படம்: சிவகுமாரின் சபதம்
நடிப்பு: ஹிப் ஹாப் தமிழா,மாதுரி, இளங்கோ குமணன், ஆதித்யா கதிர், பிராங்க் ராகுல், பார்வதி, விஜய் கார்த்திக், ரஞ்சனா நாச்சியார், கோபால், மனோஜ், ஜூனியர் சக்தி, ராகுல், அண்ணாமலை.
தயாரிப்பு:ஹிப்ஹாப் தமிழாம் செந்தில்
தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன்
இசை: ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு: அர்ஹூன் ராஜா
இயக்கம்: ஹிப் ஹாப் தமிழா
காஞ்சிபுரத்தில் 50 வருடங்களுக்கு முன் ராஜபட்டு சேலைகள் பிரபலம். மன்னர் குடும்பத்துக்காகவும் கோவில் களுக்காகவும் ராஜபட்டு நெய்து தரும் பாரம்பரியம் மிக்கவர் வரத ராஜன்.காலப்போக்கில் அதில் வருமானம் குறையும் நிலையில் தங்களுக்கு பட்டு சேலை நெய்து தரும்படி நண்பர் சந்திரசேகர் கேட்டுக் கொண்டு ஒரு ஒப்பந்தம் போடுகி றார்.நெசவு தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதில் சந்திரசேகர் இழுத்தடிப்பு செய்யும் நிலையில் இனி சேலை நெய்து தருவதில்லை என்று வரதராஜன் கூறுகிறார். என்னிடம் ஒப்பந்தம் செய்திருப்பதால் என்னைத் தவிர வேறுயாருக்கும் சேலை நெய்யக்கூடாது அப்படி செய்தால் ஜெயில் தள்ளிவிடுவேன் என்று சந்திரசேகர் மிரட்டுகிறார். கோபம் அடைந்த வரதராஜன் தறி நெய்யும் வீட்டை இழுத்து மூடுகிறார். இந்நிலையில் வரதராஜனின் பேரன் சிவகுமார் வளர்ந்து ஆளாகி குடும்பத்தை காப்பாற்ற பாடுபடு கிறான். சந்திரசேகர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான்.சந்திரசேகர் மகளுடன் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கிறது. வரதராஜன் குடும் பத்துக்கும், சந்திரசேகர் குடும் பத்துக்கும் மீண்டும் மோதல் எழு கிறது. இந்த பிரச்னைக்கு முடிவு என்ன என்பதை சென்டிமென்ட்டாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.
ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாக மட்டு மல்லாமல் இயக்குனர், இசை அமைப்பாளர் தயாரிப்பாளர் என பல பொறுப்புக்களை ஏற்று இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
யூத்களின் ட்ரெண்டை கண்முன் நிறுத்தும் வகையில் பட்டர்பிளை மண்டைபோல் ஹேர் ஸ்டைல் வைத்து தனது இயல்பான நடிப்பால் உள்ளங்களை கொள்ளையடிக்கிறார்.
படத்தில் தாத்தாவாக நடிக்கும் இளங்கோ குமணன், பேரன் ஹிப்ஹாப் ஆதி இருவரும் அடிக்கடி சபதம் செய்கின்றனர். இதில் தறி ஏறுவதில்லை என்று தாத்தா செய்த சபதம்தான் மெயினாக உள்ளது.
ஹிப்ஹாப் தமிழா தனது சித்தப்பா ராகுல் பேச்சை கேட்டு சந்திரசேகர் நிறுவனத்தில் வேலைக்கு சேரச் சென்று ஹீரோயின் மாதுரியிடம் சிக்கிக் கொண்டு படும் அவஸ்த்தைகள் கலகலப்பு. கூடவே பூனையை மடியில் கட்டியதுபோல் தமிழாவுடன் வரும் ஆதித்யா கதிர் மாதுரியுடன் சேர்ந்துக்கொண்டு ஹிப் ஹாப் தமிழாவை கலாய்ப்பது வெடிச் சிரிப்பை வரவழைக்கிறது.
ஒரே பாட்டில் ஒஹோ பணக்காராகி சபதத்தை நிறைவேற்றுவிடுவாரோ என்று கிலியை ஏற்படும் நிலையில் அப்படி எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் தனது பாரம்பரிய ராஜபட்டு சேலைகள் நெய்து படிப்படியாக வளரும் தமிழா ஆறுதல் தருகிறார்.
பாடல் காட்சிகளில் செம ஆட்டம் போட்டு ஜமாய்க்கிறார் ஹிப் ஹாப்.
ஹீரோயின் மாதுரி கொஞ்சம் முறைப்பு,கொஞ்சம் காதல் என்று வேடத்தை நிறைவு செய்திருக்கிறார்.
வரதராஜன் தாத்தாவாக வேட மேற்றிருக்கும் இளங்கோ குமணன், தொழில் அதிபர் சந்திரசேகராக வரும் விஜய் கார்த்திக் இருவரும் கதையின் பிரதான பாத்திரங்களாக எதிரும்புதிரு மாக மோதிக்கொள்வது கதைக்கு வலு சேர்க்கிறது.
குமணன் கண்களை உருட்டி காட்டும் முறைப்பும் அதைக்கண்டு பயந்தும் பயப்படாததுபோல் நடிக்கும் விஜய் கார்த்திக்கும் நடிப்பில் போட்டி போட்டிருக்கின்றனர்.
யூ டியூப் பிரபலம் பிராங்க் ராகுல் கூட்டத்தில் காணாமல் போய் விடாமல் தனது மாறுபட்ட நடிப்பால் திரையுலகுக்கு புதுவராக தன்னை பதிவு செய்துகொண்டிருக்கிறார்.
கதை திரைக்கதை, வசனம் பாடல் கள், இசை, இயக்கம்,ஹீரோ என்று முக்கியமான பொறுப்புக்களை ஏற்றிருக்கும் ஹிப்ஹாப் தமிழாவின் கடுமையான உழைப்பு படத்தை உயர்த்தி பிடிக்கிறது.
பணம் இருந்தாலும் தன்னை சுற்றி நான்கு விசுவாசிகள் இல்லாவிட்டால் அந்த வாழ்க்கை பயனற்றதாகிவிடும் என்ற கருத்தை நெகிழ்ச்சியான காட்சிகளுடன் பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை பார்த்து ஒரு சில குடும்பங்களாவது பகையை மறந்து கைகோர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒளிப்பதிவாளர் அர்ஜூன் ராஜா ஜிகினா வேலைகள் செய்யாமல் காட்சிகளை யதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாக ராஜன் படத்தை வழங்குகிறார்.
சிவகுமாரின் சபதம்- குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய கலகலப்பான படம்.

