Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜனநாயகன் (பட விமர்சனம் )

படம்: ஜனநாயகன்

நடிப்பு: ஜோசப் விஜய் (தமிழக முதல்வர்), பூஜா ஹெக்டே,  பாபி தியோள்,  மமீதா பைஜூ,  பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி, நாசர், சுனில், ரெபா மோனிகா, மோனிஷா மெஸ்ஸி,

தயாரிப்பு: வெங்கட் கே நாராயணா

இசை: அனிருத்

ஒளிப்பதிவு : சத்யன் சூரியன்

இயக்கம்: எச் வினோத்

பிஆர்ஓ : ரியாஸ் கே அகமத் பாரஸ்

கதை: போலீஸ் உயர் அதிகாரி பாபி தியோள் ஊர் மக்களை கொடுமைப்படுத்தும் கட்சி மாவட்ட செயலாளர் பிரகாஷ்ராஜை தட்டி கேட்டு கைது செய்ய செல்கிறார். ஆனால் அவரை பிரகாஷ்ராஜ், ஆடையை கழற்றி நிக்கருடன் அடித்து துரத்துகிறார். அவமானமடைந்த பாபி தியோள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்நிலையில் ஒரு பெண்ணின் மகளை பிரகாஷ்ராஜ் கூட்டம் கடத்தி செல்கிறது. அவரை மீட்டு வர இளம் போலீஸ் அதிகாரி விஜய் செல்கிறார். இதற்கிடையில் மன உளைச்சலுக்கு ஆளான பாபி தியோள் அரசியலில் குதித்து அதிகாரத்தை கைப்பற்றி தன்னை அவமானப்படுத்திய மக்களை மதக் கலவரம் தூண்டி நாட்டையே சீரழிக்க முடிவு செய்து எதிரி நாட்டுடன் இணைந்து சதி திட்டம் தீட்டுகிறார். இதையறிந்த விஜய், பாபி தியோள் உருவாக்கும் கலவரத்தை எப்படி அடக்கி தீர்வு காண்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த கடைசி படமாக ஜனநாயகன் உருவாகி இருக்கிறது. இந்த படம் தணிக்கையில் சிக்கி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு சுப்ரீம் கோர்ட் வரை சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு தற்போது திரைக்கு வந்திருக்கிறது.
இப்படம் தொடங்கும்போது நடிகராக இருந்த விஜய் இந்த படம் வெளியாகும்போது தமிழக முதல்வராக ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படம் எப்படி இருக்கும் என்பது சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த கோட், லியோ, தெறி, மாஸ்டர் போன்ற படங்களில் தெரியும் அந்த பாணி படத்துடன் தெலுங்கு நடிகர் என் டி பாலகிருஷ்ணாவின் படத்தையும் ஒன்றாக கலந்தால் அதுதான் ஜனநாயகன். இன்னும் சொல்லப்போனால் என் டி பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி தெலுங்கு படத்தை தழுவித்தான் ஜனநாயகம் படமே உருவாகி இருக்கிறது.

விஜய் தனது பாணியில் நடிக்கும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. கௌதம் மேனன் மகளை தத்தெடுத்து அந்த குழந்தையை ராணுவத்தில் சேர்ப்பதற்கான பயிற்சி அளிக்க முயல்வது, விஜய் தரும் பயிற்சியை செய்ய முடியாமல்  மமிதா பைஜூ சோர்வடைவது, சலித்துக் கொள்வது, தன்னால் முடியவில்லை என்று புலம்புவது என முரண்டு பிடித்தாலும், பெண் என்றால் துணிச்சலாக இருக்க வேண்டும் என்று விஜய் அவருக்கு ஊக்கம் கொடுப்பது  தைரியத்தை வரவழைக்கும்.
இதுபோல் விஜய் தனது பாணியில் நடித்துக் கொண்டிருக்கும் வரை படத்தை ரசிக்க முடிகிறது ஆனால் சண்டைக் காட்சியில் அவர் என் டி பாலகிருஷ்ணவாக ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் காட்சிகள் எல்லாம் ஓவரோ ஓவர்.

ஏதோவொரு கிராமத்தில் தொடங்கும் கதை ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என்று எங்கெங்கோ செல்கிறது. இந்த படத்தை தீரன் படத்தை இயக்கிய எச் வினோத் தான் இயக்கினாரா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகள் திடீரென்று முளைத்து வருவதெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

கதை எங்கு சென்றாலும் சரி கடைசியில் அது தேர்தல் நேரத்தில் வாக்குகளை அள்ளித்தரும் படமாக இருக்க வேண்டும் என்று விஜயின் எண்ணத்துக்கு ஏற்ப எதிர்க்கட்சிகளை தாக்கும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக கமல்ஹாசனின் கட்சியை தாக்கும் வகையில் டார்ச் லைட் அடித்து பார்த்தாலும் கட்சியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது போன்ற வசனமும், 50 வருட அரசியல் செய்த கட்சி என்று திராவிட கட்சியை தாக்கும் வசனங்களும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக யாரை தாக்குகிறார் என்பது வெட்ட வெளிச்சம்.

கோவிலை முஸ்லிம் இடிப்பான், மசூதி, சர்ச்சை இந்துக்கள் இடிப்பார்கள் என்று கலவரம் தூண்டும் வசனங்கள் இடம்பெறும்போது அரங்கில் ஒருவித பய உணர்வு பரவுகிறது. இந்த சம்பவம் நடந்தால் நாடு நாடாக இருக்காது என்பதை உணர்த்துவதற்காக வைத்திருக்கும் காட்சி என்று இயக்குனர் கூறினாலும்  ஜீரணிக்க முடியாத காட்சிகளாகத்தான் இருக்கின்றன.

வில்லனாக பாபி தியோள் நடித்திருக்கிறார். அவருக்கு அடுத்த வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். வில்லித்தனமான கதாபாத்திரத்தில் பிரியாமணி சர்ப்ரைஸ் தருகிறார். பூஜா ஹெக்டே நினைவிலேயே நிற்கவில்லை.

வெங்கட் கே நாராயணா படத்தை தயாரித்திருக்கிறார்

அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கிறது

சத்யன் சூரியன் ஒளிப்பதிவை விட, வி எஃப் எக்ஸ் காட்சிகள் ஏ ஐ காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் தான் படம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது.

முதல் காட்சியில் கலவரத்தை தூண்டி விட்டு அடுத்த காட்சியிலேயே கலவரத்தை மக்கள் மத்தியில் அடக்கி விடலாம் என்பது போன்று காட்டுவது கற்பனையிலும் நடக்காது. இதில் இயக்குனர் எச் வினோத் எப்படி கமப்ரமைஸ் ஆனார் என்று தெரியவில்லை.

ஜனநாயகன் படம் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு விருந்து தான். ஆனால் எதார்த்தவாதிகளிடம் விமர்சனத்தை பெறும்.

ஜனநாயகன் – ரசிகர்களை நம்பி..

 

Review by

k. Jayachandhiran

Trending cinemas now.com

 

 

 

..

 

Related posts

நந்தன் (பட விமர்சனம்)

Jai Chandran

“Pookie” Launched with a Grand Pooja Ceremony

Jai Chandran

MaanaaduTrailer crossed 2.5 million views

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend