Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிராண்மா திகில் காட்சியில் நடித்துவிட்டு பயந்தேன் – சோனியா அகர்வால்

ஜி என் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ். ஆர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது,’ இதில் நடித்திருக்கும் நடிகர்களாலும் தொழில்நுட்பக் கலைஞர்களாலும் தான் இப்படம் விரைவாக முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இது ஒரு ஹாரர் திரில்லர் படம். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தபோது கொரோனா காலம் வந்து விட்டது .எனவே 30 நாட்களில் எடுக்க வேண்டியதை 12 நாள்களில் எடுக்க வேண்டியிருந்தது. அதுவும் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்த வேண்டும். இருந்தாலும் இதில் நடித்திருக்கும் அனைவரும் முகம் சுழிக்காது நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த படம் இந்நேரம் உருவாகி இருக்காது. அவர்களுக்கு நன்றி .தமிழில் படத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பி எடுத்துள்ளோம். உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கிறோம்.” என்றார்.

இப்படத்தில் நடித்துள்ள நடிகர் ஹேமந்த் மேனன் பேசும்போது, ” நான் ஏற்கெனவே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன். இது எனக்கு இரண்டாவது படம். மேலும் இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன்.நான் இதுவரை கதாநாயகனாக நடித்திருந்தாலும் கிரண்மாவில் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன் . இதில் நடித்துள்ள சோனியா அகர்வாலின் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்.” என்றார்.

நடிகை சார்மிளா பேசும்போது, ” நான் தமிழுக்கு புதிது இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது சந்திக்கிறோம். இடையில் நிறைய மலையாளப் படங்களில் நடித்தேன். இந்தப் படத்தை தமிழிலும் மலையாளத்திலும் நேரடியாக எடுப்பதுபோல் எடுத்துள்ளார்கள். இந்தப் படப்பிடிப்பு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நடிப்பவர்களை தயாரிப்பு நிர்வாகிகள் தான் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள். இதில் தேவைப்படும்போது மட்டும் அழைத்து காட்சி முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அந்த அளவில் மன அழுத்தம் இல்லாமல் இந்தப் படப்பிடிப்பு நடந்தது. சோனியா அகர்வால், விமலா ராமன்  போன்றவர்களுடன் நடித்தபோது ஏதோ கல்லூரிக் காலங்களில் இருப்பது போல் இருந்தது. ஒரு குடும்பத்தில் பழகியது போல் இந்த படக்குழுவினருடன் பழகிய அனுபவம் உணரவைத்தது” என்றார்.

படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் பேசும்போது, “இந்தப் படப்பிடிப்பு ஆரம்பித்த போது கொரோனா காலம் வந்துவிட்டது. படத்தை முப்பது நாளில் முடிக்கத் திட்டமிட் டோம்.ஆனால் விரைவில் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அந்த நெருக்கடியில் 12 நாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம் .உங்களுக்கே தெரியும் இரவு படப்பிடிப்புக்குக் கண் விழிக்கும்போது நடிப்பவர்களுக்கு முகத்தில் சோர்வு தெரியும். இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் சோனியா அகர்வால், விமலா ராமன் மற்றும் அனைவரும் நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மதியம் ஆரம்பிக்கிற படப்பிடிப்பு  மறுநாள் காலை ஏழு மணி வரை தொடரும். அந்தளவுக்கு அவர்கள் தூக்கத்தை மறந்து நடித்துக் கொடுத்தார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை முடித்து இருக்க முடியாது. கடைசி நாட்கள் அவர்கள் தூங்கவே இல்லை. அவர்களது ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி

