷ்ணகுமார்
தயாரிப்பு: ஷேடோ லைட் என்டர்டெயின்மென்ட்
இசை: கலையரசன்
ஒளிப்பதிவு: கலேஷ் & அல்லென்
இயக்கம்: சுனில் டிக்ஸன்
பி ஆர் ஒ : ஏ.ஜான்
சென்னையிலிருந்து காட்டுப்பகுதிக்கு தனது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் இடமாறலாகி வருகிறார் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக். அவர்கள் குடியேறும் வீட்டுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. அதைக்கண்டு மனைவியும் குழந்தைகளும் பயப்படுகின்றனர். வேறு வீட்டுக்கு இடம் மாற முயன்றபோது அந்த வீடுகள் ஏற்கனவே இருக்கும் வீட்டை விட பயமுறுத்துவதாக இருப்பதால் முதலில் குடியேறிய வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர். அந்த ஊரில் கருப்பசாமியின் ஆவி நடமாடுவதாகவும் அது பலரையும் பலி வாங்குவதாகவும் பேச்சு உள்ளது. அதற்கேற்ப அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் வர அவர் கருப்பசாமி பற்றி ஊரில் விசாரணை நடத்துகிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகளை பேய் பயமுறுத்துகிறது. இதை முதலில் நம்ப மறுக்கும் இன்ஸ்பெக்டர் பின்னர் அது உண்மைதான் என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இதற்கெல்லாம் காரணம் அந்த ஊரில் இருக்கும் மந்திரவாதிதான் என்று கருதி அவரை கைது செய்கிறார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் குழந்தைகள் பேயிடம் சிக்கிக்கொள்கின்றனர். அவர்களை காப்பாற்ற முடிந்ததா என்பதை திகிலுடன் விளக்குகிறது படம்.
சமீபகாலத்தில் சில பேய் படங்கள் காமெடி படங்களாக வந்தன ஆனால் தூநேரி பயமுறுத்தும் பேய் கதையாக உருவாகி இருக்கிறது. படம் சிட்டியில் பளிச்சென தொடங்கினாலும் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக் இடமாற்ற லாகி காட்டுப்பகுதியில் உள்ள கிராமத்துக்கு வரும்போதே இருள் சூழ்ந்த திகிலும் தொடங்கிவிடுகிறது.
இரவு நேரத்தில் மலைப்பாதையில் கார் வருவதும் அங்கு இருக்கும் வீட்டின் தோற்றம், எதிரிலேயே சுடுகாடு என தொடக்கத்திலேயே முழுசாக பயத்தின் பிடியில் ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர்.
வழக்கம்போல் எல்லோரும் பேய்க்கு பயந்தாலும் ஹீரோ மட்டும் பயப்படமாட் டார் . அந்த பாணியில்தான் நிவின் கார்த்திக்கும் பேயாவது, பிசாசாவது என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வலம் வருகிறார். கொலை வழக்கைகளை துருவ தொடங்குவதுடன் ஊரில் மக்களை கொல்லும் கருப்பசாமி பேய் பற்றி விசாரணை தொடங்கி அதை நெருங்கி செல்லும்போது அடுத்தடுத்து மர்ம முடிச்சுகள் அவிழ்வது விறுவிறுப்பு.
தன் மகளுடன் படிக்கும் சக மாணவியை வீட்டில் அவளது சித்தி கொடுமை செய்வதை அறிந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரிக்கும்போது விரைப்பு காட்டுகிறார் நிவின்.
கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் பேய் சண்டை அதிர வைக்கும் வகையில் படமாகி இருக்கிறது. கருப்பசாமியாக ஜான்விஜய் வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார். முரட்டுத்தனமாக ஊர் மக்களை நடுங்க வைக்கும் அவரது நடிப்பும் அதேபோல் அழகான ஹீரோயினாக வந்தாலும் பிற்பகுதியில் மியாஸ்ரீ ஆடும் பேயாட்டமும் மிரள வைக்கிறது.
அஷ்மிதா, நகுல், அபிஜித் என திகில் படத்தில் 3 குழந்தை நடசத்திரங்கள் பயப்படாமல் நடித்திருப்பதற்கே பாராட்டலாம். சுடுகாட்டில் பயமில்லாமல் அவர்கள் நடமாடுவது குழந்தைதனத்தை வெளிப்படுத்தி நடிப்பதுமாக கவர்கின்றனர்.
அம்மா, அப்பா, குழந்தை செண்டிமெண்ட்டுடன் பேய் கதை அமைத்திருக்கும் இயக்குனர் சுனில் டிக்ஸன் திரைக் கதையில் ஆவி பறக்க வைத்திருக்கிறார்.
கலேஷ் மற்றும் அல்லென் கேமரா காட்சி களை பயத்தின் கலவை மாறாமல் படமாக்கி இருக்கிறது.
கலையரசனின் இசையும் காட்சிகளை மேம்படுத்தி காட்டி திக் திக் நிமிடங்களை உருவாக்குகிறது.
தூநேரி – பேய் பட ரசிகர்களுக்கு கிடைத்த மயான கொள்ளை.