ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாராகும் படம் குற்றம் புதிது. இப்படத்தை நோஹா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்குகிறார். ஜாசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கரண் பி. கிருபா இசையமைக்கிறார். எடிட்டிங் எஸ் கமலக்கண்ணன். தயாரிப்பு ஆனந்தகுமார். ப்ரொடக்ஷன் டிசைனர் ஹாசினி பவித்ரா. பிஆர்ஓ சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர் (D ONE).
குற்றம் புதிது படத்தில் ஹீரோவாக தருண் விஜய் அறிமுகமாகிறார். கதாநாயகியாக செஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் நடிக்கின்றனர்.
இப்படம் பற்றி இயக்குனர் நோஹா ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது:
ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் தன்மகனை ஹீரோவாக நடிக்க வைக்க கதைகள் கேட்டுக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. அவரை நேரில் சந்தித்து என்னிடம் கதை இருப்பதாக கூறினேன். ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் என்னிடம் இருந்த நிலையில். இப்படத்தில் தயாரிப்பாளர் மகன் தருண் விஜய் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதால் அவருக்கான கதையை தேர்வு செய்து நான் கூறினேன். அதுதான் குற்றம் புதிது. இந்த கதையை கேட்ட தயாரிப்பாளர் ஹீரோவுக்கு நெகட்டிவ் ஷேடு உள்ள கதையாக இருக்கிறது. என் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யும் நிலையில் இந்த கதை பொருத்தமாக இருக்காதே என்று சந்தேகம் எழுப்பினார். ஆனாலும் முழு கதையை கேட்ட பிறகு அவருக்கு கதை பிடித்திருந்தது. இது நல்ல கதையாகத்தான் இருக்கிறது ஆனால் இந்த படம் எப்படி வரும் என்பதை முன்னதாக ஒரு பைலட் பிலிம் எடுத்துக் காட்டுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து தருண் விஜயை வைத்து முன்னதாக இந்த கதையில் ஒரு காட்சியை பைலட் படமாக எடுத்து தயாரிப்பாளருக்கு திரையிட்டு காட்டினேன். அதை பார்த்துவிட்டு எனக்கும், அதில் நடித்த தருணுக்கும் கை கொடுத்து வாழ்த்து ககூறியதுடன் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என்றும் கூறினார்.
தருண் விஜய் புதுமுக ஹீரோவாக அறிமுகமானாலும் அவர் ஏற்கனவே நடிப்பு பயிற்சி, சண்டை மற்றும் நடனப் பயிற்சி பெற்றவர் ஆவார். எனவே அவரை நடிக்க வைப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. கதையைக் கேட்டு விட்டு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி சரியான நடிப்பை வழங்கினார். கதாநாயகியை பொறுத்த வரை செஷ்விதா கனிமொழி பொருத்தமாக இருப்பார் என்று தெரிந்தது. அதன்படி அவரும் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தார்.
ஃபுட் டெலிவரி செய்யும் ஒரு இளைஞன் திடீரென்று தலையில் அடிபட்டு வினோதமான ஒரு பாதிப்புக்கு உள்ளாகிறான். அதன் பிறகு அவனது நடவடிக்கை மாறுகிறது. அவன் மீது கொலை பழி விழுகிறது. அந்தக் கொலையை ஹீரோ செய்தாரா?அவருக்குள் ஒரு மிருகம் இருக்கிறதா என்ற பல்வேறு திருப்பங்களுடன் இந்த கதை அமைந்திருக்கிறது.
தருண் விஜய் இதில் கொரிலா குணாதிசயம் கொண்டதுபோல் நடிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. கொரில்லா குரங்கு போல் அவர் கைகளையும், கால்களையும் ஊன்றி ஊன்றி நடப்பது போல் மிகவும் கஷ்டப்பட்டு வலிகளை தாங்கி நடித்திருக்கிறார். அதிலிருந்து நடிப்பின் மீது அவர் எவ்வளவு ஆர்வம் வைத்திருக்கிறார் என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
இந்த படத்தில் டீசர் காட்சியில் வன்முறை அதிகம் இருப்பது போல் தெரியும். ஆனால் படம் அதிலிருந்து மாறுபட்டு இருக்கும். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அழகு டெக்ஸ் டெக்னீசியன்களும் தங்களது கடுமையான உழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இவ்வாறு இயக்குனர் நோஹா ஆம்ஸ்ட்ராங் கூறினார்.

ஹீரோவாக அறிமுகம் ஆகும் தருண் விஜய் கூறியதாவது:
என் வீட்டில் என் அப்பா , அம்மா, அக்கா எல்லோருமே டாக்டர்கள் தான். என்னையும் டாக்டராகத்தான் விரும்பினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் நான் நடிகனாக போவதாக வீட்டில் கூறினேன். முதலில் அவர்கள் அதற்கு தயக்கம் காட்டினார்கள். பின்னர் எனது இலட்சியத்தை, ஆசையை புரிந்து கொண்டு நடிக்க அனுமதி கொடுத்தார்கள். அதன் பிறகு நடிப்புக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளை நான் முறைப்படி பயின்றேன். நல்ல கதைக்காக காத்திருந்த போதுதான் குற்றம் புதிது படக் கதையை இயக்குனர் நோஹா கூறினார். அதில் நடிப்புக்கும், திறமையை வெளிப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்ததால் ஒப்புக்கொண்டேன்.
ஏற்கனவே நடிப்பு பயிற்சி பெற்றிருந்ததால் படப்பிடிப்பின்போது எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. இயக்குனர் எப்படி சொன்னாரோ அப்படியே நடித்தேன். சந்தேகம் ஏற்படும் போது அவரே நடித்துக் காட்டுவார். அதை உள்வாங்கி நான் நடிப்பேன். கொரில்லா குரங்கு போல் கை கால்களை ஊன்றி நடப்பதற்காக நான் மூன்று மாதம் பயிற்சி எடுத்தேன். கை விரல்களை மடக்கிக்கொண்டு தரையில் ஊன்றி கைகளை முன்னும் அசைத்து நடந்தபோது எனது தோள்பட்டையே வீங்கிவிட்டது. அந்த சிரமத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வலியை பொறுத்துக் கொண்டு காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக 100% நடிப்பை வழங்கினேன்.
எனது நிஜப் பெயர் தருண். விஜய் என்ற பெயரை நானாகவே சேர்த்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு வலிமை தரும் என்பதால் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு தருண் விஜய் கூறினார்.
செஷ்விதா கனிமொழி கூறியதாவது:
குற்றம் புதிது படத்தில் கதாநாயகியாக என்னை நடிக்க அழைத்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம் இப்போதெல்லாம் கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட வேண்டும், அதில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் நான் இன்ஸ்டாகிராமில் இல்லை. ஆனாலும் இயக்குனர் என்னை அழைத்து ஒரு காட்சியை சொல்லி நடித்துக் காட்ட சொன்னார். நடித்துக் காட்டினேன் அது அவருக்கு பிடித்துப் போகவே என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். குற்றம் புதிது படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இது மாறுபட்ட படமாக இருக்கும். அனைத்து தரப்பினையும் இந்த படம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு செஷ்விதா கனிமொழி கூறினார்.
குற்றம் புதிது படத்தின் டீசரில் புது ஹீரோ