இது வழக்கமான ஹாரர் படம் போல் இருக்காது. படத்தின் முதல் பாதி ஹாரராகவும் இரண்டாவது பாதி சர்வைவல் மாதிரியும் இருக்கும். ஹாலிவுட்டில் படத்தில் கதையை மட்டும்தான் சொல்வார்கள். இடையில் காமெடி போன்ற வணிக விஷயங்கள் சேர்த்திருக்க மாட்டார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசும்போது,” 1895-ல் சினிமா கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலில் லூமியர் பிரதர்ஸ் பாரிசில் படத்தை திரையிட்டார்கள். அடுத்த .ஆண்டு 1896 -லேயே ‘ஹவுஸ் ஆப் த டெவில்’ என்ற பேய்ப்படம் வந்துவிட்டது. இப்படிப் பேய்க்கும் சினிமாவிற்கும் நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது.
சுந்தர் .சி சார் ஒருமுறை சொன்னார் “வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் சாமியை நம்பு. சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் பேயை நம்பு “என்றார். இப்போதெல்லாம் பேய்தான் சினிமாவைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை விமலா ராமன் பேசும்போது,” இந்த புதிய படக்குழுவினரின் படத்தில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் என்னிடம் பளிச்சென்று நேரடியாக வாய்ப்பு கேட்டது எனக்குப் பிடித்திருந்தது . பேய்ப் படமாக இருந்தாலும் இதன் படப்பிடிப்பு அனுபவம் ஜாலியாக சிரிப்பாக இருந்தது. இரவு பகல் தூக்கம் இல்லை. ஒரு நாளாவது எங்களை தூங்க விடுங்கப்பா என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.அந்த அளவுக்கு இடைவிடாது படப்பிடிப்பு நடந்தது”என்றார்.

நடிகை சோனியா அகர்வால் பேசும்போது , “இதில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களை நன்றாக நடத்தினார்கள். படக்குழுவினர் ஒரு குடும்பத்தைப் போல் பழகினார்கள்.
உடன் நடித்த விமலா ராமன் ஷர்மிளா நண்பர்களைப் போல பழகினார்கள். இந்த படம் நன்றாக வந்து இருக்கிறது. படத்தில் விமால் ராமன் வருவதற்கு முன் நான் திகில் காட்சியில் நடித்துவிட்டு அறைக்கு சென்று தனியாக இருந்தால் பயமாக இருக்கும். விமால ராமன் வந்த பிறகுதான்  பயம் போனது. இருவருமே நல்ல நண்பர்கள் இருவருமே இணைந்து நடிக்கும்போது மிகவும் சவுகரியாக உணர்ந்தேன்”என்றார்.

விழாவில் ட்ரெய்லரை வெளியிட்டுத் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “நான் எது பேசினாலும் ட்ரெண்ட் ஆகிவிடுகிறது. நான் வழக்கமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அனைவருக்கும் தெரியும் .நல்லது இருந்தால் வாழ்த்துவேன். ஏதாவது குறை இருந்தால் அதையும் சொல்லி விட்டுச் செல்வேன்.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ்ப் படம் எடுப்பதில் ஆச்சரியம் இல்லை .அப்படி எடுத்து இந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளார்கள்.
இந்த பத்தாண்டுகளாக ஒரு ஐயாயிரம் பேர் நடுத்தெருவுக்கு வந்து இருப்பார்கள். ஆண்டுக்கு 200 படம் தயாரானால் 5 தயாரிப்பாளர்கள் தப்பிப்பதே பெரிய விஷயம்.

அதனால்தான் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுங்கள் என்று நான் கத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் மறுபடியும் படம் தான் எடுப்பான்.படமெடுத்து லாபம் வர வேண்டாம், முதலீடு வந்தால் போதும் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார்கள். அதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.இதனால் தொழில் நுட்பக் கலைஞர்கள் நடிகர்கள் நடிகைகள் வாழ்கிறார்கள். துணை நடிகர்கள் வாழ்கிறார்கள்.

இங்கே ஹேமந்த் மேனன் என்கிற நடிகர் வந்திருக்கிறார் .அவர் கேரளாவில் கதாநாயகனாக நடித்தவர் .இந்தப் படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். நம் ஊரில் இப்படி நடக்குமா?கதாநாயகன் ஆகிவிட்டால் வில்லனாக நடிக்க மாட்டார்கள் .விஜய்சேதுபதி மட்டும் விதிவிலக்கு. கதாநாயகன் ஆகிவிட்டால் இங்கே வில்லனாக நடிக்க மாட்டார்கள்.அவர்களால் நாலு தயாரிப்பாளர்கள் கீழே போய் இருப்பார்கள்.ஆனால் அவர்கள் இறங்க மாட்டார்கள்.

தமிழ்ப் படமே எடுக்க வேண்டாம் என்று வெறுத்துப்போய் விட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் , கேரளாவில் இருந்து தமிழ்ப் படம் எடுக்க வந்த உங்களை வணங்கி வரவேற்கிறேன்.

கேரளாவில் இருப்பவர்கள் தொழிலைத் தெய்வமாக மதிப்பவர்கள். கேரளாவில் மம்முட்டி ,மோகன்லால் என கதாநாயகர்கள் அத்தனை பேரும் சாதாரண தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள் . இங்கே அது நடக்குமா? கொஞ்சம் விட்டவுடன் கேரவானில் போய் உட்கார்ந்து கொள்வார்கள். நான் தயாரிப்பாளரிடம் கேட்டேன் இந்த படத்தில் எத்தனை கேரவான் பயன்படுத்தினீர்கள் என்று. அவர் இல்லவே இல்லை,ஒரு மாடி வீட்டில் தான் தங்கி இருந்தோம் என்றார் .

இங்கே இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை இல்லை. கதைசொல்லி விவாதம் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை இயக்குநர் தயாரிப்பாளரை மதிப்பார். படப்பிடிப்பு தொடங்கி விட்டால் கேமரா முன்பு நின்று விட்டால் இயக்குநர் தயாரிப்பாளரை மதிக்க மாட்டார் .

பணம் கொடுத்த தயாரிப்பாளர் ஐந்தாவது இடத்துக்குப் போய் விடுவார்.இயக்குநரும் போட்ட பட்ஜெட்டில் எடுப்பதில்லை. பட்ஜெட்டைத் தாண்டிப்போய்விடுவார்.
இந்தப்படம் இருபத்தி மூன்று நாட்களில் முடிந்துள்ளதைக் கேள்விப்பட்டதும் இயக்குநரைக் கட்டித் தழுவினேன். மாதக்கணக்கில் விவாதம் செய்து கொள்ளுங்கள் .படப்பிடிப்பு நாட்களை குறித்த நேரத்தில் முடியுங்கள் இதுதான் இயக்குநர்களுக்கு எனது வேண்டுகோள்.

நான் மம்முட்டிக்கு நன்றி சொல்கிறேன்.கேரளாவில் ஒரு டிவியில் நான் திருட்டு விசிடிக்கு எதிராகப்போராடி சிறை சென்றதைப் பற்றி எல்லாம் சொல்லி அதை மலையாளத்திலும் எழுதிக் காட்டுகிறார்கள். நான் தயாரித்த படங்களை எல்லாம் குறிப்பிடுகிறார்கள். அங்கே மம்முட்டி இது பற்றிச் சொல்கிறார்.இங்கே ஒருவனும் சொல்ல மாட்டான்.

இங்கே மேடையில் நிறைய கதாநாயகிகள் இருக்கிறார்கள். சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். எங்கள் தமிழ்ப் படத்தில் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகிகள் ஆடியோ விழாவுக்கு வர மாட்டார்கள். இன்றைக்கு நம்பர் ஒன்னாக இருக்கும் ஒரு கதாநாயகியிடம், ஏன் நீங்கள் உங்கள் படம் சம்பந்தப்பட்ட விழாவுக்குச் செல்வதில்லை என்று கேட்கிறபோது நான் போய் இந்த படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அந்தப் படம் ஓடாமல் தோல்வி அடைந்துவிட்டால் எனக்கு கெட்ட பெயர் வந்து விடுமே என்று சொல்கிறார். ஐந்து கோடி சம்பளம் வாங்கும் போது இது ஓடாத படம் என்று தெரியாதா?.
ஆனால் அவர் தயாரித்த சொந்தப் படத்திற்கு மட்டும் புரமோஷனுக்கு செல்கிறார். இது கேவலமாக இல்லையா?

இங்க இருக்கிற தமிழன் சரியில்லை .நான் முதலில் கேரளாவில் உள்ள தொழில் பக்தியைப் பாராட்டுகிறேன்.கேரளாவில் உள்ள தொழில் பக்தி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் அந்த சின்சியாரிட்டி , தயாரிப்பாளா வாழ வேண்டும் என்ற எண்ணம், அந்த மனப்பக்குவம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்.

இங்கே எத்தனை ஆயிரம் தயாரிப்பாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.இந்தக் கொரோனா காலத்தில் அவர்களைக் கண்டுகொண்டார்களா ? தொழிலாளர்கள் சங்கத்திற்கு அள்ளிக் கொடுத்தார்கள். நடிகர் சங்கத்துக்கு துணை நடிகர்களுக்குக் கொஞ்சம் கொடுத்தார்கள்.ஆனால் தயாரிப்பாளர்களை யார் கவனித்தார்கள்? தயாரிப்பாளர்கள் இல்லாமல் யாரும் கதாநாயகனாக ஆவது இல்லை .அஜீத் கூட எத்தனையோ கம்பெனிகளில் ஏறி இறங்கித்தான் இருப்பார். அதில் தவறில்லை ஆனால் மறக்கக் கூடாது.

கொரோனா காலத்தில் எல்லாருக்கும் கொடுத்தார்கள் . தயாரிப்பாளர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை. நான் அப்போது ரஜினி சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் அனுப்பி வைத்தார்.

இந்த மாதிரி பேய்ப் படங்களுக்கு மொழியே கிடையாது .அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.இந்த மாதிரிப் படங்களுக்கு பிரச்சினை கிடையாது. ஜெய்பீம் மாதிரி இதை எதிர்த்து யாரும் போராட மாட்டான்.

மனிதனைவிடப் பேய் மேல்.மக்கள் மனிதரைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போய் அதைவிட பேயே மேல் என்று கடவுளிடம் சொல்கிறார்கள். ஒரே விஷயத்தை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

நூறு கோடி இருநூறுகோடி முன்னூறு கோடிகளில் எடுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்? ஆனால் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு? சிறிய படங்களுக்கும் அதே 750 ரூபாய் தான் .இவ்வளவு கோடி பட்ஜெட் படங்களுக்கும் ஒரே சம்பளம் தான். பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடிகர்கள் சம்பளம் கேட்டு வாங்குவது போல் தொழிலாளர்களுக்கும் உயர்த்திக்கொடுக்க வேண்டும்.

அந்தப் பெரிய படங்கள் எடுத்தவுடன் வியாபாரமாகி விடும் . சிறிய படங்கள் வியாபாரமாகாது. இதற்கு கொடுக்கும் சம்பளம்தான் அதற்குமா?

” இவ்வாறு கே.ராஜன் பேசினார்.

விழாவில் படத்தின் நடித்துள்ள ஸ்ரீஜித், குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ராஜ், தயாரிப்பாளர் விநாயகா சுனில், ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜி, எடிட்டர் அஸ்வந்த் ரவீந்திரன், இசையமைப்பாளர் சங்கர் ஷர்மா, ஒப்பனைக் கலைஞர் அமல் தேவ், கதை எழுதிய ஷிபின் ,வசனம் எழுதியுள்ள அப்துல் நிஜாம், இயக்குநர்கள் ‘மகான் கணக்கு ‘ சம்பத் ஆறுமுகம் , விஜயபாலன்,ராஜ பத்மநாபன், திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தலைவர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவரையும் பி ஆர் ஓ சக்தி சரவணன் வரவேற்றார்.

Related posts

எதற்கும் துணிந்தவன் ( பட விமர்சனம்)

Jai Chandran

PaniKaatraai, Independent Music video Releasing this Friday

Jai Chandran

Krithi Shetty as Revath in Custody

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend